search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 45 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்- மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
    X

    ரெட்டியார்பட்டியில் நடந்த காய்ச்சல் கண்டறியும் முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 45 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்- மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்

    • டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் இன்று முதல் 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் இன்று சுமார் 45 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார மற்றும் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உடல் வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 10 மொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மொபைல் வாகனத்திற்கு 3 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி 10 வாகனங்கள் மூலமாக 30 இடங்களில் முகாம் இன்று நடக்கிறது. இந்த வாகனங்கள் வட்டாரத்துக்கு 3 இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக 4 மண்டலங்களும் சேர்த்து 12 முதல் 15 முகாம்கள் வரை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிவில் காய்ச்சல் அதிக அளவில் கண்டறியப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாம் வடகிழக்கு பருவமழை முடியும் வரை நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளதா? என்பது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×