என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துவாக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
    X

    துவாக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    • மாதிரி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
    • 15 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.

    திருச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறார். மேலும், அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருவெறும்பூர் துவாக்குடிக்குச் சென்றார். துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த வளாகத்தில் ரூ. 69 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார். பின்னர் தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளின் பயண காணொளியை கண்டு ரசித்தார்.

    மேலும் அரங்கில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும் விழா நிறைவடைந்ததும் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு புத்தூர் பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். அதையடுத்து, ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.

    பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சகல வசதிகளை கொண்ட அதிநவீன மாதிரி பள்ளிகளை கட்டி வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுமார் 7.9 ஏக்கர் பரப்பளவில் இந்த மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி பள்ளியில் ரூ.19.65 கோடி செலவில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது மேலும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் 73 ஆயிரத்து 172 சதுர அடியில் ரூ 18. 90 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், உலகத் தர வசதிகளுடன் இரண்டு தளங்களில் 22 வகுப்பறைகள் உள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், கலை, கைவினை கலையரங்கம், விளையாட்டு அரங்கம், மாணவர்களுக்கு போதுமான நவீன கழிப்பறை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

    வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகள், ஒலிபெருக்கிகள், பொருட்கள் வைப்பறை போன்ற மாணவர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு தளத்திற்கு செல்லும் மாடி படிக்கட்டுகளிலும் சாய்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நலனுக்காக செய்துள்ளனர். இந்த மாதிரி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. 15 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.

    இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவினை தமிழக அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×