என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார்.
    • முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் இந்த ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கல்லம்பாளையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரெயில் அருகில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார்.

    இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் அவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாலையா (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது.
    • தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக்கொள்கை, ஒரே ரேஷன் கார்டு என்பது இன்றைய நாட்டின் நிலையாக உள்ளது. இந்திய இறையாண்மை, நாட்டுப்பற்று என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் பேசுவார்கள். ஆனால் கர்நாடகா என்று வந்துவிட்டால் கர்நாடக மக்களின் நலனை பற்றியே பேசுவார்கள்.

    ஆனால் இங்குள்ள திராவிட கட்சிகள், பாராளுமன்ற தேர்தலில் இந்திய நலனை பற்றி பேசுவார்கள். இந்தியாவை காப்பாற்ற வாருங்கள் என்பார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பார்கள். இவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள் தான் பறித்தார்கள். தமிழ்சமூக மக்கள் இந்த நாடகத்தை அறிய வேண்டும். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது. 10 ஆண்டு ஆட்சி நடத்திய பா.ஜனதா சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மகளிருக்கு ரூ.1,000 கொடுத்ததை தவிர வேறு எதையும் சொல்லி தி.மு.க. ஓட்டுக்கேட்க முடிகிறதா. சாதி, மதம், கடவுளை வைத்து பேசியவர்களை இந்த மக்கள் துரத்தியடிக்கும் காலம் வரும். மக்களுக்கு நீரும், சோறும் கொடுக்க எந்த ஒரு திட்டமும் இவர்களிடம் இல்லை.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து தான் ஊழல், லஞ்சத்துக்கான விதை ஊன்றப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதித்தால் இவர்கள் பணம் கொடுப்பார்களா?. மாற்று அரசியலுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    • மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • சின்னங்கள் மற்றும் நோட்டா என 14 சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூர் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேரின் பெயர், சின்னங்கள் மற்றும் நோட்டா என 14 சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றது.

    • எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் அமைந்துள்ள அம்மா திடலில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி.
    • கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.

    தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.

    விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர். 

    • அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம்.
    • பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் வழியெங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம். கோவையில் தி.மு.க. வெற்றிப்பெற்ற பிறகு 'மட்டன் பிரியாணி' போடப்படும் என எதிர்க்கட்சியினர் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. மீம்ஸ்களில் அண்ணாமலையுடன் ஆட்டுக்குட்டி படத்தை இணைத்து டிரோல் செய்வது வழக்கம். இதுகுறித்து அண்ணாமலை முன்பு ரியாக்ட் செய்தார். நாளடைவில் இந்த மீம்ஸ் பற்றி அவர் கண்டுக்கொள்வதில்லை.

    இந்நிலையில் பல்லடம் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டிருந்த போது அவருக்கு விவசாயி ஒருவர் அன்பு பரிசாக ஆட்டுக்குட்டி ஒன்றை வழங்கினார். அதனை ஆசையோடு வாங்கிய அண்ணாமலை, குட்டி ஆடு என்பதால் அதனை தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என தெரிவித்தார். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அதனை பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    • காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி சித்ரா (57). இந்த தம்பதியர் மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்று 60-ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன், திருக்கடையூர் சென்று 60-வது கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.

    சந்திரசேகரனின் 2-வது மகன் இளவரசன் (26) காரை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள ஓலப்பாளையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் சந்திரசேகரன், அவரது மனைவி சித்ரா, சந்திரசேகரனின் மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தியான 3 மாத பெண் குழந்தை ஷாக்ஷி, காரை ஓட்டி வந்த 2-வது மகன் இளவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

    காரில் வந்த சந்திரசேகரனின் மூத்த மகன் சசிதரன் (30) என்பவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, காரை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

    காரின் அருகே உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வந்த சாமி படங்கள், பூஜைப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
    • வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.

    அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (வயது 94) என்பவரது வீட்டிற்கும் நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் கொண்டு வந்த தபால் வாக்குப்பதிவு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில் நேற்று தாயம்மாள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

    பல்லடம்:

    தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இதைப்பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய வரவே பயமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.

    பின்னர் அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×