என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த 'சில்லி ஸ்பிரே'யை அருகில் இருந்தவர்கள் முகத்தில் அடித்துள்ளான். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

    உடனே அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோவில் பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது சிறுவன் தனது சொந்த ஊர் திருப்பூர் எனவும், தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்ததாக கூறியுள்ளான்.

    அப்போது அவனுடன் இருந்த மற்ற சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவலை கூறினர்.

    உடனே கோவில் நிர்வாகம் கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுவர்கள் தாங்கள் பயன்படுத்திய 'சில்லி ஸ்பிரே' அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனர். அதில் ஒரு சிறுவனின் தாய் கோவிலில் பக்தர்களிடம் யாசகம் பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார். உடனே போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காருக்கு அடியில் கிடந்து எடுத்ததாக கூறிய அந்த 'சில்லி ஸ்பிரே' கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை ஏமாற்றி நகை, பணத்தை பறிப்பதற்காக யாரேனும் மர்மநபர்கள் கொண்டு வந்தார்களா? அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்ததை யாரேனும் விட்டுச் சென்றார்களா? அது சிறுவனின் கைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    சென்னை அருகே பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

    மேலும் முஸ்பிக் ஆலம் தற்போது தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி பகுதியில் தங்கி அங்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருவதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார். அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். முஸ்பிக் ஆலமின் செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் அவருடன் நெருங்கி பழகிய 3 பீகார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரிடமும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளும் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 4 பேரிடமும் போலீஸ் கண்காணிப்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
    • கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடல் பொதுவாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட் களில் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பாக நடந்து வருகிறது.

    அந்த வகையில் பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அதன்மீது பக்தர்கள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது. ஆனால் கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர். 

    • திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
    • இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இதனால் இன்று கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றிக்காக பக்தர்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் இன்று கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
    • ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது.

    4-ந் தேதி தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என தங்களுக்கு ஏற்றவாறு என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.

    தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதியில் தங்கி உள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.

    தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து இதனை வாங்கிசெல்வதால் பாசி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் தினசரி குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    • இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்வின்பிரபு நிருபரிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது.

    தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரு கன்டெய்னரில் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும். அதை விட வரி மிகவும் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட கன்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த கன்டெய்னர்கள் அமெரிக்காவை சென்றடைய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும். அதுவரை ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    அதன்பிறகும் ஏற்கப்படாதபட்சத்தில் அந்த கன்டெய்னர்கள் மீண்டும் கொண்டு வரப்படும். அதுவரை காத்திருக்கிறோம். அந்த கடல் உணவு வேறு நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அந்த கன்டெய்னரை பிரித்து, அதில் வேறு நாட்டுக்கு உரிய முறையில் 'பேக்கிங்' செய்ய வேண்டும். இது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
    • தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

    மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாடு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.

    இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

    தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.

    தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

    கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள்.

    மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன.
    • கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார்.

    அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது முதலில் விதித்த 25 சதவீத வரி கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த வரி நேற்று முதல் அமலாகியது. இவ்வாறு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், எந்திர தயாரிப்பு, கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இறால், கணவாய், பனாமின் போன்ற கடல் உணவுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இறாலின் பங்கு 40 சதவீதம் ஆகும். தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி ஆகி இருந்தது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.

    இதுகுறித்து கடல் உணவு உற்பத்தி நிறுவன ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,

    வன்னாமி இறால்களில் 60 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்கின்றன. தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் அங்கு செல்ல 45 நாட்கள் ஆகும். வழக்கமாக ஒரு மாதத்திற்கு 50 கொள்கலன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், இதில் பாதியளவு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும். தற்போது ஏற்றுமதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
    • இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.

    இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.

    கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

     

    ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.

    தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • 11-ம் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.

    8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலை 7.20 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்அதிர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    11-ம் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் 12-ம் திருவிழாவில் இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
    • பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.

    இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை.

    எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×