என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
    • பாலியன் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது.


    ------------

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

    அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு விரைகிறது.

    அதன்படி, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது. இந்த குழு நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது.

    2 நாட்கள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள அத்திபள்ளம் பகுதியில் பாம்பாறு ஆற்றங்கரையோரம் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த முருகன் கோவிலில் ஆடி 1-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர். அப்போது கோவிலுக்குள் சத்தம்வரவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த பார்த்தபோது, மர்ம நபர் 4 பேர் பணம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார்.மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 23) என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கைதான பூவரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்க சமயத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோவிலில் நடைபெற இருந்த திருட்டு சம்பவத்தை தடுத்ததால், உண்டியல் பணம், நகைகள் திருடு போகமால் தப்பியது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.
    • 5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசிஉள்ளோம்.

    கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.

    விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. புகார் கிடைக்கப் பெற்றதும் 4 தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளி உள்பட 11 பேரை கைது செய்துள்ளோம்.

    கல்வித்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோவில் கைது செய்துள்ளோம்.

    வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என்றும், இதுபோன்ற முகாம்கள் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளதா எனவும் விரிவான விசாரணையை கல்வித்துறை தொடங்கியுள்ளது.

    பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.

    என்சிசி மூலமாக இந்த முகார் நடத்தப்படவில்லை, இதுகுறித்து என்ிசி விளக்கம் அளித்துள்ளது. என்சிசியிடம் எந்தவித அனுமதி கடிதமும் பெறாமல் இந்த முகாம் நடத்தி உள்ளனர்.

    5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசிஉள்ளோம். மாணவிகள் அனைவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
    • மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் புகார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.

    இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.

    பின்னர் பள்ளி நிர்வா கத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

    இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் சிவராமனின் உறவினார்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன.
    • பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன. இதில் குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது வனப்பகுதி உள்ளே பெட்டமுகிலாளம் மற்றும் கொடகரை ஆகிய மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் நிற்பது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று அய்யூர் வன அலுவலகத்தில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து வந்த வழியில் திரும்பி சென்றனர். சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் மலை கிராமங்களுக்கு சென்ற பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு அந்த சாலை வழியாக சென்றனர். தினந்தோறும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கிராம மக்கள் சந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது.

    • 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.
    • பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் உயிரிழப்பு.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சின்ன ஆலரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவர் நாட்டுக்கோழி குஞ்சுகளை பண்ணையில் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் அவரது பண்ணையில் இருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    ஒவ்வொரு கோழியும் சராசரியாக 3 கிலோ எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாஸ்கருக்கு ரூ.18 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

    இது குறித்து பாஸ்கர் கூறுகையில், கனமழையால் பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் மூச்சுத்திணறி இறந்துவிட்டன. இதனால் நான் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளேன் என்று கூறினார்.

    • டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.

    இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட மாநில தொழிலாளியிடம் நான்கு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
    • நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் சென்றது.

    இதன் பேரில், மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி. பாபு பிரசாந்த் அறிவுறுத்தலின்படி பாகலூர் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் .

    இந்த நிலையில், பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வட மாநில தொழிலாளியிடம் நான்கு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் பாகலூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் (20 ), லிக்கித் (20), சூடாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    • தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.
    • பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவம்பட்டி கிராமத்தில் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவம்பட்டி ஊராட்சி, கண்ணன்டஅள்ளி ஊராட்சி, நாகம்பட்டி ஊராட்சி மற்றும் பொம்மே பள்ளி ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.

    சுமார் 10 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் படிக்கட்டில் ஏற முடியாமல் சில மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு மேலே ஏறிச் சென்று மனு கொடுத்தனர்.

    மேலும் சில மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகள் ஏற முடியாமல் திணறியதால், அவர்கள் மனுக்களை அளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும் முதியவர்களும் பலர் படிகட்டுகள் ஏற முடியாமல் தாங்கள் கொண்டு வந்த மனுவை அளிக்காமல் திரும்பி சென்றனர். பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, இதெல்லாம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என மெத்தனப்போக்கில் பதில் அளித்தார்.

    • மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
    • தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    ஓசூர்:

    ஓசூரில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா உணவகம் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அம்மா உணவகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவர் மேலும் பல கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    பல மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதகாக அமையும். மத்தியில் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல.

    சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் நாற்காலியை தள்ளி விடுவார்கள். நாட்டில் எதிர்கட்சிகள் வலுப்பெற்றுள்ளன. ஜனநாயகம் தழைத்தோங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, ஜெயசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி. டேம், மகராஜகடை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    ஓசூர் உட்கோட்டத்தில் ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலூர், பேரிகை, சூளகிரி, நல்லூர் ஆகிய 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இதேபோல பர்கூர் உட்கோட்டத்தில் பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய 5 போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, மத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இதைத் தவிர ஓசூரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகமும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, பர்கூரில் தலா ஒரு மகளிர் போலீஸ் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

    இதில் பலர் உட்கோட்டத்திற்குள் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சிலர் உட்கோட்டம் விட்டு மற்றொரு உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, போலீசார் பலர் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இடமாறுதல் கோரி, விண்ணப்பித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்ற உத்தரவு வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.

    • 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

    ஓசூர்:

    சேலம் சரக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் தளி ஆனேக்கல் சாலையில் உள்ள உச்சனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடை கொண்ட, 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து வேனை ஓட்டி சென்ற தளி கும்பார் வீதியை சேர்ந்த அல்லாபகாஷ், (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

    ×