என் மலர்
ராமநாதபுரம்
- ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
வங்களாவிரிகுடாவில் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி கடந்த மாதம் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து சென்றது. அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படாததால் இன்று 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தற்போது வரை ரூ.10 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று (19-ந்தேதி)ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 4 மணிக்கு தங்கச்சிமடம் ரெயில் நிலையம் திரளும் ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து தாம்பரம் விரைவு ரெயிலை மறித்து போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தார்.
- தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசுப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் தினமும் பள்ளிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து தான் வருகை தருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.
- மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
- இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடித்து சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்கள் நீதிபதி உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று முறை விசாரணை வந்தபோது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 7 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் (இலங்கை மதிப்பு) அபராதத்துடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இனிமேல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஆண்டு எல்லைதாண்டி வந்ததாக கூறி கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகவில்லை எனக்கூறி மீனவர்கள் காவலை நீட்டிப்பு செய்து வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்புகூட ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
ராமேசுவரம், பாம்பன் உள்பட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் எந்த பிரச்சனையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, 2-வது நாளாக இன்று ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
- 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மீனவர்கள் 7 பேரையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் எமரிட், சகாயம், கிளாட்வின் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் பாரம்பரிய கடல் பகுதியில் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்களும் மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் 19-ந்தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில், இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர்களின் குடும்பத்தினர், கலெக்டரிடம் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
- மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
சமீப காலமாக அதிகரித்து வரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் ஓகா வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- 6 நிமிட தாமதத்திற்கு பின் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்-மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் ஓகா வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு 10:30 மணி அளவில் பயணிகளுடன் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. 15 நிமிடத்திற்கு பின் இந்த ரெயில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை அடைந்தது. பாலத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. பாலத்தின் நடுவே அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து சென்ற போது அபாய சங்கிலியை பயணி ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை மேற்கொண்டு இயக்காமல் தூக்கு பாலத்தின் நடுவில் நிறுத்தினார். தொடர்ந்து என்ஜின் டிரைவர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வாலிபரை எச்சரித்தனர். பின்னர் 6 நிமிட தாமதத்திற்கு பின் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. நடுகடலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் நடுவில் திடீரென ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மீனவர்களை கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
- வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இலங்கைக்கு ராமர் செல்லும்போது கடல் நடுவே பாலம் அமைத்து சென்றதாகவும், அதற்கு பயன்படுத்திய தண்ணீரில் மிதக்கும் கல்லை வைத்து வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளை கூறி மிதக்கும் கல்லின் அதிசயத்தையும் எடுத்துரைத்து வரக்கூடிய பக்தர்களிடம் ரூ.20 பணம் வசூல் செய்து சுமார் 85 ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாத சாமி கோவில் இணை ஆணை யர் செல்லதுரை, கோதண்ட ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்ட வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனை எதிர்த்து ராம் சேது பணியாளர்கள் சுமார் 85 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கோதண்ட ராமர் கோவில் அருகே, தனுஷ்கோடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது.
- அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரோமன் கத்தோலிக தேவாலயம் அருகே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழி பிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் வரிகளை எல்லாம் உயர்த்திவிட்டனர். மின்கட்டணம் குறித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை, 67% உயர்த்திவிட்டனர். இப்படி மக்கள் மீது சுமை சுமத்துகின்ற அரசு தேவையா? அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனால் விலை உயர்கிறது. காரணம் என்னவென்றால் பொம்மை முதல்வர்.
அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை ஒப்பிட்டுப்பாருங்கள். வருமானம் குறைந்து விலை உயர்ந்துவிட்டது. திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மன், மற்றவர்கள் இயக்குனர்கள். ஸ்டாலினை அடுத்து உதயநிதியை கொண்டுவர முயல்கிறார்கள், அது நடக்காது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக நாடாகிவிட்டது. இங்கும் எல்லோருக்கும் ஆள்வதற்கு உரிமையுண்டு. இங்கே இங்கிருக்கிறவர்கள் கூட முதல்வராகலாம்.
அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம். திமுகவில் அந்த குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். எங்கள் குடும்பத்தை தவிர்த்து எவரேனும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று ஒரு வார்த்தை அவர்களைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த குடும்ப ஆட்சிக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.
எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதுக்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா?
அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ஊழல் என்றார்கள், அதில் மேலும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது. அதில் அதிக வருமானம். எனவே அதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 400 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஏழைகள் நிறைந்த பகுதியில் அற்புதமான சிகிச்சை கிடைப்பதற்கு கொண்டு வந்தோம். இது ஒரு வரலாற்று சாதனை. இப்படி மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.
இந்தப்பகுதி பின் தங்கிய பகுதி. அதிமுக ஆட்சியில் 75 கோடியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தோம். தேவையான கல்வியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் ஒரு திட்டமாவது கொண்டு வந்தார்களா? இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது அதிமுக அரசுதான். கல்வியில் புரட்சி செய்திருக்கிறோம். பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். 17 மருத்துவக்கல்லூரி, 67 கலைக்கல்லூரி, 7 சட்டக்கல்லூரி இப்படி ஏராளமான கல்லூரியைத் திறந்து ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இது வறட்சி மாவட்டம். இந்தப் பகுதியிலும் கண்மாய் நிரம்புவதற்காக காவிரி- குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். பசுமையாக செழிமையாக மாற்ற முயற்சித்தோம். 14,400 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தினோம். தமிழக வரலாற்றில் இவ்வளவு நிதி மாநில அரசால் ஒதுக்கப்பட்டது கிடையாது. இந்த திட்டத்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் விடியா திமுக அரசு இதனை கைவிட்டது. அடுத்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததும் மீண்டும் காவிரி- குண்டாறு திட்டம் தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க் காப்பீடு மூலம் அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 540 கோடி பெற்றுக்கொடுத்தோம். மீனவர்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம். விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல், மீன்பிடி தடைக்காலம் மானியம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் டீசல் மானியம் உயர்த்தப்படும்.
நான்காண்டுகளில் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களுக்கு 321 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளை கட்ட 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வர்தா புயல், ஒக்கி புயல் நிவாரணம் 5000 ரூபாய், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், படகுகள், வலைகள் சேதத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய், 167 மீனவர்கள் இலங்கையில் மீட்பு, 806 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்தும், 96 பேர் ஈரான், 11 பேர் அபுதாபி, 28 பேர் கத்தார் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தமிழகம் அழைத்துவந்தோம். 85 கோடியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுத்தோம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்கள் திமுகவினர். அது காங்கிரஸ் ஆட்சியில்தான் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை கொடுத்ததே அவர்கள்தான், இப்போது மீட்பு பற்றி பேசுவதும் அவர்கள்தான். அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்க தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக மத்திய அரசில் 16 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. அப்போதெல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். மீனவர்களின் வாக்குகளைப் பெற ஏமாற்றுகிறார். மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டு 17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக்கொண்டனர். நகராட்சியில் வீடு, கடை கட்டினால் 1000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாயாக 100% உயர்த்திவிட்டனர்.
இது, இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக எதிர்த்து ஓட்டுப்போட்டனர். இவர்களா உங்களை காப்பாற்றுவார்கள்? இதிலிருந்து யார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
கொரோனா காலத்தில் மாணவர் நலனை காக்க ஆல் பாஸ் போட்டோம். இப்படி மாணவர், தொழிலாளி, விவசாயி, மீனவர், நெசவாளர், எல்லா தரப்பு மக்களுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. ஆகவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம். பை பை ஸ்டாலின்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
ராமநாதபுரம்:
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கொள்கையுடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் முதலாவதாக சிவகங்கையில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் பரமக்குடி, திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் மீனவர்கள், நெசவாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதன்மூலம் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் தங்களது வாழ்வில் வளம் பெற்றனர்.
அவ்வாறு நடைமுறையில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது. தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மீண்டும் கொண்டுவரப்படும். அதன்மூலம் தமிழகம் பசுமையாக மாறும். நெசவாளர்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அவர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும். நலவாரியம் மூலம் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. கச்சத்தீவு மீட்பு மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவு மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தனிக்கவனம் செலுத்துவோம். மேலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்" என்று பெயரளவுக்கு மட்டும் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சனைகளை மறந்து விடுகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் நலன் ஒன்றே அரசின் குறிக்கோள் என்ற அடிப்படையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்றார். அங்கு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை எடப்பாடி பழனிசாமி ரோடு-ஷோ நடத்துகிறார்.
குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி பொது மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ள அவர் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். மேலும் பிரசார வாகனத்தின் மீது நின்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு உரையாற்றுகிறார்.
- இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






