என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாத நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாத நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றாத நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பேசினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது.

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப் படையில் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர் களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில் சீமைக்கரு வேல மரங்கள் அகற்றும் பணிகளில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடும் பொழுது மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும்.

    பொதுமக்களிடமிருந்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக வரப்பெறும் புகார்களுக்கு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருத் துறையும் தங்களது துறையின் கீழ் உள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி அதன் விபரத்தினை 25.5.2017 அன்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்ட ஆணையர்களுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதன் உரிமையாளருக்கு அரசு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

    அதன் பின்பும் சீமைக் கருவேல மரங்களை அகற்றாத நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் பேசினார்.

    Next Story
    ×