என் மலர்
கிருஷ்ணகிரி
- எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?
- அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பேசியதாவது:-
கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் காலேஜ் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை கொண்டு வந்தவன் வேல்முருகன், கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். கூத்து என்றால் எனது தமிழனின் மரபு வழி கலையாகும், அதில் என்ன உங்களுக்கு குறைச்சல்.
எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி போராளிகளிடம் மைக் நீட்டி கேளுங்கள். அவர்களுக்கு போராளிகள் பற்றி தெரியாது. அவர்களின் உலகம் வேறு. எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்கிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர். அவர்கள் தான் தற்குறி.
உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். இவர்கள்தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை.
ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
நீங்கள் எல்லாம் 10-வது 12-வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். கடலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல்கலாம்களாக வரவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு பத்திரிகை இல்லாமல் ஒரு புகைப்படக்காரர் இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு கோடி ரூபாய் நிதியை அறிவித்து விஞ்ஞான கல்விக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதவியவன் நான் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் மட்டும் ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 'ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)' மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05-06-2025) ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதனுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் (2024 – 25) 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில், "UNFCCC இன் COP29 மற்றும் UNCCD இன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும்.
காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம் 2024 ஆம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM), மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.
இவ்வியக்கம் மூலம் 2024 ஆம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
- கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
- 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதை கேள்விப்பட்டு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர். அனைவருக்கும் தலா ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதுகுறித்து மூர்த்தி கூறும் போது, 'இந்த ஆண்டுபள்ளிகள் திறப்பை முன்னிட்டு எனது கடையில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முடி வெட்டினேன். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து முடி வெட்டிச்சென்றனர்' என்றார்.
- விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தது. நேற்று சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து சாமிகள் டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பெரிய புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டிராக்டர் தீ பிடித்து எறிந்தது. இதனை தருமபுரி மாவட்டம், வனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து சொக்கலிங்கம் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
- கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தளி:
கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன் (வயது41). இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வந்தார்.
பண்ணையில் காரை நிறுத்தி விட்டு, அங்குள்ள தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசியவாறு சம்பளம் கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றார்.
ஆனால், காரில் பணத்தை காணவில்லை. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் முகமது யூசுப் (49) என்பவரும் மாயமாகி இருந்தார். அவர், பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்க துரை உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஆனந்தராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், தலைமை காவலர்கள் ரஞ்சித்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரு சென்று விசாரித்ததில் முகமது யூசுப் குறித்து பகீர் தகவல் வெளியானது. சிவமொக்கா, உடுப்பி, சித்ரரதுர்கா ஆகிய பகுதியில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றி கொடுத்து செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து அவர்களின் நன்மதிப்பை பெற்று சில மாதங்களில் சந்தர்ப்பம் பார்த்து மொத்தமாக ஒரு தொகையை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
முரளிமோகனிடம் திருடிய பணத்துடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை 3 மாதமாக தனிப்படை போலீசார் கண்காணித்து மும்பை வரை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில், மைசூருவில் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிய வந்தது. அங்கு, சரக்குவேன் ஓட்டி வந்ததை நோட்டமிட்ட தனிப்படை போலீசார் முகமது யூசுப் (எ)ஷேக் முகமது யூசூப்பை நேற்று கைது செய்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடமிருந்து முகவரி, செல்போன் எண்கள், போட்டோ அடையாளத்தை மாற்றி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.
தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் வேலைக்கு சேரும் ஷேக் முகமதுயூசூப் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொண்டு நற்பெயர் ஏற்படுத்தி கொள்வார். சமயம் பார்த்து வேலை செய்யும் இடத்தில் அதிக பணம் கிடைக்கும்போது சுருட்டிக்கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடிப்பதும், அங்கு அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
பணம் செலவானதும், மீண்டும் வந்து ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி, போட்டோ, செல்போன் எண்களை மாற்றி வேறு பகுதியில் செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து கைவரிசை காட்டுவதுமாக இருந்துள்ளார். இவர் மீது கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஷேக் முகமது யூருப்பை தேன் கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மும்பை வரை தேடிச்சென்று குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
- தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1410 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவான அணையில் 44.28 அடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அப்படியே தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக நேராக கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணைக்கு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,268 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வினாடிக்கு 3,571 கனஅடி தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி செல்கிறது.
இதன் காரணமாக தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.
அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.
மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.
இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜா (வயது60). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மருமகன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு ராஜா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென மர்ம நபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர்.
அப்போது ராஜா வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கோவிந்தம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து உடனே தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை கழட்டி கொடுத்தார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்களை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் முதிய தம்பதியரை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டது.
- வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே உள்ள நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்துவிட்டு இரவு கொட்டகையில் அடைத்து விட்டு ரகுபதி வீட்டிற்கு சென்றார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து 5 ஆடுகள் உயிர் இழந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து பலியானது குறிப்பிட்டதக்கது.
வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிகளில் இரவில் மர்ம விலங்குகள் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது.
இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்துள்ளது. இதை வனத்துரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது.
அப்போதே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி ஏற்பட்டு இருக்காது.
மேலும் கால்நடைக்கு ஏற்பட்ட இழப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
- கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். மேலும் இரவில் புழுக்கம் காரணமாக தூக்கத்தை இழந்தனர்.
இந்த நிலையில், நேற்றும் கடும் வெயில் வீசியது. பின்னர், மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதை தொடர்ந்து மாலையில் லேசாக தூற தொடங்கி, சிறிது நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
மேலும், ஓசூர்-பாகலூர் சாலை, ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஓசூர் பஸ் நிலையம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது. பலத்த மழை பெய்ததை அடுத்து இரவில் குளுகுளு காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து நிம்மதியாக உறங்கினர். ஓசூரில் நேற்று பெய்த மழையின் அளவு 18 மி.மீ ஆகும்.
- தகவல் அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன் சக்தி (வயது14).
இவர் மேல் கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜா கடை அருகே உள்ள கொத்தூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பேரரசு (20). இவர் குருவிநாயன பள்ளியில் பாட்டி வீட்டில் இருந்து கொண்டு கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), இவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு குருவிநாயனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பேரரசு ஓட்டினார். சக்தி, மாதவன் பின்னால் அமர்ந்து சென்றனர்.
அப்போது கிருஷ்ண கிரி-குப்பம் சாலையில் குருவி நாயனப்பள்ளி மசூதி அருகே வந்த போது கர்நாடக மாநிலம், குல்பர் காவில் இருந்து மக்காச் சோளம் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற பிக்கப் வேன் எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பேரரசு, சக்தி, மாதவன், 3 பேரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிக்கப் வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






