என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
    • பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48) விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.

    இவருக்கு லதா (45) என்ற மனைவியும், சுகாசினி (22), சுலேச்சனா (20), என்ற 2 மகள்களும், கலை (17) என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல் மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    இந்த நிலையில் சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,

    உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உறவினர்கள் சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சக்திவேலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    சக்திவேலுக்கும் அவரது உறவினர்களுக்கிடையே நிலம் சம்பந்தாமாக பிரச்சனை இருப்பதால் யாராவது அவரை வெட்டி கொலை செய்தனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தாமாக யாராவது வெட்டி கொன்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சக்திவேலின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
    • யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜார்க்கலட்டி அருகே உள்ள முத்துார் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன.

    அவற்றை நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது சம்பத் நகர், பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதூர் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.

    இந்த யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. 6 யானைகள் நடமாட்டத்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
    • காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

    இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.

    அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
    • தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.

    கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.

    மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,


    குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
    • புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை சாலை பெருகோபனப் பள்ளி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த பகுதியில் இருந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்கா காரில் கடத்தி வரப்பட்டதும், போலீசுக்கு பயந்து காரை விட்டு டிரைவர் தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

    ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 13 கிலோ 750 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் மணிகண்டன் (33), ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ரூ.19 ஆயிரத்து 600 மதிப்புள்ள ஸ்கூட்டர், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
    • காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த காட்டு யானைகளும் ஏற்கனவே அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகள் என மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்தன.

    இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை கஸ்பா பகுதியில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.

    இந்த காட்டு யானைகள் கவிக்கோவில், மாரசந்திரம் மேடு, சாப்ராணப்பள்ளி, சீனிவாசபுரம், லக்கசந்திரம் வழியாக அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை கொத்தூர், உச்சனப்பள்ளி, அர்த்தகூர், பாலதோட்டனப்பள்ளி, ரங்கசந்திரம், கோட்டை உலிமங்கலம் கிராமங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் ஓசூர் சானமாவு, ராயக்கோட்டை, ஊடேதுர்கம், தேன்கனிக்கோட்டை கஸ்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

    இதனிடையே, 20 யானைகள் தாவரக்கரை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் யானைகளை விரைந்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது35) விவசாயி. இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10). இந்த சிறுமி தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்து இருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    • வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.

    காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
    • புயல் தாக்கத்தில் நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.

    74 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ள நிலையில் இந்த ஏரி கடந்த ஃபெஞ்சல் புயல் தாக்கத்திலே நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் நீர் சரியான முறையில் வெளியேறாமல் நீர் பிடிப்பு பகுதியாக உள்ள பகுதியை தாண்டி அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வீடுகளில் நீர் சூழ்ந்தது.

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மதகு திறப்பதற்கான வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி சாமல் பள்ளம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டு இருந்தது.

    மல்லசந்திரத்தில் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (வயது 25) என்பவர் கூலி வேலைக்காக சாமல் பள்ளத்தை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பள்ளி பஸ் மல்லசந்திர பகுதிக்கு வந்தபோது திடீரென்று சதீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையறிந்த சதீஷின் தாய், தந்தை மற்றும் உறவினர் 100 மேற்பட்டவர்கள் பஸ்டிச முற்றுகையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
    • கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது ஜாகீர் வெங்கடாபுரம். இதன் அருகில் உள்ள குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறியதாவது:

    கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தை தேடும் பணி நடந்தது. காலையில் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யாரும் கண்ணிலும் தென்படவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் பதிவாகவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம் பெயர்ந்து இருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விழிப்புடன் இருந்து, சிறுத்தை நடமாட்டம் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கிருஷ்ணகிரி முழுவதும் தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அப்பகுதியிலும், சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது. மேலும், ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறைவிட்டு வெளியே செல்வதற்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக உரிய நடவடிக்கைகளை பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×