என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.
    • நீதிபதி, ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று கூறினார்.

    திருச்சி:

    திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தன்னையும் தனது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஐ.ஜி. கோர்ட்டில் ஆஜரானார். சீமான் ஆஜராகவில்லை.

    பின்னர் டி.ஐ.ஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், ஏற்கனவே டி.ஐ.ஜி. கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலான விளக்கத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் அளித்தார்.

    அப்போது, மனுதாரரை (டி.ஐ.ஜி. யை) எதிர்தரப்பினர் பிறப்பு வெறுப்பு ஏற்படும் வகையில் பேசியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் இன்று சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.

    அப்போது நீதிபதி ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீங்கள் வாதத்தை முன்வைக்கவில்லை.

    வருகிற 21-ந் தேதி அடுத்த விசாரணை நடைபெறும். அன்று சீமான் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறினார்.

    அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் டி.ஐ.ஜி. தரப்பு வழக்கறிஞர் ஆஜரான நேரத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாமல் தாமதம் செய்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறிது நேரம் நீதிபதி அவகாசம் அளித்தார்.

    • கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.

    திருச்சி:

    பா.ஜ.க. சார்பில் பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. ஊர்வலம் வழி விடு வேல்முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேஜர் சரவணன் ரவுண்டானாவில் முடிகிறது.

    பேரணி முடிவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் திருச்சி வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி கொலை வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

    கொடநாடு கொலை வழக்கில் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களது எண்ணம். சென்னையில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க. கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். அனைவரும் தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.

    தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.

    இவ்வாறூ அவர் கூறினார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து, புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கவுதம் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் அழகேசன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், எம்.ஆர்.கோபிநாதன், மாவட்ட செயலாளர் சதீஷ், உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ், ஜி.டி. தினகர், கற்பகம் அரிசி மண்டி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார்.
    • கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.

    சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, திருச்சி டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சீமான் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினார்.

    கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து சீமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதி இதுதான் கடைசி வாய்ப்பு என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    • ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இவரது மனைவி விக்டோரியா (35) ரெயில்வே ஊழியர். இந்த தம்பதியருக்கு ஆராதனா( 9), ஆலியா( 3) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. புதிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை அலெக்சின் மாமியார் தனது பென்சன் தொகை மூலமாக செலுத்தி வந்தார்.

    சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் பென்சன் நின்றுபோனது.

    இதற்கிடையே அலெக்ஸ் தஞ்சையில் உள்ள தனது சகோதரர் ஒருவருக்கு கடனுக்கு ஜாமின் கொடுத்து, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அலெக்சின் தயார் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு செலவழிக்க நேரிட்டது.

    இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன்காரர்கள் மனைவி, குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பின்னர் குழந்தைகளின் அதே அறையில் அலெக்ஸ் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

    இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம்.
    • அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம்.

    கே.கே. நகர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    ஆனால் நிரந்தர தீர்வு தேவை. சுமூகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். 2 நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவை பேண வேண்டும்.

    போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லி வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது. அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பா.ஜ.க. செயல்படுகிறது.

    பாகிஸ்தானை, இந்தியாவோடு சேர்ப்பது, ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்ற இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம். காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.

    எப்போதும் பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
    • சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும்.

    திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது, நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், " சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம். நானும், திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம்.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை வழங்குவதிலும் முதலிடம் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக" என்றார்.

    • ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • திராவிட மாடல் அரசு அமைந்தற்கான வெற்றி பயணம் தொடங்கியது திருச்சியில் இருந்து தான்.

    திருச்சி:

    திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருச்சியில் இந்த சிறப்பான மாபெரும் விழாவில் பேசுவதுல் மகிழ்ச்சி அடைகிறேன். விழா அல்ல இது ஒரு மாநாடு... அப்படிப்பட்ட மாநாட்டை ஏற்பாடு செய்திருக்க கூடிய அமைச்சர் நேருவுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேருவை பாராட்டுவது என்னை நானே பாராட்டுகிற மாதிரி தான்.

    அந்த அளவுக்கு என்னுள் கலந்தவர் அமைச்சர் நேரு. திருச்சி தீரர்கள் கோட்டத்தில் தலைமை தீரர் நேரு. பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து, அதை எல்லாம் வென்று இந்த மத்திய மண்டலத்தை வலுவாக வளர்த்தெடுத்திருக்கிறார்.

    இந்த பயணத்தில் அவர் சந்தித்த இடர்பாடு, இழப்புகள் ஏராளம். அதெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்புகள். அது அத்தனையும் இந்த இயக்கத்திற்காக, எங்களுக்காக, நமக்காக தாங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது அதே உறுதியோடு செயல்பட்டு வருகிறார். ஆட்சி அமைந்த பிறகு இந்த அமைச்சரவையில் அவருக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை வழங்கியதும், அந்த நம்பிக்கையை காப்பாற்றி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் அனைத்தையும் மிகச்சிறந்த வகையில வளர்த்து வருகிறார்.

    அதற்கு எடுத்துக்காட்டு தான் பஞ்சப்பூரில் திறந்து வைத்துள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். அதை பார்த்தவுடன் எனக்குள்ள என்ன தோணுச்சுன்னா, இது பஞ்சப்பூரல்ல... எல்லா ஊரையும் மிஞ்சப் போகும் மிஞ்சப்பூர் .

    தமிழ்நாட்டோட இதய பகுதியாக விளங்குகிற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து நிலையம் நிச்சயம், அவசியம் தேவை தான். அமைச்சர் நேரு திருச்சி மாவட்டத்திற்கு ரொம்ப ஸ்பெஷலா பார்த்து பார்த்து இதை உருவாக்கி இருக்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் ஆனதுமே அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று சொன்னார். தற்போது மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கு. இடைநிற்றல் கூடாதுன்னு ஸ்கூல் போகாம இருக்கக்கூடிய மாணவர்களின் வீடு வீடாக தேடி தேடி போய் அறிவுரை சொல்லி வேண்டிய உதவிகள் செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புறோம்.

    நான் டெல்லி சென்றபோது அங்கிருந்த கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அங்குள்ள மாடல் ஸ்கூல் ஒன்றினை நான் பார்த்தேன். இதைவிட சிறப்பாக தமிழ்நாடு முழுக்க மாதிரி பள்ளிகள் உருவாகணும் என்று அப்பவே நான் முடிவு செய்தேன்.

    என்னோட அந்த கனவை ரொம்ப சிறப்பாக அன்பில் மகேஷ் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்தி காட்டி இருக்கிறார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக மாதிரி திருச்சிக்கும் ஒரு அறிவுச் சுரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து தற்போது பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு மிகப் பிரமாண்டமாக இந்த நூலகம் உருவாகி வருகிறது.

    அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேசும் சிறப்பக செயல்பட்டு எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறார்கள். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் துணையாக இருக்கக்கூடிய அரசுத்துறை செயலர்கள், கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    இங்கு பெரியார், அண்ணா, கலைஞர் கலைஞர் சிலைகளை திறந்து வைத்துவிட்டு தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். திருச்சிக்கும் இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும், அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது இங்குதான். கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் திருச்சி சிறையில் தான் அடைக்கப்பட்டார். மொழிப்போராட்டத்தில் கலைனரும், பெரியாரும் இணைந்து போராடி உள்ளனர். பல்வேறு புத்தகங்கள் இந்த திருச்சி மண்ணிலிருந்து தான் வெளியானது.

    திருச்சிக்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம். ஜல்லிக்கட்டு அரங்கம், 4 கோடி 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பச்சைமலை சுற்றுலா திட்டம், மிக முக்கியமான திட்டமான திருச்சி மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவுல சிப்காட் என்னால தொடங்கப்பட்டுள்ளது.

    ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி கடந்த 4 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது.

    கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம். 54,428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய விழாவில் 527 கோடி மதிப்பிலான 3597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அது மட்டும் அல்ல இதுவரைக்கும் நான் கலந்துக்கிட்ட விழாக்களில் மிக அதிகமாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 132 பேருக்கு 856 கோடி ரூபாய் மதிப்பில நலத்திட்டத்தை வழங்கிருக்கிறேன். இந்த 4 ஆண்டுகள் செய்த திட்டங்களை பத்திரிகையாளர்களிடம் கூறியபோது அதை வியந்து கேட்டார்கள். இதைதான் எதிர்க்கட்சிகளால் பொற்த்துக்கொள்ள முடியவில்லை. எனது அடுத்த டார்கெட் செட் பண்ணிக்கிட்டு முன்னோக்கி போறதால எல்லாத்தையும் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஒரு சாம்பிளுக்கு முக்கிய திட்டங்களை கூறுகிறேன். மதுரையில் ஒத்த செங்கலோடு இருக்கிற எய்ம்ஸ் மாதிரி இல்லாம, சொன்ன தேதிக்கு முன்னாடியே சென்னையில் கட்டி முடித்த 6 லட்சம் மக்களுள் பயனடைக்கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரைக்கு கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், குமரிமனையில் வள்ளுவருக்கு கண்ணாடி பாலம், தொழில் பூங்காக்கள், டைடல் பார்க்குகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசு அமைந்தற்கான வெற்றி பயணம் தொடங்கியது திருச்சியில் இருந்து தான்.

    2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்க மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கை அறிவித்தேன். தமிழ்நாட்டை துறைவாரியாக எப்படி உயர்த்தும் என்று சொல்லி 7 வாக்குறுதிகளை அப்போது நான் சொன்னேன். முதல் வாக்குறுதி வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, இரண்டாவது வாக்குறுதி மகசூல் பெருகிடும் விவசாயம், மூன்றாவது வாக்குறுதி குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், நான்காவது வாக்குறுதி அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் உயர்ந்த வாழ்க்கை தரம் உள்ளிட்ட இந்த ஏழு வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காடு என்பது, இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி. இந்தியாவில் நாம் தான் நம்பர் ஒன்.பாசன பரப்பளவையும், விளைச்சலையும் அதிகமாக்கி சாதனைகளை படைத்து இருக்கிறோம். நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் காரணமாக சராசரியைவிட 2 மடங்கு உயர்கல்வியில் வளர்ச்சியை பார்க்கிறோம்.

    இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5 சத்வீதம் திருச்சியில் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதி அரசை உருவாக்கி இருக்கிறோம். எந்த பிரிவினரும் விட்டுப் போக கூடாது என கவனமாக செயல்பட்டு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் எல்லாருக்குமான திராவிட மாடல் ஆட்சி நடகிறது. நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு, இன்னும் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என உறுதியாக சொல்றேன். சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். இதைத்தான் எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியவில்லை.

    இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்தபோது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தபோது எதையும் கண்டுகொள்லாமல் இருந்தார்.

    காவேரி பிரச்சனையில் உரிமையை பெறவும் உச்ச நீதிமன்ற உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அதனால விவசாயிகள் தற்கொலை செய்த துயரம் எல்லாம் நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தினால் அது நிறைவேறியது. அதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. ஜி.எஸ்.டியினால் நம்ம அரசினுடைய உயிர் மூச்சான வரி விதிப்பு உரிமை போச்சு. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சியிலிருந்து மீட்டு தி.மு.க. விடியல் ஆட்சி நடத்தி வருகிறது. எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். திராவிட மாடலினுடைய விஷன் 2.0 இனிதான் லோடிங். நான்கு ஆண்டு ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாக்கி சாதனை படைத்தோம். இனி நாம போற பாதை சிங்க பாதையாக இருக்கும். அது ராக்கெட் வேகத்தில் இருக்கும். அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினேன்.

    * பஞ்சப்பூரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்துள்ளேன்.

    * ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.

    * மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதே சான்று.

    * தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முத்திரை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    * திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது.

    * 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணம் திருச்சி தான்.

    * ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகாமையில் ரூ.129 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த முனையத்தின் முன்புறம் பேரறிஞர் அண்ணா நிலையையும் அவர் திறந்துவைத்தார். இந்த கனரக வாகன சரக்கு வாகன முனையம் 8 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 250 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 102 இருசக்கர வாகனங்கள் 46 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் இங்குள்ள வணிக வளாகத்தில் தரைதளத்தில் 51 கடைகளும் முதல் தளத்தில் 28 கடைகளும் உள்ளது.

    தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.

    இதிலும் தனியாக 19 சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 27 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாவலர் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 14 படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளது 16 குளியல் அறைகள் உள்ளன. மேலும் 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்குமான கழிவறை வசதிகள் கூடுதலாக இந்த கனரக சரக்கு வாகன முனையம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 107 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகன நிறுத்துமிடங்களை அறிவிப்பு செய்யும் வசதி, பாஸ்ட்டேக் மூலம் வசூல் செய்யும் வசதி, தொழில்நுட்ப காரணிகள் மற்றும் பசுமை புல் வெளி போன்றவை இடம்பெற்றுள்ளது.

    • மாதிரி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
    • 15 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.

    திருச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறார். மேலும், அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருவெறும்பூர் துவாக்குடிக்குச் சென்றார். துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த வளாகத்தில் ரூ. 69 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார். பின்னர் தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளின் பயண காணொளியை கண்டு ரசித்தார்.

    மேலும் அரங்கில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும் விழா நிறைவடைந்ததும் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு புத்தூர் பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். அதையடுத்து, ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.

    பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சகல வசதிகளை கொண்ட அதிநவீன மாதிரி பள்ளிகளை கட்டி வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுமார் 7.9 ஏக்கர் பரப்பளவில் இந்த மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி பள்ளியில் ரூ.19.65 கோடி செலவில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது மேலும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் 73 ஆயிரத்து 172 சதுர அடியில் ரூ 18. 90 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், உலகத் தர வசதிகளுடன் இரண்டு தளங்களில் 22 வகுப்பறைகள் உள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், கலை, கைவினை கலையரங்கம், விளையாட்டு அரங்கம், மாணவர்களுக்கு போதுமான நவீன கழிப்பறை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

    வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகள், ஒலிபெருக்கிகள், பொருட்கள் வைப்பறை போன்ற மாணவர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு தளத்திற்கு செல்லும் மாடி படிக்கட்டுகளிலும் சாய்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நலனுக்காக செய்துள்ளனர். இந்த மாதிரி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. 15 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.

    இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவினை தமிழக அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி மாலை 6 மணி அளவில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நம்பெருமாள் உள்கோடை திருநாள் தொடங்கியது. இந்த விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. 12-ந்தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
    • முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.

    திருச்சி விமான நிலையத்தில்அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 11.30 மணியளவில் துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்தில் ரூ.69 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி வசதி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த விழா முடிந்து டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் நாளை மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு, தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் செல்கிறார். கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.

    இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். அதன் பின்னர், அரசு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பிரம்மாண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பகுதிக்கு செல்கிறார்.

    பின்னர் முதல் நிகழ்வாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள தந்தை பெரியார் உருவச்சிலையை திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    அதனைத்தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புறம் ரூ.129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா உருவச்சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

    பின்னர், ரூ.408 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை' திறந்து வைத்து, பஸ் முனைய வளாகத்தை முழுவதுமாக சுற்றிப்பார்த்து, பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார்.

    அதனைத் தொடர்ந்து, பஸ் முனையத்தின் முதல் தளத்தில் நகர பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் முனையத்திற்கு அருகில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்குகிறார். அதன்பின் அவர் ரூ.463 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழா நிறைவுற்றதும் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், அன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்க தி.மு.க.வினர் மாநகர் முழுவதும் கட்சிகொடிகளையும், வரவேற்பு தோரணங்களையும், பிரம்மாண்ட பேனர்களையும் கட்டி வருகிறார்கள். மேலும் பஞ்சப்பூரில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ×