என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 2- வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 25-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள வறண்ட காவிரி ஆற்றில் நின்றவாறு உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை, தேனி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதேபோல ஒவ்வொரு நாளும் சமூக ஆர்வலர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போராட்டக்குழு சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
தமிழக அரசால், புதுக்கோட்டை மாவட் டத்தில் தற்போது நடை முறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு 01.04.2017 முதல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மொத்தம் 2,00,725 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றதை தெரிவிக்கும் விதமாக இரகசிய குறியீட்டு எண் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு வரும். இந்த இரகசிய குறியீட்டு எண் 15 நாட்கள் செயலில் இருக்கும். செல்போனில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை அழித்து விட வேண்டாம். மேலும் 15 நாட்களுக்கு மேல் ஆனாலும் தங்களுடைய மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அடடைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வந்துள்ளதா என்பதை தங்களுடைய நியாய விலைக்கடைகளுக்கு சென்று தெரிந்து கொண்டு, மின்னணு குடும்ப அட்டை வரப்பெற்றிருந்தால், ரகசிய குறியீட்டு எண் தங்களுடைய அலைபேசிக்கு வராமல் இருந்தாலும் மின்னணு குடும்ப அட்டை பெற இயலும்.
புதிய மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கைகளை குறித்து மனுதாரரே அரசு இ-சேவை மையம் அல்லது இணையதள வசதியுள்ள கூட்டுறவு சேவை மையங்களில் பதிவு செய்து கொண்டு மேம்படுத்தப்பட்ட சேவைகளை பெறலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகைப்படம் இல்லாத இனங்கள் 23,737 உள்ளது. இந்த 23,737 புகைப்படங்களை பதிவு செய்தால் இதற்கான மின்னணு குடும்ப அட்டைகளை பெறலாம். புகைப் படம் இல்லாதவர்களின் குடும்ப அட்டைகளின் பட்டியல் விபரம் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், குடும்ப தலைவரின் புகைப்படத்தினை நியாயவிலைக்கடையின் விற்பனையாளரிடம் குடும்ப அட்டை நகலுடன் புகைப்படத்தை வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்ட புகைப் படங்களுக்கு உடனடியாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகைப்படம், தமிழில் பெயர் விபரம், முகவரி விபரம் மற்றும் பிறந்த தேதி இல்லாத இனங்கள் 96,253 உள்ளது. இந்த 96,253 குடும்ப அட்டைகளுக்கு தேவையான விபரங்களை வழங்கினால் கணிணியில் பதிவு செய்து மின்னணு குடும்ப அட்டைகளை பெறலாம். மேற்கண்ட விபரங்கள் இல்லாதவர்களின் குடும்ப அட்டைகளின் பட்டியல் விபரம் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந் தப்பட்ட குடும்ப அட்டைதாரர் அந்தப்பட்டியலில் இடம்பெற்றிருந்தால், நியாய விலைக்கடையின் விற்பனையாளரிடம் குடும்ப அட்டை நகலுடன் புகைப்படம், ஆதார் அட்டை நகல், பிறந்த தேதி விபரத்தை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட இனங்களுக்கு உடனடியாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப் படும்.
குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்யப்படாமல் இருப்பின் உடனே சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையினை அணுகி அங்குள்ள விற்பனை முனையக் கருவியில் ஆதார் எண் மற்றும் செல் போன் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டால்தான் மின்னணு குடும்ப அட்டை பெற இயலும்.
மேற்கானும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு வளர்ச்சி பற்றியோ, வறட்சியை போக்குவதிலோ முனைப்பு காட்டாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி இப்போது கோர தாண்டவமாடுகிறது. தமிழகம் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது.
வறட்சியை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்சனையில் தமிழகத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒரே அணியாக இருக்க வேண்டும். கொடநாடு கொள்ளை சம்பவத்தில் தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர். மூடிய கடைகளை திறக்க கூடாது. தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. முக்கியமாக மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில கணக்காயர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலங்கள் மாதக்கணக்கை முடிப்பதற்கு மாதந்தோறும் 17-ஆம் தேதி என்ற முறையே தொடர வேண்டுமென வலியுறுத்தி கருவூலத்துறை ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டக் கருவூலங்கள் பிரதி மாதந்தோறும் 17-ஆம் தேதிக்குள் கணக்கு முடித்து மாநில அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், நடப்பு மாதம் முதல் 10-ஆம் தேதிக்குள் கணக்கு முடிக்க வேண்டுமென துறை ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் பற்றாக்குறையால் ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில் 10-ஆம் தேதிக்குள் கணக்கை ஒப்படைப்பது சாத்தியமில்லை. எனவே, 17-ஆம் தேதி என்பதே தொடர வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கருவூலத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாபு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி மற்றும் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அண்ணாத்துரை, துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ராயவரத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் அரிமளம், ராயவரம், கே.புதுப்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் இரவு ராயவரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வாகனங்கள் மற்றும் தட்டுகளில் பூக்களை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முத்துமாரியம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபட்டனர்.
இதில் அரிமளம், ராயவரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூச்சொரிதலுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரிமளம் போலீசார் செய்திருந்தனர்.
உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் ஊராட்சிக்குட்ப்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் கணேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு கிராம பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து பேசியதாவது:-
புதுக்கோட்டை மக்களின் மேல் அக்கறை கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கென ரூ.250 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடும் நோக்கில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் காவேரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் நிதி ஒதிக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் இவ்விரு பணிகளும் நிறைவுற்று தமிழ்நாடு முதலைமைச்சரால் தொடங்கி வைக்கபட உள்ளது என்றார்.
ராமநாதபுரம் அரண்மறணை வீதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 26).வெல்டராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெல் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அரவிந்த்குமார் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்கியது.
இருப்பினும் அரவிந்த் குமார் எழுந்து சென்று அருகில் உள்ள திருமயம் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்தவர்களின் உதவியுடன் திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே எஸ்.ஐ. ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளனூர் அருகே சிப்காட் வளைவில் ரெயில் சென்ற போது ஒருவர் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக முட்புதரில் சிக்கி கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இது போன்று ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் தவறி விழும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, படியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்வதன் விழிப்புணர்வை பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி அரவிந்த்குமாரை அவரை சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்க மாவட்ட தலைவர் மாருதிமோகன்ராஜ் உட்பட பலர் நேரில் பார்த்து போதிய மருத்துவ உதவிகள் வழங்குமாறு டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
புதுக்கோட்டை:
கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காவிரிப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென நடுவர் மன்றமும், உச்ச நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவது மிகப்பெரிய மோசடி. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு நீரை வழங்க மறுத்து விட்டதுடன் மேகதாதுவில் அணை கட்டவும் நிதி ஒதுக்கியுள்ளது. இதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
இந்நிலையில் கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் பகுதி காவிரியாற்றில் பன்னூர் என்ற இடத்தில் 6 பிரம்மாண்ட கிணறுகளை அமைத்து பூமிக்கடியில் ரகசியமாக காவிரி நீரைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ள திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை உருவாகும்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் 3-ம் கட்டமாக தொடர வேண்டும் என மத்திய அரசு விரும்ப வில்லை.3-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் வெளியுலக்கிற்கு தெரியக்கூடாது என மத்திய அரசு நினைப்பதே காரணம்.
நெடுமாறன் கூறியதைப் போல மாநில அரசே அந்த அகழ்வாராய்ச்சியை தொடர வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் வெட்டு அதிகமாக உள்ளது. தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசிடம் பெற வேண்டும்.
மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் அரசால் தைல மரங்கள் நடப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடிய தைல மரங்களை தவிர்த்து பலன் தரக் கூடிய மரங்களை வளர்க்க வேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தைல மரங்களை வெட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
முழு அடைப்புப் போராட்டம் என்பது 2-ஜி அலைக் கற்றை வழக்கின் தீர்ப்பை திசை திருப்ப நடத்தப்பட வில்லை. விவசாயிகளுக்காகவே ஒன்றிணைந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் நிர்வாகிகள் கே.எஸ். அழகர்சாமி , திருநாவுக்கரசு , தர்மராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை அருகே மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கொப்பரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 40). இவரது மனைவி இந்திராணி (36). இவர்களது மகன் லோகேஷ் (12).
சுந்தரராஜனுக்கும், இந்திராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இந்திராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இன்று காலை மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருமயம் ரெயில்வே தண்டவாளத்தில் இந்திராணி இறந்தநிலையிலும், லோகேஷ் மயக்கமடைந்த நிலையிலும் கிடந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேசை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்திராணி எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இந்திராணி தனது மகனுடன் இன்று காலை திருமயத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதில் லோகேஷ் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பியுள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு இன்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் முருகவேல் ஓட்டினார். கண்டக்டராக முனியாண்டி பணியில் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் பயணித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சு வாடி புதிய அரசு மருத்துவ கல்லூரி அருகே செல்லும் போது திடீரென பஸ்சின் என்ஜினில் இருந்து கரும் புகை வெளியேறியது.
பின்னர் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே டிரைவர் சாலையோரமாக பஸ்சை நிறுத்தினார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததோடு, அலறியடித்து கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினர். பயணிகள் அனைவரும் இறங்கியதும் பஸ் மளமளவென தீப்பிடித்தது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புகூடாக மாறியது. பின்னர் லேசாக எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
பஸ்சில் தீப்பிடித்தது எப்படி? என்று தெரியவில்லை. கடுமையான வெயில் காரணமாக என்ஜின் சூடாகி தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் வடகாடு அருகே புள்ளான் விடுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து மது குடித்து விட்டு செல்கின்றனர். மேலும் மது குடிப்பவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
இதனால் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்த தமிழரசி என்ற பெண் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ராஜேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் முத்தலீப் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிகப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப் படையில் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர் களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் சீமைக்கரு வேல மரங்கள் அகற்றும் பணிகளில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடும் பொழுது மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக வரப்பெறும் புகார்களுக்கு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருத் துறையும் தங்களது துறையின் கீழ் உள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி அதன் விபரத்தினை 25.5.2017 அன்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்ட ஆணையர்களுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதன் உரிமையாளருக்கு அரசு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
அதன் பின்பும் சீமைக் கருவேல மரங்களை அகற்றாத நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் பேசினார்.






