என் மலர்
கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
- ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரசந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பானை, கரும்பு, வாழை மரம், மாடுகளுக்கான கயிறுகள், மஞ்சள் குழை, வாழைபழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், மாடுகள் மீது பூச கூடிய வண்ண பொடிகள், கோலப்பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், காய்கறிகளும் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
வாரசந்தையில் பொங்கல் விற்பனைக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான வியாபாரிகள் பொருட்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதனை வாங்க ஊத்தங்கரை, மத்தூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி மாவட்டத்தில் இருந்து இருமத்தூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரசந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று ஆடுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.
- முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
- நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் உள்ள ரேசன் கடையில் கடந்த 10-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக சுதா என்பவர் பணியாற்றி வருகிறார் . ஆனால் அவருக்கு பதிலாக அவரது தந்தை முனிகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாராம். நேற்றும், முனி கிருஷ்ணன் கடையில் அமர்ந்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். .
அப்போது, அங்கு சென்ற ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ரஜினிகாந்த், அவரிடம் கடையின் விற்பனையாளர்தான் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பணம் கட்டுகளை எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்காமல் அங்கிருந்து சென்று விட்டார். கடையில் பொருட்கள் எல்லாம் அப்படியே கிடக்க, பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்க சென்ற ஏராளமான குடும்ப அட்டைதார்கள் 2 மணி நேரமாக கடையின் வாசல் முன்பு காத்து கிடந்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், காத்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். அப்போது அங்கு வந்த முனி கிருஷ்ணனை அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கடையில் விற்பனையாளருக்கு பதிலாக அவரது தந்தை பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி வருவதாகவும், பொது மக்களை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முனி கிருஷ்ணன் தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஓசூர்:
தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்கியது. வருகிற புதன்கிழமை (17-ந் தேதி) வரை பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களாக கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால், ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதி வரை 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், ஓசூர் நகர பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
- மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
- சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புறங்களில் சாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். அதன்படி வழக்கமாக நடைபெறும் குந்தராப்பள்ளி வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். குந்தாரப்பள்ளி சாலையில் ஆடுகளை ஏராளமான சரக்கு வாகனங்களில் கொண்டு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான போதும், வெள்ளாடுகள் விற்பனையான அளவிற்கு, செம்மறி ஆடுகள் விற்பனை ஆகவில்லை எனவும் வியாபாரிகள் கூறினர். இதேபோல் சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆடுகள் மற்ற நாட்களை விட நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.
- 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.
ஓசூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பேசியதாவது:
எந்த ஊருக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஓசூருக்கு உண்டு. இங்கு தான் குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. என்ற தீய சக்தியை அடியோடு வேறறுப்பது தான் என் மண் என் மக்கள் பயணத்தின் நோக்கம். உதயநிதி ஸ்டாலின் பட்டத்து இளவரசனாக திகழ்ந்து வருகிறார்.
சேலம் இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அவரை துணை முதல்வராக்க கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் மோடி, தனது மந்திரிசபையில் அறிவாளிகளை மந்திரிகளாக்கி உள்ளார். குடும்ப ஆட்சி வந்தால் நிர்வாகம் கரையான் போல் அரித்து விடும். பா.ஜனதா கட்சியின் பிரச்சார பீரங்கியாக இன்று காங்கிரஸ் கட்சி மாறி வருகிறது.
பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தமிழ்நாட்டில் 13,000 வகுப்பறைகள் குறைவாக உள்ளன. 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. 5 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது. ஆனால் 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.
2024 நாடாளுமன்ற தேர்தல், இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல். பிரதமர் மோடியை 3-வது முறை பிரதமராக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். 150-வது சட்டமன்ற என் மண் என் மக்கள் யாத்திரை, ஓசூரில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் கே.பி.ராமலிங்கம்,. நரசிம்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சி.டி.ரவி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், விஜயகுமார், சீனிவாசன் பிரவீண்குமார், மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஓசூர் ஜி.ஆர்.டி சர்க்கிளில் இருந்து அண்ணாமலை திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.
- மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட போது பொதுமக்களிடம் பேசியதாவது :-
என் மண், என் மக்கள் யாத்திரை அரசியல் மாற்றத்தை கொடுக்கும். ஊழல் என்னும் பெருச்சாளி இருந்தால் நாடு வளர்ச்சி பெறாது.
ஊழல் இல்லாத மோடி ஆட்சியில், உலகநாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.
ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஊழல் வழக்கில் பொன்முடிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சிறைக்கு செல்வார். ஊழல் வழக்கில் 6 மாதம் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு, எவ்வித மக்கள் பணிகள் செய்யாமலே, இலாகா இல்லாத அமைச்சராக மாதம் ரூ.1.05 லட்சம் ஊதியம் பெறுகிறார். அடுத்த 3 அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல உள்ளனர்.
2016-ம் ஆண்டு நீட்தேர்வு வந்தபிறகு ஏழை, விவசாய குடும்பத்தில் இருந்து மாணவர்கள் பலர் மருத்துவபடிப்பில் சேர்ந்துள்ளனர்.
தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.
5 முறை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. 5 அரசு மருத்துவக் கல்லூரிகள், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கியது. ஆனால் 9 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் தமிழகத்தில் 15 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட 2,250 மருத்துவ இடங்கள் உருவாக் கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிதியை பெருக்குவதற்காக தான் நீட்டை தி.மு.க. எதிர்க்கிறது. செவிலியர்கள், டெட் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியர் பணிக்காக காத்தி ருப்பவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என தமிழகத்தில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் 18 ஆயிரம் பள்ளிக் கூடங்களை கட்டினார். தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் வகுப்பறைகள் கட்டிடங்கள் இல்லாமல், ஒரே வகுப்பறையில் 1-ம், 2-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி நிலை உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஒரு ரேஷன் அட்டை மீதும் ரூ.3.61 லட்சம் கடன் உள்ளது.
மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்துவிட்டு, 20 சதவீதம் மின்கட்டணம், 30 சதவீதம் சொத்துவரி, பால், தயிர் விலைகளை உயர்த்திவிட்டனர். அப்படி என்றால், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க.பித்தலாட்டம் செய்கிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், மோடி தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றுள்ளார். திருக்குறள் பெருமையை பேசுகிறார். எனவே, 3வது முறையாக மோடியை பிரதமராக அவரது கரத்தை அனைவரும் வலுப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஓசூர்:
ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
- வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 75). விவசாயி.
இவர் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 சென்ட் இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி (58) என்பவர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சின்னசாமிக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.
இதுகுறித்து கோர்ட் உத்தரவின்படி நேற்று சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன் வயது (33)மற்றும் மாதன் மகள்களான 4 பேர், ஒரு வயது குழந்தையுடன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போர்களமாக மாறியது.
பின்னர் சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினர், போலீசாரிடம் வருகிற 8-ந்தேதி நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண்பதாக உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.
- போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அடுத்துள்ள செட்டிஅள்ளி என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ ஷோரூம் உள்ளது.
இங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் அகமத் (வயது 30) என்பவர் ஷோரூமில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 1,558 ஜோடி ஷூக்களை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு பெங்களூர் அருகே உள்ள அணுகுண்டன அள்ளி சௌக்கிய சாலையில் உள்ள மிந்த்ரா என்ற குடோனுக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் அகமத்தும் அவரது நண்பர்களும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஷூக்கள் இருந்த லாரியை குடோனுக்கு கொண்டு செல்லாமல் ராஜா பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு ஷூக்களை மறைத்து வைத்துள்ளனர்.
ஷூக்கள் ஏற்றி சென்ற லாரியை அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையில் நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். உரிய நேரத்தில் குடோனுக்கு ஷூக்கள் கொண்டு செல்லப்படாததால் ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று லாரியை திறந்து பார்த்த போது லாரிக்குள் ஷூக்கள் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஷோரூம் நிர்வாகத்தினர், அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் ஷூக்களை கடத்தி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஷூக்களை கடத்திய சுபான் பாஷா (30) மன்சூர் அலி (26) மற்றும் சஹீத்துல் ரகுமான் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் ராஜாபாளையம் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஷூக்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் அகமத் மற்றும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் அத்திப்பள்ளி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
- ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.
அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது.
- கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது31).
அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27). இவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கா பிரகாஷ் என்பவரை சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்து வந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் 3பேரும் பார்வதி நகர் என்ற இடத்தில் வந்தபோது பர்கத் மற்றும் சிவா ஆகிய 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்
முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹமித் (24) ஆகிய 2 பேரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
2 பேருக்கும் 15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பாலக்கோட்டில் சரண அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக்(27), சானசந்திரம் ஆரிப் (22) மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் (26) ஆகிய 3 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று இரவு ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை ஓசூரில் கைதான முனிராஜ், முபாரக், ஆரிப் நிஜாம் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த நவாஸ், ஹமித் ஆகிய 5 பேரும் சிக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






