என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடியில் கனமழையால் வெள்ளக்காடான சாலைகள் - மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது
- கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
- விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டிய பகுதிகளான கோரம் பள்ளம் காலங்கரை மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படா ததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை, கோரம்பள்ளம், அந்தோணி யார்புரம், காலங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி குமரன் நகர், முருகன் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதேபால தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






