என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
    • 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாத யாத்திரை திருவட்டார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கியது.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது,

    இங்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் அன்பான வணக்கம், இந்த கொட்டும் மழையிலும் நமது பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்று கூடி இந்த பாத யாத்திரையில் கலந்து கொளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் வேலை நாட்களை குறைவாக கொடுத்தனர்.பின்னர் ஊதியத்தை நிறுத்தினார்.

    தற்போது பெயரை மாற்றி திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதியை வழங்கி வந்தது. தற்போது பாஜக அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டுமென கூறுகிறது.

    இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம், இது மட்டுமல்ல பல திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது போலவும், அந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தது போன்றும், அல்லது அவர்கள் புதுப்பித்தது போன்றும் செய்கின்றனர்.

    இதனை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மத்தியில் இருக்கும் பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, முன்னாள் வட்டார தலைவர் தங்க நாடார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நடைபயணம் திருவட்டார், ஆற்றூர், வீயன்னூர் வழி வேர்கிளம்பி-யை சென்றடைந்தது. 

    • மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 23). கபடி வீரரான இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் (16-ந்தேதி) மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான நடவடிக்கையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இன்று காலையில் மகேசின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அவற்றை 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் கல்லீரலும் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மகேசின் உடல் உறுப்புகளுடன் ஆம்புலன்சுகள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்சுகள் வந்தபோது மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதனால் உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்சுகள், எந்தவொரு நெரிசலிலும் சிக்காமல் நாகர்கோவில் நகரை சில நிமிடங்களில் கடந்து சென்றது. பின்பு சிறிது நேரத்தில் மகேசின் உடல், அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    அவர்கள் கூறுகையில், "மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் அவரது கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்கள். 

    • தமிழக முதலமைச்சர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதை தொடர்ந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி இளங்கோ, மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்யராஜன், கல்லூரி முதல்வர் சரோஜா உட்பட பல அரசு அதிகாரிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
    • கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

    நாகர்கோவில்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சரின் சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, பிப்ரவரி 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு அவர் நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வருகை தருவது தி.மு.க. நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகை குமரி மாவட்ட தேர்தல் களத்தை சூடுபடுத்தி உள்ளது. 

    • இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
    • இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

    நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (14-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

     

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். இதனால் காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள், பழவகைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர். திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகா தேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (15-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.

    அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • ஏற்றுமதி உற்பத்தியில் தமிழ்நாடு வலிமை அடைந்துள்ளது.
    • தமிழகத்தில் ரெயில்வே அதிகளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளர் அனில் ஆன்டணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது, 2047-ம் ஆண்டுக்குள் முழு பலத்துடன் கூடிய வளர்ச்சிமிக்க பாரதம் என்ற நோக்கத்திற்கு நிச்சயமாக அடித்தளமிட்டு உள்ளது.

    நாட்டின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள், மகளிர், மீனவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் தகுந்த பட்ஜெட்டாக, இது வெளிப்படையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சித் திட்டத்தில் தமிழகம் மிகவும் ஒருங்கிணைந்த பங்கை கொண்டுள்ளது. ஏற்றுமதி உற்பத்தியில் தமிழ்நாடு வலிமை அடைந்துள்ளது. இதற்கு மத்திய அரசு பக்க பலமாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு வாகனங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இந்தியா இனி வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்காது. இந்தியாவின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் 127 மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் ரெயில்வே அதிகளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. அவர்கள் அதிகாரத்தை பயன்டுத்தி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளனர். அவர்களது ஆட்சியில் மக்களிடம் மகிழச்சி இல்லை. இந்தியா தனது நிலைப்பாட்டை எப்போதும் மாற்றாது. யாருடைய அழுத்தத்திற்கும் இந்தியா அசைந்து கொடுக்காது. உள்ளூர் விவசாயத்திற்கு எப்போதும் மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • அருமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருமனை:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் திபின் பென்சிகர் (வயது 20). இவர் கருங்கல் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் சிதறால் பகுதியில் இருந்து மூவாற்றுமுகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அருமனை அருகே உள்ள தேமானூர் பாலம் பகுதியில் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த திருமண கோஷ்டி வேன் மோதியது. இதில் மாணவர் திபின் பென்சிகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருமனையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் மாணவர் திபின் பென்சிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து சம்பவ இடத்தில் ஏராளான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வேன் மோதி மாணவர் பலியான தகவல் அறிந்த அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த மாணவர் திபின் பென்சிகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் வீடு விபத்து நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் தான் இருக்கிறது. மாணவர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவர் திபின் பென்சிகர் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண கோஷ்டி வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் இறந்தது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. 

    • கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.
    • புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கஞ்சிக்குழியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பொன் சாலமன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடீஸ் அகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அனைவரும் இனிப்புகள் வழங்கினார்.

    முன்னதாக அவருக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளாட்சன் விபின், துணை தலைவர் குமாரி, வார்டு உறுப்பினர்கள் பாலம்மான், சுபியான், சுஜின் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், ஜெபா, வின்சென்ட், பகவத்சிங் உட்பட கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார்.

    தமிழக அரசு சார்பில் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இன்று இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உறுப்பினர் ரத்னகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டார்.

    • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது.

    அந்த வகையில், நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வராஜ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், பால்துரை, மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மயிலாடி நகர தலைவர் நடேசன், காங்கிரஸ் அமைப்பு சாரா துறை மாவட்ட ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
    • அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.

    தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

    • கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
    • தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×