என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம்.
    • அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.

    திருச்சி:

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, பாராட்டு விழா மேடையில் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்படாததால் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் பங்கேற்காதது அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம். இந்தமுறை சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது என்று தான் கூறினேன். அந்த தொகுதியை குறிப்பிட்டு மட்டும் தான் பேசினேன். மற்றபடி நான் வேறு எதுவும் பேசவில்லை. அரசியலை பொறுத்தவரை அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தால் நல்லது. அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா? என்பது பற்றியெல்லாம் பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன். அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும்.
    • பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    திருச்சி:

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    திருச்சி பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம்.

    ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
    • இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

    ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.

    ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.

    25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    • பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர்.

    தமிழ் நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இடைத்தேர்தல் குறித்த அறிவப்பு வெளியான சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார். இதனால் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது மக்கள் என பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனிடையே சீமான் பெரியர் குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், தமிழ் நாடு முழுக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். சிலர் மற்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருவதை அடுத்து, பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "பெரியாரை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க முடியாது. பெரியாரை ஏற்றுக் கொள்ளக்கூடிய தம்பிகள் என்னைவிட்டும், நாம் தமிழர் கட்சியை விட்டும் வெளியேறலாம்," என்று தெரிவித்தார்.

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 5-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

    பின்னர் அதிகாலை காலை 5 மணிமுதல் 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

    நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.

    இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத்துறை கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர்.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பி. புதுபட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அணைத்து வெற்றி வாகை சூடினர்.

    இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

    • படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
    • பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், திருச்சி மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுப்போக்கும் வகையிலும் திருச்சி கரூர் சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிடுகிறார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது. இந்த பூங்காவில் அரிய வகையிலான பறவைகள் வளர்க்கப்பட இருக்கின்றன. இதுமட்டு மல்லாமல் குழந்தைகள் தெரிந்து கொள்ள 5 வகையான நிலங்கள் அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை போன்ற அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை குழந்தைகளுக்கு புரியும் வகையில், மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலை வனம் போன்ற இடங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் மகன் கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    • பாலியல் தொல்லை அளித்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • முதல் குற்றவாளியான அவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 4 பேருக்கு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்.

    இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தகுமாருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது.

    மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் மேற்படி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி என்பவரிடம் அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்), 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாணளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கு தொடர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

    மேலும், காவல்துறையினர் இல்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடணடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப் அவர்களின் உத்தரவுடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 4-ம் வகுப்பு மாணவியிடம், பள்ளி பெண் நிர்வாகி ஒருவரின் கணவரான வசந்தகுமார்(வயது 54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் சோர்வடைந்த மாணவி மாலையில் வீட்டிற்கு சென்றதும், நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக பள்ளிக்கு விரைந்து இதுகுறித்து கேட்டறிந்ததுடன் மணப்பாறை போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் பள்ளி அலுவலக கண்ணாடிகளையும், அங்கிருந்த பூந்தொட்டிகளையும் நொறுக்கினர். அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். நீண்ட நேரமான நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நொச்சிமேடு பகுதியில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் மணப்பாறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை.
    • தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி, இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக வேங்கை வயல் போன்று இன்னொரு சம்பவம் திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

    நேற்று மாலை 7 மணி அளவில் இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய மர்ம ஆசாமிகள் சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்று உள்ளனர். இதை கவனித்த மக்கள் தொட்டியின் மேலே சென்று பாலித்தின் பையில் மிதந்தது மனித மலம் போன்று இருந்தது.

    இந்த தகவல் அறிந்த 20-வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர் கள், தண்ணீரில் கிடந்த கழிவை அகற்றி விட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப் படுத்தினர். பின்னர் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.

    அவர்கள் தரப்பில் மனித மலம் என்பது உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆனால் இதுவரை அதில் தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டு உள்ளது.

    இது குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன் படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி ஆகும். மலம் கலந்த மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
    • சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே இயக்கி வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் வரும் மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.

    இந்த விமானம் ஆனது மாலை 6:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும். மீண்டும் இந்த விமானம் இரவு 8 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் திருச்சி சென்னைக்கு 5 சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஆறாவது சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை தொடங்குவது அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது

    ×