என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே விவசாயி வெட்டி கொலை
    X

    போச்சம்பள்ளி அருகே விவசாயி வெட்டி கொலை

    • சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
    • பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48) விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.

    இவருக்கு லதா (45) என்ற மனைவியும், சுகாசினி (22), சுலேச்சனா (20), என்ற 2 மகள்களும், கலை (17) என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல் மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    இந்த நிலையில் சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,

    உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உறவினர்கள் சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சக்திவேலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    சக்திவேலுக்கும் அவரது உறவினர்களுக்கிடையே நிலம் சம்பந்தாமாக பிரச்சனை இருப்பதால் யாராவது அவரை வெட்டி கொலை செய்தனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தாமாக யாராவது வெட்டி கொன்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சக்திவேலின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×