என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.

    தேன்கனிக்கோட்டை:

    கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.

    அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.

    காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாட மாடரஅள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பது மகன் வீரா (வயது 33).

    இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வருகின்றார்.

    தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் வீரா சொந்த ஊருக்கு வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வேலு. இவருடைய மனைவிக்கும், வீராவிற்கும், கள்ள தொடர்பு இருப்பதாக கூறி நேற்று வேலு விடுமுறையில் ஊருக்கு வந்த வீராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீராவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வீராவிற்கு கை, விரல்கள், தலை, கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது வீராவின் அலறல் சத்தம் அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து வீரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர். 

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.
    • மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    போதையின் பாதையில் இளைஞர்கள் சென்று விடக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிவுரை வழங்க அவருக்கு தகுதியில்லை.

    அதேபோல, கடந்தகால அ.தி.மு.க., அரசு மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் பேசியுள்ளார்.

    ஆனால் அ.தி.மு.க., அரசுதான் தமிழகத்தின் மதிப்பை உயர்த்தியது. அதனால்தான் மத்திய அரசு பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கியது.

    மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    ஆனால் தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சி நடத்திவரும் தி.மு.க., அரசு அப்படியில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு குறித்து மேடையில் வீராப்பாக பேசிவிட்டு, தனியறையில் மோடியிடம் மண்டியிட்டு, மெட்ரோ திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளார். மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட எண்ணேகொள்புதூர் வலது, இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி மந்தமாகியுள்ளது. நிதி ஒதுக்கவில்லை, நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.

    இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுமாறு வலியுறுத்தியுள்ளேன்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பெரியார் கட்அவுட் வைத்துள்ளனர். அவரில்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது. மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள்.

    கடந்த காலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவி இது போன்று பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சி தொடங்கினார். தற்போது நடிகர் விஜய்யும் அதேபோன்று மாநாடு நடத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் சந்தனப்பள்ளி, தல்சூர் ஆகிய கிராமங்களில் 2 யானைகள் முகாமிட்டு ராகி பயிர்களை நாசம் செய்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குருபட்டி கிராமத்தில் மூர்த்தி என்பருடைய 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த தாக்காளி, ராகி தோட்டங்களை பார்வையிட்டனர். தக்காளி விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்து உள்ளதால் விவசாயி மூர்த்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், இந்த பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
    • உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    தளி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பருவநள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது54). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஒரு வீடு எடுத்து அருணாச்சலா மெடிக்கல் என்ற கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

    10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஆங்கில கல்வி ஏதும் பயிலாமல் அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்துள்ளார்.

    இதுகுறித்து இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கிருஷ்ணகிரி மருத்துவர் தர்மருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கைதான அங்கமுத்து

    கைதான அங்கமுத்து

    அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையில் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் இளம் பிரதி உள்பட மருத்துவ குழுவினர் கோட்டையூர் கிராமத்திற்கு சென்று அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் அங்கமுத்து 10 வகுப்பு வரை படித்துவிட்டு அரசு விதிகளுக்கு புறம்பாக போலியாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதனையடுத்து மருத்துவ குழுவினர் போலி மருத்துவர் அங்கமுத்துவை பிடித்து அஞ்சடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    அதேபோல், கோட்டை யூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் அருணாச்சலா ஆகிய இரு மருந்து கடைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அங்கு உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1,718 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 1,670 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இன்று அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4160 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகளும் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வருகிறது.

    இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ரசாயன நுரை குவியல், குவியலாக வெளியேறி காற்றில் பறந்து விவசாய நிலங்களில் படர்வதால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

    ரசாயன நுரையுடன் பாய்ந்து செல்லும் வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு நுரை காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    • மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.
    • மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

    சூளகிரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    கடந்த சில தினங்கான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 10 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை விடியவிடிய இன்று காலை வரை பெய்துள்ளது.

    சூளகிரி, காமன் தொட்டி, அட்டகுறுக்கி, கோனேரி பள்ளி, சப்படி, ஓசூர், ஜூஜூவாடி, பேரிகை பாகலூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்பட பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்.

    இரவு பெய்த மழையால் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.

    இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலையை எளிதில் கடந்து சென்று விடலாம் என்று எண்ணி அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் தண்ணீர் நிரம்பி ஸ்டாட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஓசூருக்கு வேலைக்கு செல்லும் ஏராளமானோர் கடும் சிரமம் அடைந்தனர். வாகனத்தை சாலையோரம் உள்ள கடைகளில் நிறுத்தி விட்டு அவர்கள் பேருந்தில் ஏறி சென்று விட்டனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்ததால் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

    • கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது52). தொழிலாளியான இவர் சாலமரத்துப்பட்டி பகுதியில் இருந்து சந்தூர் நோக்கி செல்ல அரசு பஸ்சில் கும்மனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கினார்.

    அப்போது ஊத்தங்கரை பகுதியில் இருந்து ஓலைப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாகரத்தியாகவும் ஓட்டி வந்து கிருஷ்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    உயிரிழந்த நிலையில் இறந்த கிருஷ்ணன் என்பவர் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை ஓட்டியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊத்தங்கரை-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களிடம் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகன ஓட்டி ராகுல் காந்தி (32) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில அடைத்தனர்.

    இதேபோன்று அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணனின் உறவினர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    சேலத்தில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் இருந்து நேற்று நள்ளிரவு பார்சல் பொருட்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. அந்த வேனை ஓமலூரைச் சேர்ந்த டிரைவர் வீரமணி (வயது36) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த வேன் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டிநாய்க்கனபள்ளி அருகே வந்தபோது திடீரென்று வண்டியில் இருந்து புகை வெளியேறியது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உடனே டிரைவர் வீரமணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே டிரைவர் வீரமணி வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டு பார்த்தபோது வேனில் திடீரென்று தீப்பிடிக்க தொடங்கியது.

    அப்போது அவர் அந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால், அவரால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் அந்த வண்டி முழுவதும் தீ பரவியது.

    இதுகுறித்து வீரமணி கிருஷ்ணகிரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அந்த வழியாக சென்றவர்கள் டிரைவருக்கு உடனே தகவல் தெரிவித்தால், அவர் வண்டியை சாலையோரம் நிறுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் வீரமணிக்கு எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினார். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தால், சில பார்சல் பொருட்கள் எரியாமல் மீட்கப்பட்டது.

    இந்த தீ விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்தபோது, பார்சலில் யாரோ பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்கள் அனுப்பி வைத்தள்ளனர். அந்த பார்சலில் இருந்து தான் தீப்பிடிக்க தொடங்கி மற்ற பொருட்கள் மீது தீ பரவியது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

    நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×