என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் பார்வையிட்ட காட்சி.
பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்த பெண்- உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
- ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சியை அடுத்த மண்ணச்ச நல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவரது மனைவி ஜெனினா (35). இந்த தம்பதிகளுக்கு 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் வடக்கிபட்டி அருகே ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (80) என்பவரது வீட்டில் கடந்த 2 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஏப்ரல் 29-ந் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே நேற்று ஜெனினா பச்சிளம் பெண் குழந்தையை வீட்டில் விட்டு வீட்டை பூட்டி அருகாமையில் உள்ள சர்ச்சுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஜெனினா நடவடிக்கையில் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டின் உரிமையாளரான பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெருமாளின் மருமகன் ராமன் (36) மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் துர்நாற்றம் வீசி உள்ளது.
பின்னர் சந்தேகமடைந்த ராமன் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டின் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டி மூடி இருந்த நிலையில் அதில் இருந்து புழுக்கள் தென்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஜெனினாவை விசாரணை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் ஜெனினா அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் ஜெனினாவை போலீசார் மடக்கி பிடித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 4 குழந்தைகளுக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதாகவும் 5-வதாக பிறந்த இந்த குழந்தைக்கு தானே பிரசவம் பார்த்ததாகவும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறினார்.
மேலும் கணவர் சுரேஷ் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றதாலும் உதவி வேறு ஆட்கள் இல்லாததால் வீட்டின் உள் குழி தோண்டி பச்சிளம் குழந்தையை புதைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜியபுரம் டி.எஸ்.பி. பழனி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை புதைத்த இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெனினா போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்தே பிறந்ததா? 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தை கொன்று புதைத்தாரா? அல்லது வேறு எதேனும் காரணத்தினால் குழந்தை இறந்ததா என தெரியவரும் என போலீசார் கூறினர்.






