என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருட்களை பொருத்தமட்டில் அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    எதிர்க்கட்சிகளை முடக்குவதில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இது ஜனநாயகத்தை படுகுழிக்கு கொண்டு செல்லும் செயலாகும். குமரி மாவட்டத்தில் ஏராளமான புதிய வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களை இயக்கும்போது அதற்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும். கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல வாணிப அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று பேசுகையில், நாட்டில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை மோடி தனது கைப்பாவையாக வைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் உடனுக்குடன் தரவுகளை எடுக்க முடியும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமா்ப்பிக்க 4 மாதங்கள் ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளது. ஸ்டேட் வங்கி இப்படி கூற பிரதமர் நரேந்தி ரமோடி அளித்துள்ள அழுத்தமே காரணம். எனவே கால அவகாசம் இன்றி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், டாக்டர் சிவக்குமார், மண்டல தலைவர் சிவபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சுசீந்திரம்:

    உலக பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. இந்த சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரியில் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
    • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓடத் தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்தி ரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகா தேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

     நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு வழிநெடுகிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

    அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடை பெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலை மையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவராத்திரியை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இன்று பிரதோஷம் என்பதாலும், மாலை 5 மணிக்கு கொன்றையடி நாதருக்கு அபிஷேகம் தொடர்ந்து மூலவராகிய தாணுமாலயன் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிவன், விஷ்ணு சாமிகள் திருவீதி உலா நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு தாணுமாலயன் சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், விபூதி, பஞ்சாமிர் தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2-வது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. சிவராத்திரியை யொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும்.

    • சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (7-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (8-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.

    அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி நாளை (8-ந்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
    • இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.

    நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். 

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை.
    • சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை, முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.


    அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    • கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
    • அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகர்கோவில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க.

    இந்தியாவிலே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் தான், இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர் தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.

    ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காக பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

    2019-ல் 11,418 கிலோ, 2020-ல் 15,144 கிலோ, 2021-ல் 20,431 கிலோ, 2022-ல் 28,381 கிலோ, 2023-ல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    2022-ல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    2023-ல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த சரவணன், குமார் என்ற குணசீலன், மணிகண்டன், சத்யா என்ற சத்யராஜ், சென்னை 109-வது வட்ட தலைவர் ராஜேஷ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய நாராயணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் மணிகண்டன்,

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர் ராஜா, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் லிவிங்கோ அடைக்கலராஜ்,

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சிதம்பரம் என்ற குட்டி, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர் ராஜா, மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர் காசிராஜன் ஆகிய 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது.

    அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜனதா ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதை பார்க்கட்டும்.

    போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.

    இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குழு அமைத்து கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் அந்தக் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.

    இதனால் காங்கிரசார் தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ப தால் அதற்கான பணிகளிலும் காங்கிரசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., டெல்லி சென்று திரும்பியதும் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாகர்கோவிலில் பெண்களுக்கான நீதி-நாங்கள் தயார் என்ற தலைப்பில் நடந்த மகளிர் மாநாட்டிலும் பங்கேற்று பேசினார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இந்த கூட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது போன்றவை குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

    மேலும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் போன்றவை குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தார்.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி கடற்கரை சாலைகள் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காமராஜர் மணிமண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×