என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் ரூ.4,460 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடி வடைந்து பெரும்பாலானோர் தங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.இதனால் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது.

    வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்டு ரூ.4,460 வரை விற்பனையாகிறது. இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ் டிக்கெட் விலை சாதாரண நாட்களில் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,200 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
    • விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    பொதுமக்கள் பிறப்புச் சான்று, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை எளிமையாக பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாளை பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முயற்சியில் ஆயுதப்படை மைதானம் எதிரே அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இ- சேவை மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த சேவை மையம் மூலம் பிறப்பு சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, விதவை சான்று உள்பட 31 வகையான சான்றிதழ்களுக்கு இங்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, கதிஜா இக்கலாம் பாஷிலா, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், கந்தன், பேச்சியம்மாள், தச்சை பகுதி பொருளாளர் அய்யாசாமி பாண்டியன் மற்றும் வல்லநாடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி, நாகராஜன், மேகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், இளை ஞர் அணி பிரபாகரன், ஜெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரத் ஆனந்த், மாநில மாணவரணி துணை செய லாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை சத்யா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையிலும், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி சார்பில் நிறுவன தலைவர் வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்கம் மகேந்திரன், மாநகர செயலாளர் துரைப் பாண்டியன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் பச்சையப்பன், லட்சுமி, நந்தினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பவிதாவுக்கும், வெற்றிவேல் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் பூமிநாதன் மகள் பவிதா (வயது29). இவருக்கும், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெற்றிவேல் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இதனால் பவிதா, ராமகிருஷ்ணாபுரத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் வெற்றிவேலுக்கும், பவிதாவிற்கும் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பவிதா வன்னியன்குடியிருப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து செல்போனுடன் சென்ற பவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பவிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது தாயார் சாந்தி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி மாயமான பவிதாவை தேடி வருகிறார்.

    • தனது மனைவியின் நடத்தையில் அகிலன் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்(வயது 38). மீனவர். இவரது மனைவி ரேஷ்மி(31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கொலை

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அகிலன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் ரேஷ்மி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நேற்று மதியம் சமாதானப்படுத்தி மீண்டும் ரேஷ்மியை கணவர் வீட்டில் அவரது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர். மாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக உவரி போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தர வின்பேரில் தலைமறைவான அகிலனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை மகாராஜ நகர் வேலவர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 54). இவர் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்று விட்டார். இந்நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார். இன்று காலை அங்கிருந்து நெல்லைக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மேலும் அதே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக அவர் ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
    • தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார்.

    இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார்.

    எப்போதாவது போன் செய்து வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணி டம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது.
    • 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் பெய்த மழையால் நேற்று அதன் நீர்மட்டம் 73.75 அடியாக இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 2,906 கனஅடியில் இருந்து 6,206 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 80.50 அடியானது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பலத்த மழையினால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அந்த அணையின் நீர் இருப்பு 87.20 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 104.07 அடியானது. இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 17 அடி அதிகரித்தது.

    இதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அந்த அணை நீர்மட்டம் 46.65 அடியாக உள்ளது. 52.50 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சில மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. களக்காட்டில் 11.20 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊத்து எஸ்டேட்டில் நேற்று முழுவதும் நள்ளிரவு வரையிலும் பலத்த மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 10.5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 90 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 47 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நேற்று இரவு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அருவிக்கரைகளில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குண்டாறு அணை பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழியும் நிலையில், இன்று காலை அணைக்கு வரும் 110 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 99 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 அடி அதிகரித்து 103.50 அடியாக உள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது. அந்த அணை பகுதிகளில் முறையே 12 மற்றும் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பலத்த மழை கொட்டியது. செங்கோட்டையில் 40.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ஆய்குடியில் 26 மில்லிமீட்டரும், தென்காசியில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

    • நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.
    • பொது மக்களுக்கு மஞ்சபைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    பிரதமர் மோடி வேண்டு கோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை பணிகள்

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1-ந்தேதி இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஊராட்சிகள் முழுவதும் தூய்மைப் பணிகள் நடை பெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலை வர்கள் பங்கேற்று அருகில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்று கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தினர்.

    கலெக்டர் பங்கேற்பு

    பாளை யூனியன் ரெட்டி யார்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய ல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை நிகழ்வு இன்று தொடங்கி வைக்க ப்பட்டது. நாம் வசிக்கும் கிராமம் மற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் தூய்மையாக வைத்து இருக்கும் பட்சத்தில் கிராமம் தூய்மையாகவும், நாடு தூய்மையாகவும் இருக்கும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை சேகரிக்க வருவோர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது இருப்பிடத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இருப்பிடங்களில் மழைநீர் தேங்காமலும், டெங்கு கொசு வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பொது மக்களுக்கு மஞ்ச பைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இதில் பாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், பாலசுப்பிர மணியன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், செயலர் சுப்புகுட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    இதேபோல் நெல்லை மாநகராட்சி யிலும் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக காலையில் தூய்மை பணிகள் நடை பெற்றன.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினை விடத்தில் தூய்மை ப்படுத்தும் பணி நடை பெற்றது. இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல ஒண்டிவீரன் மணி மண்டப வளாகத்தில் நடந்த தூய்மை பணியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள வளாகத்தில் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த தூய்மை பணிக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இந்த மெகா தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவர்களும், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மற்றும் கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 40 பேரும் பங்கேற்ற னர்.

    தொடர்ந்து மருத்துவ மனை வளாகத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் கலந்து கொண்டனர்.

    • அன்னலெட்சுமி மருதகுளம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • ஒட்டலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.4,500-ஐ திருடி சென்று விட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் மனைவி அன்னலெட்சுமி (வயது 51). இவர் மருதகுளம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவில் வியாபாரம் முடிந்த தும், அன்னலெட்சுமி ஓட்ட லை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் மர்ம நபர்கள் ஒட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த ரூ.4ஆயிரத்து 500-ஐ திருடி சென்று விட்டனர்.

    மறுநாள் காலையில் ஓட்டலை திறக்க வந்த அன்ன லெட்சுமி, ஒட்டலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி ஓட்டலில் பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் லெட்சுமி புரம் உள்ளது.

    இந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து, சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொன்று வீசப்பட்டாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் இன்று முதல் 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் இன்று சுமார் 45 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார மற்றும் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உடல் வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 10 மொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மொபைல் வாகனத்திற்கு 3 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி 10 வாகனங்கள் மூலமாக 30 இடங்களில் முகாம் இன்று நடக்கிறது. இந்த வாகனங்கள் வட்டாரத்துக்கு 3 இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக 4 மண்டலங்களும் சேர்த்து 12 முதல் 15 முகாம்கள் வரை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிவில் காய்ச்சல் அதிக அளவில் கண்டறியப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாம் வடகிழக்கு பருவமழை முடியும் வரை நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளதா? என்பது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×