என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பாட்டம் கிராமத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மேலாளர் சம்சுதீன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில் எங்கள் பள்ளியில் 2015-2016-ம் கல்வியாண்டில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் ரூ.11 லட்சத்தை பள்ளியின் தலைமை ஆசிரியை மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ஜெயகிறிஸ்டி, அவரது கணவர் சுரேஷ்குமார் ஆகியோர் பள்ளியின் வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். பணத்தை கேட்டபோது தர மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி குறறப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து ரூ. 11 லட்சம் மோசடி செய்த தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவரை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை வீதியில் வசிப்பவர் முத்துராமன் (வயது 58). பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அவரது தம்பி குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் ஒரு கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் முத்துராமன் தங்கி இருந்த அறையின் ஜன்னலை நோக்கி 6 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியது. இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
சத்தம் கேட்டு முத்துராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தேவகோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். பெட்ரோல் குண்டுவீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீட்டின் சுவர் மட்டுமே லேசான சேதம் அடைந்தது. சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

முத்துராமனுக்கு ஏற்கனவே தபால் மூலமும், டெலிபோன் மூலமும் 4 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பா.ஜனதா தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போது இவருக்கும் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் இந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்டு கடந்த மாதம் 1–ந்தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஸ்மார்ட் கார்டு வரப்பெற்றுள்ளவர்கள் விவரம் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ஏராளமானோருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை. ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்களின் படம் தெளிவாக இல்லாதததே காரணம். மேலும் புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கு குடும்ப தலைவர்களின் படம் இல்லாதவர்கள் மற்றும் தெளிவான படம் இல்லாத குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
எனவே அவர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் சென்று ஸ்மார்ட் போனில் TNEPDS என்ற மொபைல் அப் முலம் படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.
விவரங்கள்இதுதவிர, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர், உறவுமுறை, முகவரி மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அவற்றை நியாய விலை கடையில் பராமரிக்கும் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும். இதன் அனைத்து விவரங்களையும் www.tnpds.com என்ற பொது வினியோகத் திட்ட இணையதளத்திலும், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் அரசு பொது இ–சேவை மையங்களிலும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வருகிற 10–ந்தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காரைக்குடி:
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் கடைகளுக்கு தோசை மாவு விற்பனைக்கு வழங்கி வந்தார். இன்று காலை தோசை மாவை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரமே சென்ற நிலையில் அந்த வழியாக தேவகோட்டையில் இருந்து வந்த போலீஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் கிடைத்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கார்த்திக் சுந்தர் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பிரபா (வயது 32), எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக பிரபாவை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபா, பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தேவகோட்டையை அடுத்த புளியால் அருகே உள்ள கொடுங்காவயல் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா நடந்தது. விழாவையொட்டி தினமும் மாலை சிறப்பு வழிபாடு, மறையுரை, திருப்பலி நடைபெற்றது.சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் சிவகங்கை மறை மாவட்ட அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் திருப்பலியை நிறைவேற்றினர்.
தொடர்ந்து மின்னொளியில் சப்பர பவனி நடைபெற்றது. முதலில் வந்த சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பரும், தொடர்ந்து 2–வதாக புனித அந்தோணியாரும், 3–வதாக மாதாவும் சப்பரத்தில் வலம் வந்தனர். திருவிழா நிறைவாக திருப்பலி நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டது.
விழாவையொட்டி புனித அருளானந்தர் நாடகம் நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஏராளமான ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புளியால் பங்குத்தந்தை ஜேம்ஸ், உதவி பங்குத் தந்தை பிரிட்டோபிரபு, ஓய்வுபெற்ற தாசில்தார் மரியதாஸ் மற்றும் கொடுங்காவயல் கிராம இளைஞர், மகளிர் மன்றங்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுமருதூர், தாணிச்சாவூரணி நாட்டாளம்மன் கோவில் மதுஎடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களை சேர்ந்த 7 குதிரைவண்டிகளும், பெரியமாடு 9 வண்டிகளும் சின்னமாடு 14 வண்டிகளும் கலந்து கொண்டன.
பந்தய வண்டிகள் கண்ட தேவி ஊரணியை சுற்றி வந்தன. குதிரை வண்டி ஊரணியை 10 சுற்றுகளும், பெரியமாடு 8 சுற்றுகளும், சின்னமாடு 6 சுற்றுகளும் வந்தன.
குதிரை வண்டியில் முதல் பரிசு ரூ. 9 ஆயிரத்தை தாணிச்சாவூரணி பெரிய ரஞ்சன், 2-ம் பரிசு ரூ. 8 ஆயிரத்தை உஞ்சனை சொர்ணலிங்கம், மூன்றாம் பரிசு ரூ. 7 ஆயிரத்தை சிறுமருதூர் ராஜ்குமார் ஆகியோர் பெற்றனர்.
பெரிய மாட்டுவண்டியில் முதல்பரிசு ரூ. 21 ஆயிரத்தை விராமதி சந்திரன், 2-ம் பரிசு ரூ. 17 ஆயிரத்தை பல்ல வராயன்பட்டி இளமாறன், 3-ம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை கீழவளவு சக்திஅம்பலம், 4-ம் பரிசு ரூ. 4 ஆயிரத்தை வெட்டி வயல் சுந்தரேசன் பெற்றனர்.
சின்னமாடு முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், இரண்டாம் பரிசு ரூ. 12 ஆயிரமும் வெட்டிவயல்சுந்தரேசன், மூன்றாம் பரிசு ரூ. 9 ஆயிரத்தை சிங்கதிருமுகப்பட்டி செல்லத்துரை, நான்காம் பரிசு ரூ. 3 ஆயிரத்தை வெளிமுத்தி வாஹினி பெற்றார்கள். வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாடுகளுக்கு மரியாதை செய்து மாலை, வேட்டிகள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இன்று டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்டத்தலைவர் பாப்பையா தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை.
முன்னதாக நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அரண்மனை வாசல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி சாலை மறியல் செய்ததாக 120 டாக்டர்களை சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 130 டாக்டர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் அமுதசெல்வி (வயது 40). இவர் திருச்சி ரெயில்வே போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அமுதசெல்வி வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமுதசெல்வி எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமுதசெல்வியின் கணவர் ராஜபாண்டி முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் ரத்தினபாட்சா (வயது53). ரெயில்வே ஊழியரான இவர், தனது மனைவி மெக்தாப் (47), மகள்கள் அப்ரீன் (22), சீரின்சித்தாரா (18), உறவினர் தீர்க்கோல்பானு (43), இவரது மகன் முகமது அஜீத் (16), மகள் சுஷ்மா (15) ஆகிய 7 பேருடன் மினி வேனில் நாகூர் தர்காவுக்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனை முடித்து நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். வேனை ரத்தினபாட்சா ஓட்டினார். இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கீரனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு வளைவை கடக்கும்போது வேன் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த மெக்தாப் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வேனுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 6 பேரை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை:
காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சாந்தன்யா (வயது21). கல்லூரி மாணவியான இவர் நேற்று கல்லூரி சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை செல்வம் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தன்யாவை தேடி வருகிறார்.
திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்தவர் சரவணபாண்டி. இவரது மகள் சொர்ணலட்சுமி (23), அரசு கல்லூரியில் படிக்கும் இவர், நேற்று கல்லூரி சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் பூலாங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவிகள் இருவரையும் யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் செந்தில்நாதன். இவர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நேற்று இரவு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
அவரை காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்து செல்வற்காக கார் டிரைவர் முத்துகிருஷ்ணன் (வயது 32) இன்று காலை புறப்பட்டார்.
தேவகோட்டை அருகே உடப்பன்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், ராம்நகர் பகுதியில் வந்தபோது எதிரே 2 மாடுகள் வந்தன.
எதிர்பாராதவிதமாக மாடுகள் மீது கார் மோதியது. அதே வேகத்தில் சாலையோர மரத்தின் மீதும் கார் மோதியது.
இந்த விபத்தில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த டிரைவர் முத்துக்கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






