என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,

    மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உள்பட ஏராளமான விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக இருந்தார். நவம்பர் 11ம் தேதி தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த அவர், நவம்பர் 13ம் தேதி சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் சென்னை சென்று சேரவில்லை.

    இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கடைசியாக சோழபுரம் கிழக்குத் தெருவில் உள்ள சித்த மருத்துவர் கேசவமூர்த்தியின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. பின்னர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட கேசவ மூர்த்தி, அசோக் ராஜனுக்கு போதை மருந்துகள் கொடுத்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து அவரது வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பின்னர் அசோக் ராஜன் உடலை போலீசார் நேற்று முன் தினம் தோண்டி எடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    சித்த வைத்தியரான கேசவ மூர்த்தி ஆண்மை குறைபாடு போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளால் தயாரித்து அவர்களுக்கு கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தார்.

    பின்னர் தான் அசோக் ராஜனுக்கு வலை விரித்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு சில மருந்துகளை கொடுத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் உடல் வலி தாங்க முடியாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு அசோக் ராஜன் மயங்கினார்.

    இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என கருதிய கேசவ மூர்த்தி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை ஆடு வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்து தனியாக புதைத்துள்ளார். விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி உள்ளார்.

    பின்னர் அந்த உடலை வீட்டின் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்துவிட்டார்.

    இதற்கிடையே சித்த வைத்தியர் கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடலில் சில உள் உறுப்புகளை காணவில்லை.

    ஆகவே உள் உறுப்புகளை வெட்டி எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆகவே திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கேசவ மூர்த்தியின் டைரியில் 194 பெயர்கள் கொண்ட பட்டியல் இருந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்கள், அவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள்.

    எனவே டைரியில் இடம்பெற்று இருப்பவர்கள் கேசவமூர்த்தி இடம் சிகிச்சை பெற்றவர்களா? எதற்காக சிகிச்சை பெற்றார்கள் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    எனவே போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.
    • வானவேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கப்பட்டது.

    இந்த வாகன பேரணி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், வழியாக இரவு தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து தொம்பன் குடிசை பகுதிக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணியை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., எஸ். எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வான வேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் சென்ற இரு சக்கர வாகன பேரணிக்கு தி.மு.க.வினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து வாகன பேரணி புறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா , ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மண்டலக்குழு தலைவர் மேத்தா, பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், சதாசிவம், நீலகண்டன், கோட்டை பகுதி சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல்நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்டகடசலாபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி, களிமேடு - 3 களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி,பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன்நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர்,சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர் பாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் , வ. உ .சி நகர், சிறுவர் சீர்திருத்த பள்ளி, ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பின் பஞ்ச ஆர்த்தி செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளின் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவின் 6ம் நாள் அன்று கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முகசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வும் தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் சூரபத்மினி வதம் செய்கின்ற சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    7-ம் நாள் அன்று தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னி யாகம் வளர்த்து மங்கள ஞான் பூட்ட உற்சவர் சண்முகசுவாமிக்கு தேவசேனாவுடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மணல்மேடு மகாராஜபு ரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 27).

    இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவர் கடந்த 11-ந்தேதி தீபாவளி பண்டி கைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர், அவர் கடந்த 13-ந்தேதி வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் வீடு திரும்பவில்லை.

    இதைதொடர்ந்து, அசோக் ராஜின் பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜை தேடி வந்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் அசோக்ராஜ் கடைசியாக சோழபுரம் மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவர் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், கடந்த 13-ந் தேதி இரவு அசோக்ராஜ் தன்னை வீட்டில் வந்து பார்த்ததாகவும், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதால் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அழுததாகவும் தெரிவித்தார்.

    இதனால் தஞ்சையில் உள்ள தனக்கு தெரிந்த டாக்டரை அணுகுமாறு அவரிடம்கூறி அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கூறினார்.

    கடந்த 16-ந் தேதி அசோக்ராஜ் வீட்டிற்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது.

    அந்த கடிதத்தில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

    ஆனால் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையழுத்து இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நான், அசோக் ராஜிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் தலையை துண்டித்தேன். பின்னர் உடல் மற்றும் தலையை எரித்து தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என்றார்.

    இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் நேற்று கேசவமூர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவர் அசோக்ராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

    இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அடுத்த மேலகபிஸ்தலம் கொத்ததெரு பாலக்கரை பகுதியில் வசிப்பவர் அப்பாசாமி (வயது 64).

    விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சரோஜா (55).

    சம்பத்தன்று அப்பாசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்து மயங்கிவிட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் போரின் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
    • தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பன்முக தன்மையை விளக்கிடும் வகையில் முத்தமிழ் தேர் நேற்று தஞ்சைக்கு வந்தது.

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில வந்த தேருக்கு மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பலர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஊா்தி 'எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்' என முழங்கிய கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    தேரில் இருந்த கருணாநிதி சிலைக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊா்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல உள் அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமா்ந்திருப்பது போன்ற சிலை, அவா் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் அவைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மூலம் பெறும் வசதி ஏற்படுத்தபட்டு உள்ளது.

    இந்த தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி (தஞ்சை), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூநடராஜமணி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அம்மா ப்பேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.வி.கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், அம்மாபேட்டை பேரூராட்சி துணை தலைவர் தியாக.சுரேஷ், தகவல் தொழி ல்நுட்ப பிரிவு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராதாகி ருஷ்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபாண்டி, கிளை செயலாளர் ராஜேந்திர சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    • 1330 திருக்குறள்களுக்கும், 1330 கதைகளை கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
    • முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை. அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அகழ் கலை இலக்கிய மன்றம் நிறுவனர் வினோதினி, பல்கலைக்கழக வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், தொழில் அதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    ×