என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேதமடைந்த தற்காலிக கூரைகள் - அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்திற்குள் புகுந்த மழைநீர்
- மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
- மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தோண்டப்பட்ட குழிகளில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் மட்டுமல்லாமல் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதை பாதுகாக்க தற்காலிகமாக கூரைகள் அமைக்கப்பட்டது. இந்த கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது. எனவே மழை காலத்திற்கு முன்பு அதை அகற்றி புதிய கொட்டகை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரையில் உள்ள சேதமடைந்த பகுதி வழியாக அகழாய்வு குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர். ஆனால் அந்த பொருட்களிலும் நீர் நிரம்பி தொல்லியல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து வருவது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






