என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
    • வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரசந்தையாகும் இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதான தொழிலாக உள்ள நிலையில் வறட்சி காலங்களில் விவசாயம் பொய்த்து போனாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.

    இவ்வாறாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொழுது அந்த ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஆடுகளை கோவில் விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், ஆடுகளை வளர்ப்பதற்காகவும் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போச்சம்பள்ளி வார சந்தை தேடி ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்,

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரார் மணிகண்டன் (வயது35) என்பவர் ஆடுகளை வளர்க்க கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை சுமார் ரூ.2.38 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதில் 8 ஆடுகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டது. அப்போது அந்த ஆடுகளின் வயிற்றில் மண் கரைசல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து மணிகண்டனுக்கு ஆடுகளை விற்ற கரகூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரிகள் சரிவர பதிலளிக்காமல் மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் அவரது உறவினருடன் போச்சம் பள்ளி வாரசந்தையில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆடு வியாபாரிகளின் தொழில் போட்டியின் காரணமாக சிலர் ஆட்டின் வாயில் சேற்று தண்ணீரை கரைத்து வாயில் ஊற்றி அதன் எடையை அதிகரித்து காட்டுகின்றனர். சிலர் இந்த மோசமான செயலால் ஈடுபட்டு வருவதால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

    வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதும், கடந்த 2018-ம் ஆண்டு, போலி டாக்டர் என இவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
    • நடராஜ் என்ற பெயரில் கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியில் மெகபூப் வளி என்பவர் 10-ம் வரை படித்து விட்டு பொதுமக்களுக்கு மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினருக்கு புகார்கள் சென்றன.

    அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி, சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜூவ்காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ராம் நகரில் உள்ள கிளினிக்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது மெகபூப்வளி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதும், கடந்த 2018-ம் ஆண்டு, போலி டாக்டர் என இவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவத்துறையினர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போலி டாக்டர் மெகபூப் வளியை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரை, ஊசி ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து கிளினிக்கை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி, பழைய பேட்டை அருந்ததி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது42).

    இவர் அதே பகுதியில் நடராஜ் என்ற பெயரில் கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார். மருத்துவம் படிக்காமல் இவர் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்றன.

    இதையடுத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சண்முகவேல் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் கிளீனிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜ் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. சண்முகவேல் அளித்த புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    • ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
    • யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஓட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட கூலி தொழிலாளி அனுமய்யா (வயது44). இவர் இன்று அதிகாலை கட்டிட வேலை செய்வதற்காக தனது கிராமத்திலிருந்து அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது ஆலஹள்ளி கிராமத்தின் அருகே அவர் நடந்து சென்றபோது அப்பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினர். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

    இதனையடுத்து அங்கு நின்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலஹள்ளி, ஒட்டர்பாளையம், மணியம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்த யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார்.
    • வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே மாதம்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (வயது 65). மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி தாசில்தார் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம், ஒட்டப்பட்டி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது.
    • மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாஜகவுடன் கூட்டணி இல்லை.

    * ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்.

    * அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது.

    * பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.

    * பாராளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை தெளிவுபடுத்தி விட்டோம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். அதை தவிர்த்து தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டாம்.

    * மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    * நான் வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான்.

    * ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக கட்சி தான்.

    * அதிமுக ஆட்சியில் தான் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சி தலைவி காலத்திலும், அம்மா மறைவுக்கு பின் அம்மாவுடைய அரசும் சரி நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க அதிமுக அரசு தான் காரணம் என்று கூறினார்.

    • மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.
    • கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கவுரி (வயது 34). இவர், ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கி இருந்து கிளினிக், லேப் மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். டி-பார்ம், பி.இ.எம்.எஸ். வரை மட்டுமே படித்த இவர், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

    அதே போல் இவரது கிளினிக்கில் வேலை பார்த்து வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிலம்பரசி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு அவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மூக்கண்டப்பள்ளி அரசனட்டி பகுதிக்கு சென்று கவுரி நடத்தி வந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் கவுரியும், சிலம்பரசியும் போலி டாக்டர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிருஷ்ணகிரியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
    • நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

    பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.

    தேன்கனிக்கோட்டை:

    கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.

    அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.

    காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாட மாடரஅள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பது மகன் வீரா (வயது 33).

    இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வருகின்றார்.

    தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் வீரா சொந்த ஊருக்கு வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வேலு. இவருடைய மனைவிக்கும், வீராவிற்கும், கள்ள தொடர்பு இருப்பதாக கூறி நேற்று வேலு விடுமுறையில் ஊருக்கு வந்த வீராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீராவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வீராவிற்கு கை, விரல்கள், தலை, கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது வீராவின் அலறல் சத்தம் அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து வீரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர். 

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.
    • மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    போதையின் பாதையில் இளைஞர்கள் சென்று விடக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிவுரை வழங்க அவருக்கு தகுதியில்லை.

    அதேபோல, கடந்தகால அ.தி.மு.க., அரசு மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் பேசியுள்ளார்.

    ஆனால் அ.தி.மு.க., அரசுதான் தமிழகத்தின் மதிப்பை உயர்த்தியது. அதனால்தான் மத்திய அரசு பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கியது.

    மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    ஆனால் தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சி நடத்திவரும் தி.மு.க., அரசு அப்படியில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு குறித்து மேடையில் வீராப்பாக பேசிவிட்டு, தனியறையில் மோடியிடம் மண்டியிட்டு, மெட்ரோ திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளார். மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.

    கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட எண்ணேகொள்புதூர் வலது, இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி மந்தமாகியுள்ளது. நிதி ஒதுக்கவில்லை, நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.

    இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுமாறு வலியுறுத்தியுள்ளேன்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பெரியார் கட்அவுட் வைத்துள்ளனர். அவரில்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது. மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள்.

    கடந்த காலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவி இது போன்று பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சி தொடங்கினார். தற்போது நடிகர் விஜய்யும் அதேபோன்று மாநாடு நடத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×