என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால்- தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர்.
எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் இவருக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வெங்கடேசனையும், அவரது குடும்பத்தையும் ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது.
தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி கடந்த, 8-ந் தேதி வெங்கடேசன் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வெங்கடேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தீக்காயம் அடைந்த வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கியதாக 9 பேர் மீது புகார் அளித்தேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடும் மன உளைச்சலால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாகவும் மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






