என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன.
    • 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன.

    தளி:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் சானமாவு காட்டிற்கு 32 யானைகள் வந்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அப்போது யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன. 11 யானைகள் போடிச்சிப்பள்ளி வழியாக காடு உத்தனப்பள்ளி, ஒன்னு குறுக்கி, கோட்டட்டி வழியாக தேன்கனிக் கோட்டை அருகே உள்ள பேவநத்தம் காட்டிற்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்றன.

    அதேபோல 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகளை ஏற்கனவே சென்றுள்ள 11 யானைகளுடன் சேர்த்து மொத்தம் உள்ள 32 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    தற்போது அந்த யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு விரட்டி உள்ளனர். இதனால் சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 1-ந் தேதி இரவு இடைவிடாத 50 செ.மீ அளவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    மேலும், ஊத்தங்கரையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் பொருட்கள் சேதமானது. இதன் காரணமாக ஊத்தங்கரையில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக சசிகலா இன்று வருகை தந்தார்.

    அவர் மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் கன மழை பெய்தும் நிரம்ப வில்லை.

    நீர்வளத்துறை என தனியாக இலாக இருந்தும் மாவட்டத்தில் நீர் மேலாண்மையை தி.மு.க. தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. கார் பந்தயம் உள்ளிட்டவைக்கு செலவு செய்யும் தி.மு.க.அரசு மக்கள் திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றது. புயுல் காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை சீராகத் திறந்து விடாததே வெள்ளப்பெருக்கு காரணம். முன் அறிவிப்பின்றி பொது மக்கள் தூங்கி கொண்டிருக்கும்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் அதிகளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொது மக்கள் பாதிப்படைத்து உள்ளனர்.

    தி.மு.க. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, அடுத்த முறை அவர்கள் ஆட்சிக்கு வரபோவதில்லை. கண்டிப்பாக 2026-ம் ஆண்டு அம்மா ஆட்சிதான் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
    • பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாலக்கோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.

    50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 48.3 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியாக உள்ளது.

    அதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.

    அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் எந்த நேரத்திலும் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஆற்றோரும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    • அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுட்டிக்காட்டி கிராமத்தின் நலம் வேண்டியும் உலகம் நலம் வேண்டியும் சிவசொருபமான அரசமரத்திற்கும், பார்வதி சொருபனமான வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.

    இதில் ஊர் பொது மக்கள் 200-க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டனர். பெண், மாப்பிள்ளை விட்டார்கள் சார்பில் மணமகன், மணமகளுக்கு தாம்பூல தட்டில் சீர்வரிசை, சீதனங்களை மங்கல இசை வாத்தியம் முழங்க முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    மணமகனாக அரசமரத்துக்கும் - மணமகளாக வேப்பமரத்திற்கும், புத்தாடை அணிவித்து ஜோடித்தனர். அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் கன்னிகாதானம் செய்த பின் மங்கள வாத்தியம் இசைக்க பூசாரி வேத மந்திரங்கள் முழங்க வேப்பமரத்துக்கு மாங்கல்யம் கட்டினார்.

    பின்னர் திருமணத்துக்கு வந்தவர்கள், மொய் எழுதினர். இதில் சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி காப்பு காட்டில் இருந்து நேற்று அதிகாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி கங்கனப்பள்ளி, கும்ளாபுரம் கிராம வழியாக சுற்றித்திரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதிக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள தைலதோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தற்பொழுது 8 காட்டு யானைகளும் தைலதோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.

    வன காவலர்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகள் மீண்டும் வெளியேறாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    கும்ளாபுரத்தில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையை கடந்த யானைகள் தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் நேற்று, முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன.

    அங்கு 25 க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும் கிரி யானை உட்பட 3 யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன.

    தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நுழைந்த கிரி என்கிற ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து ராகி, சோளம் தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.

    விவசாயிகள் பட்டாசுகள் போட்டும், யானை நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே நின்றன. பிறகு அங்கிருந்து சென்ற யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    • ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
    • நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணை, பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது.
    • சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 செ.மீ. அளவில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தொடர் கனமழை காரணமாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பின. மேலும், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களும் மூழ்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

    இந்த மண் சரிவு அதிக மழை பெய்த காரணத்தினால் ஏற்பட்டதா? அல்லது மண்ணின் உறுதித் தன்மை குறைந்ததால் ஏற்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வினாடிக்கு 1644 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
    • பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிருபவர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், புயல் காரணமாக 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பயிர் நீரால் முழுங்கி நாசமாகி உள்ளது. வேளான் துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்து நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விலை நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீர்வழி ஆக்கிரமிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும். வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சாட்டினால் அந்த பாதிப்புக்கு முழு பொறுப்பு அவர்கள் தான். காரணம் 10 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

    பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது. அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பின் பாதிப்பு குறித்து கூறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது.
    • ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

    ஓசூர்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலமாகவும், பரவலாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 600 கன அடிநீர் வந்தது. 600 கன அடி நீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, விநாடிக்கு 680 கன அடிநீர் வந்தது. அதே அளவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் மழை நீரில் கலந்து, தொடர்ச்சியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது. மேலும் இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

    இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
    • பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பபட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது.

    தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.

    இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.

    மேலும், அந்த மேல் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தாசில்தார் வளர்மதி, போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலையில் இருந்து இந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்பு பணிகளில் கிருஷ்ணகிரி போலீசார், தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மீட்பு பணி குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், அடிவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களது குடியிருப்புகளுக்கு இடையே விழுந்த ராட்சத பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த பாறை மேலும் உருண்டு விழுந்து சாலை வரை வந்திருந்தால் அடுத்தடுத்து உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நசுங்கி பலியாகி இருப்பார்கள். அந்த பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • உதயநிதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (5-ந் தேதி) கிருஷ்ணகிரி அருகே நடக்கும், தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது. இதற்காக அவரை வரவேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் பேனர்கள், கொடி கம்பங்களுடன், சுவர் விளம்பரங்களை எழுதினர்.

    உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு, அரசு சார்பில் முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து அறிக்கைகளும் கேட்கப்பட்டு இருந்தன.

    தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் 'ஃபெஞ்சல்' புயலால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த, 4 நாளாக மழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மீட்பு பணிகள், வெள்ள பாதிப்புகளை கணக்கிடும் பணி, நிவாரணம் குறித்து அறிக்கைகள் சமர்பிக்கும் பணிகளில், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் (6-ந் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கும் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வாய்ப்பில்லை எனவும், பின்னர் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×