என் மலர்tooltip icon

    வேலூர்

    தமிழக அரசு கடனில் தத்தளிப்பதாக வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திவாலான அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. இவ்வளவு கடன் உள்ள அரசாங்கத்தால் எந்த சமூகநலத்திட்டத்தையும், பொதுத்திட்டத்தையும், குடிநீர் பிரச்சனை திட்டத்தையும், சாலை வசதி திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் வருமானத்தை மீறிய கடன்.

    எனவே அந்த அரசாங்கத்தை நம்பி வேறு யாரும் உதவி செய்ய வரமாட்டார்கள். கடனில் இந்த அரசு இயங்குகிறது. ஆனால் இதுகுறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலங்க மாட்டார். ஏனென்றால் கடன் அரசாங்கத்துக்கு தான் உள்ளதே தவிர, ஆளுகிறவர்களுக்கு அல்ல. எனவே இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் நீட் தேர்வு போன்றவை சமூக நீதி பிரச்சனையாகும். நீட்தேர்வில் வசதியானவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வெற்றிபெறும் சூழ்நிலை காணப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    நவோதயா பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து தமிழகத்தில் அப்பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து தமிழகத்தில் முடிவு செய்யப்படும். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    பிரதமர் வேட்பாளராக கருதிய ராகுல் காந்தி தற்போது காணாமல் போய்விட்டார் என்று ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு பதவிகளை அனுபவித்தவர் ஜி.கே.வாசன். அவர் மாநில தலைவராக இருந்தபோது காங்கிரஸ் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினை விமர்சிக்க ஜி.கே.வாசனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரெயில் இன்று புறப்பட்டது.

    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றால்தான் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

    இதனால் கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

     

     ரெயிலில் தண்ணீர் நிரப்பப்படும் காட்சி

    இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. உடனடியாக அதில் நீர் நிரப்பும் பணிகள் நடந்தன. பின்னர் நீர் அளவீடு செய்யப்பட்டது. குடிநீரின் தரமும் ஆய்வு செய்யப்பட்டது. 50 வேகன்களில் 2.5 மில்லியன் தண்ணீர் நிரப்பப்பட்டது.

    இதையடுத்து மெட்ரோ அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இன்று மாலை வில்லிவாக்கத்தை அடையும். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சப்ளை செய்யபட உள்ளது.

    முதல் ரெயில் இரவில் இயக்கப்படுகிறது. 2-வது ரெயில் காலையில் இயக்கப்படும். 2-வது ரெயில் இயக்கத்தை பார்த்துவிட்டு மேலும் ஒரு ரெயில் இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதற்றமான 179 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட உள்ளது.
    வேலூர்:

    வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை செய்யப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 105 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 95 பேர் இறப்பு காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 5,564 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 715 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில், 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் 7,552 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். அவர்களுக்கு, முதல்நிலை பயிற்சி முடிக்கப்பட்டு, 2, 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதி செய்யும் 2,099 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதும் 75 பறக்கும்படைகள், 39 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் முறைகாக பணியாற்றுகிறார்களா? என்று ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 48 புகார்கள் வந்துள்ளன.

    அதில், 22 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,034 போலீசார் தங்கள் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்ய உள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 6,038 பேர் தங்கள் வாக்குகளை இ.டி.பி.பி.எஸ். என்ற எலக்ட்ரானிக்கல் டிரான்ஸ்மிட்டன் போஸ்டல் பேலட் சிஸ்டம் மூலம் செலுத்த உள்ளனர்.

    தேர்தல் பிரசாரத்துக்கு வரும் நட்சத்திர பேச்சாளர்கள், வெளியூர் பிரமுகர்களை கண்காணிக்க பறக்கும்படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

    10 நாட்களுக்குள் பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும். அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்க கூடாது பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார்.

    2 பேர் ஜாமீன் மற்றும் வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களை நளினி சமர்ப்பித்துள்ளார்.

    இதற்கிடையில், நளினி கடந்த 16-ந் தேதி பரோலில் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வரவில்லை. இன்று பரோலில் வெளியே வருவார் என்று கூறப்பட்டது. அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    10 நாட்களில் நளினியை பரோலில் விட வேண்டும் என கோர்ட்டு விதித்த கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. இதற்கு பிறகும் அவர் வெளியே வராதது நளினி குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    கதிர் ஆனந்த் - ஏசி சண்முகம்

    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

    2. டி.எம். கதிர் ஆனந்த் - தி.மு.க.

    3. தீபலட்சுமி- நாம் தமிழர் கட்சி.

    4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்- பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

    5. வி.சேகர்- ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

    6. ச.திவ்யா- தேசிய மக்கள் கழகம்.

    7. நரேஷ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி.

    8. பேராயர் காட்பிரே நோபுள்- தேசிய மக்கள் சக்தி கட்சி.

    9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

    10. விஜய் பவுல்ராஜா- ரிபப்ளிக்கன் சேனா.

    மேலும் 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

    வேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

    தேர்தலின் போது பிரச்சனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர். மேலும் பட்டியலில் உள்ளவர்களை தேடிவருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக 369 ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 35 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயலில் அடைக்கபட்டனர்.

    தேர்தலின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியபட்டால் அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆம்பூர் அருகே கிணற்றில் பாறை சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    மாதனூர் அடுத்த பாலூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது விவசாய நிலம் கிணறு உள்ளது. விவசாய நிலத்தை ஆழப்படுத்துவதற்காக நேற்று கிணற்றுக்குள் இருந்த பாறைகளுக்கு வெடி வைத்தனர்.

    இன்று காலை ராமமூர்த்தி, மாதனூர் அடுத்த பட்டுவாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (48), உள்பட 5 பேர் கிணற்றுக்குள் இறங்கி வெடி வைத்து தகர்த்த பாறைகளை கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பக்கத்தில் இருந்த பாறை சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. செல்வராஜ் பாறையின் அடியில் சிக்கி உயிருக்கு போராடினார். கிணற்றில் இருந்தவர்கள் உடனடியாக மேலே வந்து மேலும் சிலரை அழைத்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பாறையை அகற்றி மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை மீட்டனர்.பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாதனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராஜ் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜ் இறந்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் செல்வராஜ் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு ராமமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    பேரணாம்பட்டில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டி அரசினர் ஆதிதிராவிடர் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 286 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காகவும், இயற்கை உபாதைக்காகவும் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

    இதுகுறித்து ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆந்திரமடைந்த முன்னால் ஆசிரியர் சவுந்திர பாண்டியன், அ.தி.மு.க. நகர துணை தலைவர் சிவாஜி, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி முனிரத்தினம் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி முன்பாக திரண்டனர்

    பள்ளிக்கு வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி பள்ளியின் கேட்டுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியை கலைவாணி, பேரணாம்பட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என கூறினர். இதனை ஏற்காத பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தன போக்காக இருந்து விட்டனர்.

    எனவே ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மாணவர்களும் பள்ளிக்கு செல்லாமல் வெளியிலேயே காத்திருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம் பாடி அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் வெள்ளிக் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    இந்த நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி சரடு மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றனர்.

    உண்டியலை கோவில் அருகில் உள்ள நிலத்தில் வீசி சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊர்பொதுமக்கள் கோவில் அருகே திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலம் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்த நிலையில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேலூர் தொகுதியில் வெற்றிக்கனி பறிப்போம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    முழுமையான வெற்றியை தி.மு.க.வும் கூட்டணியும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுபழி போட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வைக் குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அது டெங்குக் காய்ச்சல் தொற்று போலப் பரவிப் பாதிக்கும் என நினைத்து மத்தியமாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தைக் கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தம்.

    வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? ‘யாமறி யோம் பராபரமே’ என்ற பூஜைதான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியைக் கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.

    இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜன நாயக முறையில் மாற்றிக் காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.

    தி.மு.க.வின் சார்பில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராதரவுடன் தம்பி கதிர் ஆனந்த் களம் காண்கிறார். கழகத்தின் மீது மீண்டும் ஏதாவது அவதூறு பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மைப் பணி.

    37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றிக்கோட்டை யாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் என்று திருப்பத்தூரில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் பி.கணேஷ்மல் தலைமை தாங்கினார். குங்குமம் ஜி.குமரேசன், சி.கே.டி. முரளி, ஜி.ஆர்.சாமிசெட்டி, ஒய்.டி.கிருபானந்தன், கே.எம்.சுப்பிரமணியம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.சி.எழிலரசன் வரவேற்றார். விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசியலின் அடி நாதமே மக்கள் தான். அதை உணர்ந்து செயல்பட்டவர் காமராஜர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மக்கள் நீதி மய்ய தலைவனாக இல்லை. காமராஜரின் தொண்டனின், ரசிகனின் மகனாக கலந்து கொண்டிருக்கிறேன். அவரது மடியில் வளர்ந்தவன் நான். எங்களுடைய வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்திருக்கிறார்.

    அவர் எந்த வீட்டு பிள்ளையாக இருந்தாலும் கேட்கக்கூடிய கேள்வியை என்னிடமும் கேட்டிருக்கிறார் ‘நன்றாக படிக்கிறாயா?’ என்று, அப்படிப்பட்டவர் கேட்டும் நான் படிக்கவில்லை.

    ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் எனது மாமா வீடு உள்ளது. அங்கு நான் வந்ததில்லை. இவ்விழாவில் கலந்து கொள்ள முதன் முதலில் வந்திருக்கிறேன். இது உறவையும் மீறிய நிகழ்வு. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச இடம் இல்லை. இருப்பினும் அவர் கண்ட அற்புத கனவை யாரும் கலைத்து விடக் கூடாது என்பதை இங்கு கூறியாக வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அற்புதத்தை செய்தவர் காமராஜர். அப்படிப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டும் தான் என்ற நிலைக்கு சென்று விடக்கூடாது. காமராஜர் கல்வியில் அற்புதத்தை செய்தார் என்றால் அது அவரது தனிமனித உத்வேகமாக இருந்தது. அன்று கல்வி மாநில அதிகாரத்துக்குட்பட்டிருந்தது.

    நம்நாட்டில் வேற்றுமைகள் நிறைய உண்டு. அந்த கலப்பு தான் இன்றும் நிலைத்திருக்கிறது. நாட்டை முன்னேற்றியிருக்கிறது. அதன் எதிரொலியாக தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். இதை நடத்துபவர் வட மாநிலத்தில் இருந்து வந்தவர். இந்த கலப்பை பிரிக்க நினைத்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் கெடுதல் தான்.

    இந்த விழாவை தடை செய்ய நினைத்தார்கள். இடம் தான் மாறியிருக்கிறது. நிகழ்ச்சி மாறவில்லை. அவர்கள் எதிரிகள் இல்லை. ஆனால், மக்களுக்கு நன்மை கிடைப்பதை தடை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் விரோதிகள் தான். எனக்கு காமராஜரையும், பெரியாரையும் நிறைய பிடிக்கும். எந்த இடத்திலும், எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்த்தாலும் என்னுடைய தலைவன் யார்? என்பதை சொல்லும் தைரியம் எனக்கு உண்டு. நான் காந்தியின் தொண்டன் இல்லை, ரசிகன். காமராஜர் போன்ற தலைவர்கள் இனி கிடைக்க மாட்டார்கள். அவரை கிங் மேக்கர் என்பார்கள், அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது.

    அவரை கன்ட்ரி மேக்கர் (நாட்டை உருவாக்குபவர்) என்று தான் சொல்லுவேன். நாட்டை உருவாக்கும் சிற்பி அவரைப் போன்ற பல சிற்பிகள் சேர்ந்து இந்த நாட்டை செதுக்கியிருக்கிறார்கள். நாம் சாதாரணமானவர்கள் இல்லை. அவர் போன்ற நல்ல தலைவர்களாக மாறுவோம். நாம் நன்மையை நோக்கி நகர வேண்டும், அது தானாக வெற்றியை தேடித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    குடியாத்தத்தில் லாரிகளில் கொண்டு வந்த ரூ.4 லட்சம் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி 74 பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் பாக்கம் பகுதியில் கூடுதல் பறக்கும்படை அதிகாரி வேல்முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று கால சோதனை நடத்தினர்.

    அப்போது சித்தூரில் இருந்து வந்த லாரியை மடக்கினர். கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 45). ஓட்டி வந்தார். அவரிடம் ஆவணம் இல்லாத ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது.

    பரதராமியில் பிளாஸ்டிக் சேர்கள் இறக்கிவிட்டு அதற்கான பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    குடியாத்தம்-வேலூர் மெயின் ரோட்டில் வேப்பூரில் பறக்கும்படை அதிகாரி சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர்.

    வேலூரில் வந்த மினி லாரியை மடக்கினர். அதில் வந்த அரக்கோணம் வியாபாரி யூனிஷ் (37) என்பவரிடம் ரூ.89 ஆயிரத்து 500 இருந்தது அவர் வி.கோட்டா பகுதிக்கு தக்காளி வாங்க செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யபட்ட பணம் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைக்கபட்டது.
    ×