என் மலர்tooltip icon

    தேனி

    • போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • தேர்தல் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு, புது பஸ்நிலையத்தில் நவீன மனிதர்கள் அமைப்பை சேர்ந்த வாலிபர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி போதும் மோடி, பை பை மோடி என்று பதாகைகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் உதயசூரியன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக கோசம் எழுப்பிய வாலிபர்கள் அதற்கு முன்பே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட வாலிபர்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
    • ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான்.

    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    • கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
    • போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கர்ணன் (வயது70). இவர் கே.கே.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும் நிலக்கிழாராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கர்ணன் வீடு மற்றும் கம்பத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்த நிலையில் இன்று காலை வரை நீடித்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இதுபோன்று நிதி நிறுவனங்களில் அதிக அளவு பணம் பெற்று பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து போடிக்கு வந்த தனியார் வாடகை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு சூட்கேசில் ரூ.20 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி வீரன் (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

    இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து அவர் கூறி கதறி அழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷ மருந்தை குடித்தனர்.

    இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
    • 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.

    போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
    • 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.

    கூடலூர்:

    தமிழகத்தில் 5-வது புலிகள் காப்பகமாக கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாகும். இங்கு மேகமலை பகுதியில் உள்ள கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய், காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்சனை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கியுள்ளனர்.

    7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவிலேயே வர்த்தகம் இல்லாத பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு என மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டு தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரித்துள்ளனர்.

    • இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
    • பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.

    தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.

    தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
    • மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கம்பம்:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச மதவாத கட்சியான பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன். மேலும் அ.ம.மு.க. கட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சிந்தித்து செயல்படுங்கள் என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    இது குறித்து தேனி அ.ம.மு.க. நகர செயலாளர் மணி கூறுகையில், துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியே பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக சலீம் என்பவர் நகர துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?
    • மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொளுத்தும் வெயிலிலும் என்ன காண வந்துள்ள தாய்மார்களாகிய நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம்.

    * தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?

    * 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தொடர்ந்து 3 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது.
    • ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1500 வாக்குகள் பதிவானது.

    வெள்ளிமலை பகுதியில் வெளியூர் பகுதி மக்கள் குடும்பத்துடன் தங்கி வந்த நிலையில் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வேறு நபருக்கு கைமாற்றி விட்டது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. இதனால் அங்கு தங்கி இருந்த தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

    இதனால் வெள்ளிமலையில் வசிக்கும் குடும்பத்தினர் குறைந்து தற்போது 2 குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அதில் 2 பெண்கள், 4 ஆண்களுக்காக அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது. அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் 12 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை ஓட்டு ஜாவிதாவில் 6 பேர் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி மையம், தேர்தல் அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த கிராமத்தில் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஒரு பக்கம் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் அவ்வப்போது தேவைக்கு வந்து தங்கி விட்டு பின்னர் சென்று விடுவது வழக்கம்.

    மேலும் இந்த கிரமத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
    • சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கண்டமனூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் பணம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

    தான் ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தும் அதிகாரிகள் கேட்காமல் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார். அவரது வாகனத்தையும் மறித்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதன் பின்பு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,78,450 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ×