என் மலர்
தஞ்சாவூர்
- மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
- ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.
மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
- பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவம் முதல் அட்சயம் வரையிலான தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது.
முன்னதாக சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வள்ளி இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாம்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள் ஆகியவற்றை சுமந்தவாறு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சீர்வரிசை அளித்தனர்.
பின்னர், முருகப்பெருமான்-வள்ளி ஆகியோருக்கு மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து, மாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
- பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி., மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார்.
- மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியஸ்ரீ. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் தாயார் இறந்த நிலையில், யானைக்கால் நோயால் பாதிப்படைந்த தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயை கொண்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை இரவில் சமைத்து தரும் உணவை உண்டும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவோம் எனவும், சிறு குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் தனது துயரத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி. சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நிதியுதவி வழங்கினார்.
மேலும் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே நேரில் உதவி செய்த முரசொலி எம்.பி.க்கு மாணவி நித்யஸ்ரீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
- சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
- திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் பெருமாள்-தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
மேலும், வீதிகள் தோறும் திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேரானது 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.
இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.
- எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது.
தஞ்சாவூர்:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.
அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மாதம் வருகிற 29-ந்தேதி தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
- மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் மாசிமகத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக இந்த மாதம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
- தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தஞ்சாவூர்:
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான கணூரி பார்டரில் சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 2024, நவம்பர் 26-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.
சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் இன்றுடன் (5-ந்தேதி) 100 நாட்களை எட்டியுள்ளது. இவரது போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக நீதி வழங்க கோரியும், சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் இன்று (புதன்கிழமை) காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தொடங்கி வைத்து சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க வேண்டும், இதனை வலியுறுத்தி சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் தலைமையிலான விவசாயிகள் பேரணியை அரியானா மாநில எல்லையில் துணை ராணுவப்படை தடுத்து நிறுத்தியது.
அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனாலும், தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டரை கொண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.
இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
- 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.






