என் மலர்
திருப்பூர்
- சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளப்பாளையம் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வந்தோம். தற்போது வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை 3ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன்,
ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2-வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமிகவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம்,
ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என்., புரம் ஒரு பகுதி, கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
- தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தபால் துறை சார்பில், தமிழக அஞ்சல் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உபகோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்றது.
இதில் திருப்பூர் அஞ்சல் கோட்டம் கடந்த நிதியாண்டில் இந்திய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.3 கோடியோ 9 லட்சம் பிரீமியம் ஈட்டி 2-ம் இடமும், கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 கோடியோ 81 லட்சம் பிரீமியம் ஈட்டி 3-ம் இடமும், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில் அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில் ரூ.54 லட்சம் வருவாய் ஈட்டி தமிழக அளவில் 2-ம் இடமும் என 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.
பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி கடந்த 2023-24 நிதியாண்டை காட்டிலும் 96 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஐ.பி.பி.பி. பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிதியாண்டில் கோட்ட வாரியாகவும், உட்கோட்ட வாரியாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு உள்பட மொத்தம் 9 விருதுகளை திருப்பூர் அஞ்சல் கோட்டம் பெற்றுள்ளது.
- மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
- அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
- அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், பாதிப்புகளை சரிகட்ட மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி பாதி ட்ரம்ப் பாதி இருக்கும் முகமூடி அணிந்து கட்சியினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி.
- கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி. நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார் .
மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷியா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது. அவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு விற்பனை செய்யாமல் ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பயன் இல்லை.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும். மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது. வெறும் ஜவுளி மட்டும் அல்ல. இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை . ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., பருப்பு வேகவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்றார்.
- நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.
- வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்ற வாலிபர்களை விரட்டி பிடித்து நடுரோட்டில் இளம்பெண்கள் முத்தமழை பொழிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது ஏதோ வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் நடக்கவில்லை. திருப்பூரில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே 2 வாலிபர்களும், இளம்பெண்களும் நள்ளிரவில் நடந்து சென்றனர்.
அப்போது திடீரென ஒரு இளம்பெண் சத்தமாய் 'ஏய்... ஓடாத... ஒரு நிமிஷம் நில்லு.. ஒரு முத்தம் தாரேண்டா வாங்கிக்கோ!' என்று தன்னுடன் வந்த வாலிபரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை அந்த இளம்பெண் விடவில்லை. விரட்டி, விரட்டி அவரை மடக்கி பிடித்து காதல் வசனம் பேசி மயக்கினார். இதேபோல் இன்னொரு இளம்பெண்ணும், வாலிபரை நெருங்கி வந்தார்.
நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. அந்த காட்சியை சிலர் பார்த்த போதிலும், மூன்றாவது கண் என்று அழைக்கப்படுகிற கண்காணிப்பு கேமராவிலும் அந்த காட்சி பதிவானது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த அத்துமீறலில் ஈடுபட்டது காதல் ஜோடியா? அல்லது அழகிகளின் அட்டூழியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேலை விஷயமாக திருப்பூருக்கு படையெடுத்து வரும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் கூட்டம் ஒன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் இரவு நேரங்களில் சுற்றி வருவதாக புகார் கூறப்படுகிறது. விபசார அழகிகள் சிலர் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் டிப்டாப் உடை, மேக்அப்புடன் வலம் வந்து இளைஞர்களை தங்களது முத்த வலையில் சிக்க வைக்கின்றனர். ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட், சுடிதார் என விதவிதமான உடையுடன் காட்சியளிக்கும் இவர்கள் பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளில் ஆங்காங்கே நிற்கின்றனர். வேலைதேடிவரும் இளைஞர்களை குறி வைத்து நிற்கும் இவர்கள் புதியதாக வரும் இளைஞர்களை மடக்கி பேச்சுக்கொடுக்கின்றனர்.
புதியதாக வரும் வாலிபர்கள், மசியாத பட்சத்தில் அதிரடியாக கட்டியணைத்து முகமெங்கும் முத்தம் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்களை மடக்கி விடுதி அறைகளுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்க செய்து கணிசமான பணத்தை கறந்துவிட்டு வெறுங்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.
இத்தகைய அழகிகளின் செயல்களுக்கு மயங்காத இளைஞர்கள் சிலர் அவர்களது பிடியிலிருந்து தப்பி பயந்தும் ஓடுகின்றனர். அவர்களை அழகிகள் விரட்டியும் செல்கின்றனர். இவை திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் அன்றாடம் அரங்கேறி கொண்டிருக்கும் அவலம் தான் என்றும், இது போலீஸ் துறைக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் உள்ளூர்வாசிகள் புலம்புகின்றனர்.
- கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
- வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.
திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
- ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
திருப்பூர்:
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதி க்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90ம் ஆண்டுகளில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது.
இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஏற்றுமதியை நம்பி சிலநூறு பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி ஒரு மாதமாக இருந்து வந்த நிலையில், இன்று (27-ந்தேதி) முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பின்னலாடை ஏற்றுமதிக்கான ஆடைகளை பழைய விலையில் பெற்று விற்பது என்பது அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு இயலாத விஷயமாகி விட்டது.
அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பின்னலாடை ஒன்றை 10 டாலருக்கு விற்ற ஒரு இறக்குமதியாளர், டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக இன்று முதல் அதை 16 முதல் 18 டாலர் மதிப்பில் தான் விற்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது போல, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
50 வரி விதிப்பு மூலம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும்.மேலும் அமெரிக்காவின் 50 சதவீத அதீத வரி திருப்பூர் பின்னலாடைத்தொழிலை நேரடியாக பாதிப்புக்கு ஆளாக்கும் என்பது உண்மை. சில நிறுவனங்கள் நேரடியாகவும், சில நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பாதி உற்பத்தியில் இருக்கக்கூடிய ஆடைகள் நிலை குறித்து இறக்குமதி வர்த்தகர்களிடம் பேசி வருகிறோம்.
இரு தரப்பும் இந்த வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை பரஸ்பரம் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பேசி வருகிறோம். இந்த நிலை நீடித்தால் மாதத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், அமெரிக்கா நம் மீது விதித்துள்ள வரியால் போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும். ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வது, அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற விஷயங்கள் நடைபெற வேண்டும். அரசு சலுகைகளும் வழங்க வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. திருப்பூர் பின்னலாடை துறையில் உள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை முன்வைத்து நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனிடையே அமெரிக்காவால் ஏற்பட்ட பாதிப்பை சரி கட்ட ஐரோப்பா, அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடைகளை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுக்க திருப்பூர் உற்பத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
- எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.
எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
- மகளை இழந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.
மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்... நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படி என்று நினைக்கும் போது,வருத்தமாக இருக்கு. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கான நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றார்.
- காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
காங்கயம்:
காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று காங்கயம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






