என் மலர்
கிருஷ்ணகிரி
- எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும்.
- எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும்.
ஓசூர்:
ஓசூரில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அவரது சிலைக்கு.நேற்று பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது புகழேந்தி கூறியதாவது:-
மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நெஞ்சார பாராட்டுகிறேன். ரவுடிகள் சுடப்படுகிறார்கள் என்றால் அதனை நான் வரவேற்கிறேன். தி.மு.க. அரசு, யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரவுடிகளை சுட்டுத்தள்ள வேண்டும்.
அ.தி.மு.க வை ஒருங்கிணைக்க, வெறும் வாயால் பேசிக்கொண்டிருப்பதை விட மனதார அனைவரும் முன்வர வேண்டும். . எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும். இது எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும். அதற்காகத்தான் எங்கள் ஒருங்கிணைப்புக்குழு பாடுபட்டு வருகிறது. இது சரிப்பட்டு வரவில்லை என்றால் மக்கள் மத்தியில், அவர்கள் யார்? என்பதை தோலுரித்து காட்டுவதற்கு ஒருங்கிணைப்பு குழு தயங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, டாக்டர் ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கண்ணண்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 60). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர் பெங்களூர் பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சித்ரா கெட்டம்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சித்ரா அவரது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றார் . அதனை அறிந்த மர்ம நபர்கள் அன்று நள்ளிரவு சித்ராவின் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடி சென்றனர்.
மறுநாள் காலை சித்ராவுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், 750 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சித்ரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுரப்பன் (வயது 65). இவருடைய மனைவி தவமணி(60). இந்த தம்பதியினருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.
இவர்கள் பெங்களூர், ஓசூர் பகுதியில் சுவிட் கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வீட்டில் இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அங்கு வந்த மர்ம நபர்கள் இவர்கள் இருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு, அருகே உள்ள மற்றொரு அறையின் பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
மறுநாள் காலை கவுரப்பன் எழுந்து கதவை திறந்து பார்த்தபோது கதவின் வெளியே பூட்டு போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்து அருகே இருந்த அறையை திறந்து பார்த்தபோது போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 14 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கவுரப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், தடவியல் நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் ஒரே நாளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம், திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
- பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அத்திகானூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஒரு ஆசிரியையும், ஒரு ஆசிரியரும் மற்றும் தற்காலிக ஆசிரியர் ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கவிதேவி மத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதே ஆசிரியையை மீண்டும் அதே பள்ளிக்கு ஆசிரியையாக நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, `அத்திகானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
தற்போது நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அந்த ஆசிரியைக்கு மத்தூரில் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த ஆசிரியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து நல்ல முறையில் பாடம் கற்பித்து வருவதால் அவரை பணிஇடமாற்றம் செய்தால், எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.
மேலும், அடுத்துவரக்கூடிய ஆசிரியர்கள் இதுபோன்று நல்ல முறையில் கல்வி பயின்றுவிப்பார்களா? என்பது சந்தேகம் தான். எனவே, இந்த ஆசிரியை பணிஇடமாற்றம் செய்யக்கூடாது. உடனே அவரை மீண்டும் அத்திகானூர் அரசு பள்ளிக்கே பணியாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
- கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் உள்ள பெலவர்த்தியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (63). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த, ராமமூர்த்தி அருகில் கிடந்த கட்டையால் மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.
மகராஜகடை அருகே குடும்ப தகராறில் மூதாட்டியை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
- டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பண பரிவர்த்தணை நடைபெறாததால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலமாக உடைத்து அதில் இருந்த ரூ.14.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதே போல கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெல்லந்தூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 2 ஏ.டி.எம். மையங்களில் எந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரங்களை கொள்ளை கும்பல் உடைத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை நடந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து 3 மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வட மாநிலத்தில் அரியானா, கர்நாடகத்தில் கல்புர்க்கி, மற்றும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஓசூரில் ஏ.டி.எம். கொள்ளை நடந்த இடத்தினை, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூரில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக 40 போலீசார் கொண்ட, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பான முழு தகவல்களையும் மாவட்ட , எஸ்.பி.பத்திரிகையாளர்களுக்கு, நாளை(9-ம் தேதி) தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வென்றவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை லட்சுமணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவரது தாயாரின் வளர்ப்பில் இருந்து வந்தார் இவர் குடும்ப பாரத்தை குறைக்கவும், பள்ளிப்படிப்பிற்கும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த மைனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி தாக்கியதில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழந்தார்.
நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தாயார் தேடி சென்று அங்கு பார்த்த போது விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்தன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனந்தனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருந்த போதும், குடும்ப சுமையை குறைக்க கூலி வேலைக்கு சென்று அவரது தாயாருக்கு பெரும் உதவியாக இருந்த சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
- இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் 46 வயது நபர். தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த 66 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 ரூபாயை அனுப்பினார். ஆனால் அதன்பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு பர்மிட் போடும் உள்வழி ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது.
இந்த உள்வழி சோதனை சாவடியில் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் முற்றுகை இட்டனர்.
- ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சரியாக வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அகரம் ஊராட்சியின் துணை தலைவர் இரவோடு இரவாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் துணை தலைவரின் வீட்டிற்கு சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அகரம் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை திடீர் கிராம மக்கள் முற்றுகை இட்டனர்.
அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் அதே தவறை செய்துள்ளார். இதே நிலை நீடித்தால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
- பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
இந்த நிலையில் மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் எடை 1.292 கிகி, நீலம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.
தொல்லியல் சூழ்நிலை கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
- கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
- முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.
மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.
இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.
தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






