என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது.
    • சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி வழிந்ததால் சுமார் 22 கிராமங்கள் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து ஊத்தங்கரையில் 50 செ.மீ அளவு மழை பொழிந்தது.

    இதன் காரணமாக ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதில் ஒரு ஏரியான பரசன ஏரி நிரம்பி அதன் உபரி நீர் ஊத்தங்கரை நகர பகுதி, பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளம் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பேரூராட்சி திருமண மண்டபம், தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் 2-வது நாளாக இன்றும் மழை அவ்வப்போது பெய்து வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, நிவாரண உதவி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.

    ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 111 ஏரிகள் நிரம்பி உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள தரைபாலங்கள் மூழ்கியது. இதனால் கீழ்குப்பம், காட்டேரி, அனுமன்தீர்த்தம், காரப்பட்டு, கல்லாவி, சாமல்பட்டி உள்ளிட்ட 22 கிராமங்கள் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது.

    மேலும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.




    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது. மேலும், ஊத்தங்கரை பகுதியில் இன்றும் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.

    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோன்று போச்சம்பள்ளியில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிதால், பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம், ஆடுகள், கோழிகள் அடித்து செல்லப்பட்டன.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி கரையோர வசிக்கும் பொதுமக்களையும் பேரிடர் மீட்பு பணி குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    அரூரில், திரு.வி.க. நகர் மேற்கு, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, அம்பேத்கர் நகர் புது காலனி, ஆத்தோர வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அவதியடைந்தனர்.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால், சங்கிலிவாடி ஏரி, கோணம்பட்டி ஏரி மற்றும் எல்லப்புடையாம்பட்டி, செல்லம்பட்டி, லிங்காபுரம், பெரமாண்டப்பட்டி, மாம்பட்டி, கணபதிப்பட்டி ஏரிகள் நிரம்பின. அரூரில் 90 சதவீதத்திற்கு மேலான ஏரிகள் நிரம்பின.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

    தடுப்பணைகள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் விளை நிலங்களில் புகுந்தும், தேங்கியும் உள்ளது. மேலும், சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் மற்றும் திருப்பாறை நீரில் மூழ்கியுள்ளது.

    இதேபோன்று அரூரை அடுத்த சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது, வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சித்தேரி மலை கிராம பகுதி முழுவதும் செல்வதற்கு வழியில்லாமல் துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனே அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருக்கம்பட்டி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பீன்ஸ், மஞ்சள், நெல், கொள்ளு உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு காத்திருந்த நேரத்தில், தொடர் மழை காரணமாக 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த எல்லா பயிர்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், விவசாய நிலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதேபோன்று வாச்சாத்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர் வெளியேற வழியின்றி உபரிநீர் வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வார்சாத்தி, கூக்கடப்பட்டி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

    வத்தல் மலையில் பெய்த கனமழையால், நேற்று அதிகாலை முதல், காட்டாற்று வெள்ளம் உருவாகி, நீரோடைகள் வழியாக மலை அடிவாரத்திலுள்ள தடுப்பணைகளில் சீறி பாய்ந்தது. இதில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதனால், வத்தல் மலையிலுள்ள, 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பகுதியில், தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், லோகநாதன் ஆகியோர் தலைமையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டனர். இதனால் பாலம் அமைத்து போக்குவரத்து சீரானது.

    இதேபோன்று பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் ஊர் ஏரி கனமழை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பையர் நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடையுடன் கலந்த மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதே போல பொம்மிடி அருகே உள்ள கோட்டை மேடு என்ற இடத்தில் வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் ஆங்காங்கே அடைப்பை ஏற்படுத்தி வயல்வெளிக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    கோட்டைமேடு தரைப்பாலம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டு ஆற்று வெள்ளம் அடித்து செல்லப்பட்டதால், துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள கிராம மக்கள் போக்குவரத்து வழியில்லாமல் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் இந்த பகுதியில் உள்ள 8-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமானது.

    • ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
    • சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும்.

    சிங்காரபேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

    இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.
    • கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

    சிங்காரபேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 50 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் ஊத்தங்கரை அருகே உள்ள பரசன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரி உடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.

    இந்த ஏரியின் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரி, கார்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏரியின் அருகில் உள்ள அண்ணாநகர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    இந்த வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஊத்தங்கரை பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் முகாமில் தங்க வைத்து இருந்தவர்களை ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

    அப்போது அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து சிறியது முதல் கனரக வாகனங்கள் வரை கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.

    கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.

    இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.

    உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.

    நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
    • விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.

    இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் வீரசெட்டி ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • நாட்டு துப்பாக்கி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அருகே குந்துக்கோட்டை கிராமம் வீரசெட்டி ஏரி பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் மேற்பார்வையில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், போலீசார் வெள்ளச்சாமி, முனியப்பன் ஆகியோர் கொண்ட போலீசார் வீரசெட்டி ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீசாரை கண்டு ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அவரை பிடித்து விசாரித்தில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். விசாரணையில் அவர் பெயர் வீரசெட்டி ஏரி பகுதியில் வசிக்கும் சின்னசாமி மகன் மாரியப்பன் (வயது55) என்பதும், விவசாய பயிர்களில் அவரை, துவரை செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்துள்ளது தெரியவந்தது. அப்போது பயிர்களுக்குள் மறைத்து வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து துப்பாக்கியையும் பயிர்களுக்கு இடையே வளர்த்திருந்த 30 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்தனர். மாரியப்பனை கைது செய்த போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டு துப்பாக்கி யாரிடம் வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் கண்ணனை, ஆனந்தகுமார் என்பவர் சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து ஓசூரில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
    • பெங்களூரூ கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்து உள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் 5 இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் இணைந்து தளங்கள் தொடர்பான ஆய்வு செய்தது.

    இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்ட 5 தளங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து தளங்களையும் பார்வையிட்டதாகவும், ஒவ்வொரு தளத்தின் நன்மை தீமைகளுடன் கூடிய ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாகவும் அதில் 5 தளங்களில் இருந்து 2 தளங்களை ஆய்வு செய்து, பின்னர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

    இதில் ஓசூர் விமான ஓடுதளத்திற்கு தெற்கே 2 கிமீ தொலைவில் உள்ள தனியார் நிறுவனமான தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் மிக அருகில் ஒன்றும், ஓசூர் விமான ஓடுதளத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள தோகரை அக்ரஹாரம் அருகே ஒன்றும், ஓசூர் விமான ஓடுபாதையில் இருந்து தென்கிழக்கே 27 கிமீ தொலைவில் சூளகிரிக்கு அருகே ஒன்றும், ஓசூர் விமான நிலையத்திற்கு வடகிழக்கு 16 கி.மீ. தொலைவில் தசப்பள்ளி அருகே ஒன்றும் தமிழக அரசு சர்வதேச விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட தளங்கள் ஆகும். தற்போதைய ஓசூர் விமான ஓடுதளம் உட்பட 5 இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 தளங்களில் ஒவ்வொன்றிலும் சில சிக்கல்கள் உள்ளது. அதில் ஒரு தளம் நீர்நிலை அருகே உள்ளது. மேலும் மற்ற 2 தளங்கள் அருகே உயர் அழுத்த கம்பிகள் உள்ளது. மேலும் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் அருகே உள்ள தளமும், அதில் இருந்து தெற்கே 2 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு தளமும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த 2 தளங்களும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் லிமிடெட் கட்டுப்பாடில் இருப்பதால் தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரூ கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் விமான ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ள சூழலில் தமிழக அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் போட்டு கொண்ட ஒப்பந்தத்தின்படி, 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் வேறு எந்த விமான நிலையமும் இருக்கக்கூடாது.

    இதனால் தமிழக அரசுக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டால் ஓசூர் விமான நிலையம் அமைக்க அனுமதி பெற்று பின்னர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வருவதற்கு 8 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இதை எப்படி தமிழக அரசு கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • பிற வக்கீல்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், மூன்று கோர்ட்டுகள், மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம், பி.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார் மற்றும் வக்கீல்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக வந்து இருந்தனர்.

    ஓசூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன் (வயது 30), வக்கீல். இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வக்கீல் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியர் வக்கீலாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று மதியம் கோர்ட்டில் வழக்கு சம்மந்தமாக ஆஜராகிவிட்டு வெளியே நடந்து வந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த குமாஸ்தா ஆனந்தகுமார் (39) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை, ஆனந்தகுமார் ஆட்டை வெட்டுவதை போல தலை, முகம், கழுத்து உள்பட உடலில் 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    கோர்ட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணனை ஆத்திரம் தீர வெட்டி தள்ளிய ஆனந்தகுமார் பின்னர் அங்கிருந்து எந்தவித பதற்றமும் இன்றி, நேராக ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அரிவாளுடன் சென்றார். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு அவர் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணன் துடிதுடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்ட பிற வக்கீல்கள் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கழுத்து, முகம் பகுதியில் வெட்டுகாயம் ஏற்பட்டதால் நள்ளிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

    தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்தியவதி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கறிஞர் கண்ணனை ஆனந்தன் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
    • இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×