என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டையில் பா.ஜனதா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
    X

    தேவகோட்டையில் பா.ஜனதா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

    பா.ஜனதா மாநில நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகளை நள்ளிரவில் மர்ம மனிதர்கள் வீசினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை வீதியில் வசிப்பவர் முத்துராமன் (வயது 58). பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அவரது தம்பி குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை 2.45 மணியளவில் ஒரு கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் முத்துராமன் தங்கி இருந்த அறையின் ஜன்னலை நோக்கி 6 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியது. இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

    சத்தம் கேட்டு முத்துராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தேவகோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். பெட்ரோல் குண்டுவீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    வீட்டின் சுவர் மட்டுமே லேசான சேதம் அடைந்தது. சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.



    முத்துராமனுக்கு ஏற்கனவே தபால் மூலமும், டெலிபோன் மூலமும் 4 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பா.ஜனதா தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போது இவருக்கும் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

    கடந்த ஜனவரி மாதம் இந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×