என் மலர்
திருச்சிராப்பள்ளி
- இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
- சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
திருச்சி:
இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.
முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.
குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.
இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.
உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...
- திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
- உணவு எடுத்து வருவதற்காக இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் மேல தெருவை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 30) பெயிண்டர். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுஜாதா கர்ப்பம் தரித்தார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்துக்காக மூவேந்தன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
சமயபுரம் மருதூர் சாலையில் ராஜ கள்ளிக்குடி என்ற பகுதி சாலை வளைவில் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூல மாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே மூவேந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருத்துவ மனையில் பிரசவத்துக்காக மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவரது கணவரின் உயிரிழந்த உடல் வைக்கப்பட்டு இருப்பதும், கணவர் உயிரிழந்த செய்தியை மனைவியுடன் சொல்ல முடியாமல் அவர்களின் உறவினர்கள் தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த உம்மா ஹமீது நாச்சியார் (வயது 62) என்ற பெண் பயணி தனது உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
திருச்சி:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.
யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்.
தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது.
லால்குடி:
திருச்சியை அடுத்த லால்குடி கீழ வீதி ஸ்ரீ மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியான காளைகள் மட்டுமே மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 400 வீரர்கள் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், லால்குடி வட்டாட்சியர் முருகன் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக பரிசு பொருட்கள் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கொண்டே இருந்தனர். காளையா...வீரனா.. என வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து மல்லுக்கட்டி கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை இறுகப்பிடித்தும் அடக்க முயன்றனர்.
சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது. மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி பந்தாடியது. சில காளைகள் தரையோடு தரையாக போட்டு போட்டு புரட்டி எடுத்தது. இதேபோல் திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டிய காட்சியை கண்ட பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் உற்சாகப்படுத்தினர். வீரர்கள் காயம் அடைந்தால் முதல் உதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
லால்குடி டி.எஸ்.பி தினேஷ் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழக அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
- விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளாக மஸ்கட் , ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவைகளை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் கடந்த சில நாட்களில் அதிக அளவிலான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வது தாமதமாகி பெரும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் மறுநாள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அடுத்த நாள் செல்ல இருந்த குவைத் விமானத்தில் பயணிகள் அனுப்ப முடியாத காரணத்தினால் அவர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 153 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.
அந்த விமானம் புறப்பட்டு ரன்வே அருகில் சென்ற போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறினை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு 144 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கூடாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அந்த கோளாறு சரி செய்யப்பட்டு இந்த விமானம் நள்ளிரவு 1.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானங்களில் அதிக அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் காரணத்தினால் பயணிகள் பெறும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர விமான நிறுவனத்தினரும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த விமானங்களின் தொடர்ச்சியாக வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் போது அவர்களின் பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு விமானத்துறை உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்படுவது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் பயணிகளூக்கு ஏற்படும் சவுகரியம் சொல்லிமாளாது என்ற நிலை உள்ளது.
மேலும் விமானம் புறப்பட்டபின் இதுபோன்ற நிலை உண்டானால் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதிகம். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
- தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.
- வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மட்டும் வழங்கி வருகிறது. இந்த விமானம் தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர். திருச்சியில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், பின்னர் அங்கிருந்து இலங்கை வழியாகவே திருச்சி விமான நிலையத்திற்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவையை பயன்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.
மேலும் இந்த விமான சேவை தினமும் 2 முறை மட்டுமே திருச்சிக்கு இயக்கப்படுவதால் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர திருச்சிக்கு இலங்கையில் இருந்து வருபவர்களும் இந்த விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் புதிய விமான சேவையாக இலங்கை யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அடுத்த மாதம் (மார்ச்) மாதம் முதல் புதிய சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக விமான தொடர்பினை பெற்று குறைந்த கட்டணத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நேரப்படி மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் மதியம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்தை சென்றடையும்.
மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை அதிக அளவிலான மக்கள் பயன்படும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தி.மு.க.வை வேரோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும்.
கரூர்:
கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வை வேரோடு, மண்ணோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும். தவறினால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
உலகத்தில் எங்கேயும் இல்லாத சாதனையை மத்தியில் 8 முறை திருச்சியை சார்ந்த தமிழ் பெண் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார். இதுவே சரித்திர சாதனை.
இது வளர்ச்சியின் பட்ஜெட், இதுவரை முதல்வர் பட்ஜெட் குறித்து பேசியது இல்லை. ஆனால், மத்திய பட்ஜெட் குறித்து விமர்சிக்க கூட்டம் போடுகிறார்கள். இந்த் ஆண்டு 51 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டாக போடப்பட்டுள்ளது.
2 லட்சத்து 20 ஆயிரம் தனிநபர் வருமானமாக வளர்ந்து இருக்கிறோம். வளர்ச்சி பாதையில் நம் நாட்டை மோடி அழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் 87 சதவீதம் பேர் வரி கட்ட வேண்டாம் என விலக்கு அளித்து இருக்கிறார்கள். இந்த இழப்பு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும்.
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என முதல்-அமைச்சர் பேசுகிறார். காங்கிரஸ் ஆண்ட 10 வருட காலத்தில் வரி பகிர்மானம், 2004 முதல் 2014 வரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 900 கோடி நேரடியாக கொடுத்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் 6 லட்சத்து 14 ஆயிரம் கோடி நேரடியாக கொடுத்து இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் 2030 முடியும் போது 2 லட்சம் பேர் மருத்துவம் படிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகமாக நேரடி நிதியாக கொடுக்கிறோம்.
நான்கரை லட்சம் கோடி பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. மோடி தமிழகத்திற்காக கொடுக்கிறார். தமிழக மக்கள் மீது உணர்வுபூர்வமாக வைத்துள்ள நம்பிக்கை மனிதர் மோடி.
தண்ணீர், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து என்னிடம் மோடி கேட்டுக் கொள்வார். குற்றம் இருந்தால் டெல்லியில் இருந்து போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
உதயநிதி ஸ்டாலின், மோடி வந்தால் இனி கெட் அவுட் மோடி சொல்வோம் என்கிறார். நீங்கள் சொல்லி பாருங்கள். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, இன்னும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாக இருக்கிறார்.
இதே ஊரில் 20 வருடம் கழிப்பறையை பார்த்தது கிடையாது. சைக்கிள், பேருந்தில் போய் படித்தவன் நான். கல்வியின் பெருமை எனக்கு தெரியும். மோடி கல்விக்காக மட்டும் தான் என்னை மதிக்கிறார்.
3-வது மொழியாக ஒரு விருப்பப்பட்ட மொழியை படியுங்கள் என்கிறார். இதில் எங்கே இந்தியை திணிக்கிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப மொழியை படிக்க சொல்கிறார்.
அன்பில் மகேஷ் சொந்த ஊர் ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியை இடித்து, மரத்துக்கு அடியில் போர்டு வைத்து படிக்கிறார்கள். ஆனால், அவர் பையன் பிரெஞ்சு படிக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஹிந்தி படிக்க கூடாது என்கிறார்கள்.
52 லட்சம் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க. நடத்தும் பள்ளிகளில் 3 மொழி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க.வின் கபட நாடகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், மோடி 2190 கோடி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்களுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அசாமில் 830, மத்திய பிரதேசத்தில் 1250, சட்டீஸ்கரில் 1000, மஹாராஸ்டிராவில் 2100 உதவித் தொகை பெண்களுக்கு கொடுக்கிறோம்.
டெல்லியில் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார்கள். இங்கு உரிமை தொகை என்கிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சியில் அமரும் போது 2500 ரூபாய்க்கும் அதிகமாக கொடுப்போம். கமிசன் அடிக்காத கூட்டம் பா.ஜ.க. கூட்டம். எங்களிடம் இருந்து நியாயம், நேர்மையை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறோம்.
கட்டுகோப்பான காவல் துறையை வீதியில் இறக்கி விட வேண்டும். பிஞ்சு குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. 18 வயதுக்கே ஒன்னும் தெரியாத போது, 8 வயது குழந்தை மீது கை வைக்கிறார்கள்.
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. பா.ஜ.க. உங்களோடு இருக்கிறது. வருகின்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வுடன் இருங்கள், 2026 மாற்றம் இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை.
தி.மு.க. சொந்தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், 3 மொழியையும் படிக்க வையுங்கள். உங்கள் குழந்தைகள் பா.ஜ.க. தலைவர்களாக வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சியில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருச்சி சிந்தாமணியில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பின்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கோரிய நிலையில் 900 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
இந்தி படித்தால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்குவோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேரடியாக கூறுகிறார். இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினோம்.
இருமொழிக் கொள்கை என்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அல்லது இந்தியா கூட்டணியின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கொள்கை . தமிழக மாணவர்களின் கொள்கை.
தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம். எந்த நிலையிலும் கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்காக போராடி வருகிறோம்.
பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒருவரை புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
- கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
நான் என் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது.
கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார். தரம் தாழ்ந்த தகவல்களை பரப்புவதை தவிர மைக் புலிகேசியால் வேறு என்ன செய்துவிட முடியும்? என்று அவர் கூறினார்.
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
- நாளை முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
ராம்ஜிநகர்:
முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்ற பெருமைக்குரியதும், அருணகிரிநாதருக்கு முருகன் அருளியது என்ற சிறப்புக்குரியதுமாக திகழ்கிறது வயலூர் சுப்பிர மணியசுவாமி கோவில்.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் தொடங்கின. இந்த பணிகள் நிறை வடைந்ததை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலா கலமாக நடைபெற்றது. இதற்கானயாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி (வெள்ளி க்கிழமை) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.
தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யா ஹவாசனம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை மற்றும் மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடை பெற்றன.
மறுநாள் (சனிக்கிழமை) மிருத்ஸங்கிர ஹணம் பூஜை நடந்தது. 16-ந்தேதி மாலை முதற்கால பூஜை, இரவு பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜை நடந்தன.
நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள். ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி கும்பாபிஷேக வர்ணனை ஆற்றினார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாகம் பல்வேறு பக்தர்கள் சார்பாகவும் ஆங்காகாங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வயலூர் சாலை முழுவதும் கடும் நெருக்கடியாக காணப்பட்டது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சுவாமி திரு வீதி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன. நாளை முதல் மண்டலாபிஷேகம் தொடங்குகிறது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் அறங் காவலர் குழு, திருப்பணிகள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தரிசனம் செய்ய் வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
- ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது.
திருச்சி:
திருச்சி சூரியூரில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும்.
திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும். இத்தகைய பிரசித்திபெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை முதலமைச்சர் உதையந்தி ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அமைய உள்ளது. கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அடுத்தப்படியாக 2-வது ஜல்லிக்கட்டு மைதானமாக 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.






