என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுத்த முறை அம்மா ஆட்சிதான் அமையும்- சசிகலா
- ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது.
- மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 1-ந் தேதி இரவு இடைவிடாத 50 செ.மீ அளவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
மேலும், ஊத்தங்கரையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் பொருட்கள் சேதமானது. இதன் காரணமாக ஊத்தங்கரையில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக சசிகலா இன்று வருகை தந்தார்.
அவர் மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் கன மழை பெய்தும் நிரம்ப வில்லை.
நீர்வளத்துறை என தனியாக இலாக இருந்தும் மாவட்டத்தில் நீர் மேலாண்மையை தி.மு.க. தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. கார் பந்தயம் உள்ளிட்டவைக்கு செலவு செய்யும் தி.மு.க.அரசு மக்கள் திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றது. புயுல் காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை சீராகத் திறந்து விடாததே வெள்ளப்பெருக்கு காரணம். முன் அறிவிப்பின்றி பொது மக்கள் தூங்கி கொண்டிருக்கும்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் அதிகளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொது மக்கள் பாதிப்படைத்து உள்ளனர்.
தி.மு.க. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, அடுத்த முறை அவர்கள் ஆட்சிக்கு வரபோவதில்லை. கண்டிப்பாக 2026-ம் ஆண்டு அம்மா ஆட்சிதான் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






