என் மலர்
கிருஷ்ணகிரி
- கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை.
- எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம்.
கிருஷ்ணகிரி:
நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் கரு.பிரபாகரன் இன்று அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எவ்வளவோ நடக்குது வலி தாங்க முடியல. கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை
ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் எளிமையான கட்சின்னு சொல்றீங்க... உங்களுடைய வீட்டில் 5 கார், 3 பேருக்கு 15 வேலை ஆட்கள், மாதம் 2.5 லட்சம் வாடகை என சொகுசாக வாழ்கிறார்கள்.
எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம். இனி யாரும் உங்கள் இளமையை அழித்து விடாதீர்கள்.
கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்று கூறினர்.
- தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது.
- தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கூத்தனபள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் யூனிட் பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது.
இந்த தீ மளமளவென பரவியதால், தொழிற் சாலையில் கெமிக்கல் யூனிட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், அங்கிருந்த பொருட்கள் எரிந்து முழுவதும் நாசமானது.
தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது. முதற்கட்டமாக தீயை அணைக்க தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தொழிலாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அப்போது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், தொழிலாளர்களால் அந்த தீயை அணைக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் 2 பணியாளர்களுக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்களை உடனே சக ஊழியர்கள் மீட்டு தொழிற்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக தெரிகிறது.
இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் அதிகாலை ஷிப்ட் முறைப்படி 1500 பணியாளர்களுக்கு பதிலாக 2000 பணியாளர்கள் பணியாற்றியதால், தீவிபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கெமிக்கல் யூனிட்டில் தீ விபத்து என்பதால், தீ விபத்தில் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.
குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கணேஷ், குமார் பலியானார்கள்.
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றான் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார், அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன பஸ் டிரைவரும், ஜி.பி.தொட்டே கானப்பள்ளியைச் சேர்ந்தவருமான சீனிவாசன் (வயது35) என்பவரை கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
- விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் மோதி ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பொதுமக்கள் 10 பஸ்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலாவதி. இவர் போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நண்பர்களான குமாரும், கணேசும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர்.
ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.
அப்போது குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கெலமங்கலம் கூட்ரோடு வழியாக வந்தபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே காயமடைந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தவிர்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது கிராம மக்கள் கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையில் வேகத்தடை இல்லாததும், டாடா தனியார் கம்பெனி பேருந்துகள் அதிவேகமாக செல்வதும் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் இந்த கம்பெனி பஸ்கள் இதுபோன்று ஏராளமான விபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் மற்றும் ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்
முன்னதாக தனியார் நிறுவன வாகனங்களில் வந்த ஊழியர்களை போலீசார் பத்திரமாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போடிச்சிபள்ளி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
- கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35 )என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் சென்னை உயரநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
இவர் கப்பல்வாடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவன் நேற்று மாலை சக்கில்நத்தம் கிராமத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருது மாந்தோப்பில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இதனால் அங்கு சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்படடோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் 6 மணி நேரம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் டி.எஸ்.பி. முரளி கிராம மக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து மாந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றிய பர்கூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மாந்தோப்பு பகுதிகளில் தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு யாராவது சிறுவனை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரிய அலேரஹள்ளி பகுதியை சேர்ந்த பாதுஷா என்பவருடைய மகன் சவுகத் அலி (வயது 31).
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்தவரும் அத்தை மகனான முஸ்தபாவுக்கும், சவுகத் அலிக்கும் ஆகிய இருவருக்கும் நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சவுகத்அலி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முஸ்தபாவின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி உள்ளார்.
இதில் ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.
- குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
- தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அருகே பூக்கடை, எலெக்டரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை, பேன்சி ஸ்டோர் கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் கோவிலையொட்டி அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். அதன் அருகே ஜெயராமன் என்பவர் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை 2 பேரும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். அப்போது திடீரென்று குமாரின் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடையில் இருந்து புகை வெளியேறியது. இந்த புகை சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
அப்போது குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
உடனே கடையில் இருந்து வெளியே குமாரும், ஜெயராமனும் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் தீ மளமளவென பரவி கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதற்குள் குமாரின் கடையில் இருந்த பழைய எலெக்ட்ரிக்கல் பொருட்களும், ஜெயராமன் கடையில் இருந்த பேன்சி பொருட்களும் முழுவதும் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீப்பற்றி கொண்டதா? அல்லது வேறு யாரவாது தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு.
- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு காலநிலை செயல்திட்டத்தில் சத்தமில்லாமல் சாதிக்கும் ஒரு நிறுவனம்
சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் தொலைநோக்கு திட்டத்துடன் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலப்பரப்பை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வளப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை விளைநிலங்களில் நட்டு தமிழகத்தின் காலநிலை மாற்ற செயல்திட்டத்துக்கு பங்காற்றியுள்ளது. இயற்கையை மீட்டெடுப்பது மற்றும் நகர்ப்புற மக்களை அதனுடன் மீண்டும் இணையக்கூடிய சூழலை உருவாக்குவதே பைஜுவின் முக்கிய நோக்கம் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. 'நிர்வகிக்கப்பட்ட விளை நிலங்களை' சந்தைப்படுத்தும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், சான்க்டிட்டி ஃபெர்ம் நிறுவனம் தனது உண்மையான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளது. முதல் மூன்று கட்டங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலங்கள், மனநிறைவோடு நிலத்தை வாங்கிய நூற்றுக்கணக்கான உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் இதற்கு நேரடி சான்று.
இயற்கை மற்றும் நிலையான வாழ்வுக்கான பைஜு வின் அர்ப்பணிப்பு:
"சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது மரங்களை நடுவது மட்டுமல்ல; மக்களும் இயற்கையும் இணக்கமாக வாழும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியது" என்கிறார் பைஜு . 300 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையான இயற்கை உணவு உற்பத்தி காடாக மாற்றி நிலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையான விவசாய நடைமுறைகளுக்கான தமிழ்நாட்டின் முயற்சிகளுடன் இணைந்து, நிலையான ஆதாரத்தை வழங்கியுள்ளது. இந்த பண்ணையில் தற்போது 150 க்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறி வகை பயிர்கள் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.
ஒரு தனித்துவமான கூட்டணி : தொழில்நுட்பத்திலிருந்து இயற்கைக்கான பயணம்
பெங்களூருவில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பைஜு, விவசாயத்தின் மீது எப்போதுமே ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத் துறையில் இருந்து இயற்கையை மறுமலர்ச்சி அடைய வைக்கும் அவரது பயணம் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அன்பு மற்றும் அமைதியான, நிலையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான விருப்பத்தின் உந்துதலால் ஏற்பட்டதாகும். சூளகிரியில் அவர் உருவாக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பு, அவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக திகழ்கிறது.
"தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் இருந்து பண்ணையை நிர்வகிப்பதற்கு மாறுவது என்பது நம்பிக்கையின் பாய்ச்சலாக இருந்தது. ஆனால், நான் எடுத்த முடிவுகளில் இது மிகவும் மனநிறைவான முடிவு" என்கிறார் பைஜு. "சான்க்டிட்டி ஃபெர்மில், நாங்கள் உணவுக்கான தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்ல; நாங்கள் ஒரு சமூகத்தை வளர்த்து வருகிறோம், பல்லுயிர்ப் பெருக்கத்தை வளர்த்து வருகிறோம். மேலும், ஆரோக்கியமான ஒரு கோளுக்கு (planet) பங்களிக்கிறோம்" என அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காலநிலை ஆய்வுகளுடன் இணைந்து செயல்படுவது:
சான்க்டிட்டி ஃபெர்மின் முயற்சிகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்களை வலுவாக பிரதிபலிக்கக்கூடியவை. இவை இரண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. இந்த இரண்டு அமைப்புகளின் பணிகள் மாநிலத்தின் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துவது மற்றும் வனப்பகுதியை கணிசமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சான்க்டிட்டி ஃபெர்மின் பணி என்பது இந்த மாநிலத்தின் பரந்துபட்ட முயற்சிகளின் நுண்ணிய வடிவமாக செயல்படுகிறது. "நாங்கள் பொதுவான நோக்கத்தை மாநிலத்தின் தலைமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். பசுமையான, நிலையான தமிழ்நாட்டுக்கான பார்வை அது" என்று பைஜு குறிப்பிடுகிறார்."
சமூக ஈடுபாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
சான்க்டிட்டி ஃபெர்ம், சூளகிரியில் உள்ள உள்ளூர் மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பண்ணையை 300 ஏக்கரில் இருந்து கிட்டத்தட்ட 600 ஏக்கராக விரிவுபடுத்தும் திட்டத்துடன், உள்ளூர் மக்களில் 250 பேருக்கு இந்த திட்டம் வேலையை வழங்கியுள்ளது. இந்த விரிவாக்கம், கிருஷ்ணகிரியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும். இது பற்றிக் குறிப்பிடும் பைஜு, "நாங்கள் பண்ணையை மட்டும் உருவாக்கவில்லை; ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்" என்கிறார் பெருமிதத்துடன்.
"இயற்கைக்கு இசைவாக மக்கள் பணிபுரிய, வாழ மற்றும் செழித்து வளரக்கூடிய இடத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். எங்களுக்கு உள்ளூர் சமூகத்தின் ஆதரவு அமோகமாக உள்ளது. நாங்கள் வளர வளர அதற்கேற்ற வகையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதற்கு உறுதி ஏற்றுள்ளோம்" என மேலும் கூறுகிறார் பைஜு.

சான்க்டிட்டி ஃபெர்மை அனுபவியுங்கள்: இயற்கையின் சரணாலயம்
சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது நிர்வகிக்கப்படும் விளைநிலம் மட்டுமல்ல; நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது ஓர் அற்புத அனுபவம். வார இறுதியில் இந்த விவசாயப் பண்ணையில் பொழுதைக் கழிக்கலாம், இயற்கையான சூழலுடன் தடையின்றி நம்மை ஒன்றிணைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகளில் தங்கலாம். அமைதியான ஓய்வு அல்லது புத்துணர்ச்சிக்கான விடுமுறையை விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். குதிரை சவாரி மற்றும் மலையேற்றப் பாதைகள் முதல் பருவகால அறுவடை திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரை அனைத்தும் நடக்கிறது. ஒரு கைவிடப்பட்ட குவாரியை அழகான பொழுதுபோக்கு பகுதியாக மாற்றியிருக்கிறோம் இங்குள்ள கொலோசியம் (Colosseum) ஓர் அற்புதமான பகுதி. இது நீச்சல் குளம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. "சான்க்டிட்டி ஃபெர்மின் அமைதியான அரவணைப்பில் மூழ்கி, மறக்க முடியாத அனுபவங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்" என அழைப்பு விடுக்கும் பைஜு.

நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரி
சான்க்டிட்டி ஃபெர்மில், விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், வாத்துகள், முயல்கள், கோழிகள் மற்றும் குதிரைகள் உள்ளன. இவை அனைத்தும் பண்ணையின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயிரி உரம் மற்றும் இயற்கை உரங்கள் போன்ற இயற்கை வேளாண்மை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"உங்கள் கனவு இல்லத்தை 15% நிலத்தில் கட்டுவது என்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குவதைவிட அதிக மதிப்புமிக்கது" என்கிறார் பைஜு. "இயற்கை சுற்றுச்சூழலை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் உங்கள் கண்ணோட்டத்தை உயிர்ப்பிப்பதைப் போன்றது. தடையற்ற கட்டுமானப் பயணத்திற்கு நாங்கள் அதற்கான உதவியை வழங்குகிறோம். உண்மையிலேயே வீடு போல் உணரும் ஒரு சரணாலயத்தை உருவாக்க உங்களை வழிநடத்துகிறோம்." என்கிறார் பைஜு.
பசுமை வளர்ச்சியில் பாரம்பரியத்தை உருவாக்குதல்
ஃபெர்ம் போன்ற திட்டங்கள், தனிநபர் முயற்சிகள் எவ்வாறு பரந்த சுற்றுச்சூழல் இலக்குகளுடன் இணைந்து, நிலையான மற்றும் அற்புதமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு வலிமையான எடுத்துக்காட்டுகளாக செயல்படுகின்றன. இயற்கையின் மடியில் உள்ள அமைதியான சரணாலயமான சான்க்டிட்டி ஃபெர்மில் அமைதியைப் பெறுங்கள். அங்கு நிலையான வாழ்க்கை என்பது வெறும் கருத்து மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்" என்று உற்சாகமாக கூறி முடித்தார் பைஜு.
வருங்கால குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு
"ஒவ்வொரு சொத்தும் ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்களுடன் தங்கியிருப்பது அசாதாரணமானது அல்ல. எங்களின் நிர்வகிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அமைதியில் மூழ்கி, எங்கள் கட்டடக்கலை அதிசயங்களின் வசதி மற்றும் அழகியலில் பொழுதை கழியுங்கள்" என்கிறார் பைஜு.
நான்காம் கட்ட திட்டம் செயல்பாட்டில் இருப்பதாலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டங்கள் பற்றிய திட்டமிடுதல் இருப்பதாலும், சான்க்டிட்டி ஃபெர்ம் அதன் வளர்ச்சியையும் தாக்கத்தையும் தொடர, தயாராக உள்ளது. சான்க்டிட்டி ஃபெர்ம், சுற்றுச்சூழலின் மிகப் பெரிய இலக்குகளுக்கு பங்களிப்பதில் தனிப்பட்ட செயலின் வல்லமைக்கு ஒரு சான்று எனலாம். பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் மற்றவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள சான்க்டிட்டி ஃபெர்ம் அழைக்கிறது.
- நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டார்.
- இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வட்டாரத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அப்பழுக்கற்ற பணி செய்து இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் 10 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
- பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் பகுதியில் தர்மபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகள் நேரடியாக தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. அதனை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இரும்பாலான பேரிகார்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பேரிகார்டை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதனை திருடிச் சென்றனர். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது மர்மகும்பல் சரக்கு வாகனத்தில் வந்து இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது.
- பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர்.
போச்சம்பள்ளி:
திருப்பத்தூர் டிப்போவிற்கு உட்பட்ட 13-பி அரசு பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை நாள்தோறும் இயக்கப்படுகிறது.
பல்வேறு சிறு கிராமங்களின வழியாக சென்று வரும் இந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை போச்சம்பள்ளி வந்த பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது. பயணிகள்
பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர். மேலும் ஆபத்தான முறையில் உள்ள இந்த படிக்கட்டு ஒரு வார காலமாக இதே நிலையில் இருப்பதாகவும், இதனை சீர்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆபத்தான முறையில் தொடர்ந்து ஒரு வார காலமாக பயணித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே இந்த உடைந்த படிக்கட்டுக்கள் சீர்படுத்து பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டுவரவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






