என் மலர்
காஞ்சிபுரம்
விழுப்புரம் மாவட்டம் தளவாய்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. என்ஜினீயரான இவர் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி தொழில் பூங்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் தங்கும் விடுதியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேவதி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மூக்கு, வாயில் ரத்தம் இருந்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளையராஜா வேலை பார்த்த ஐ.டி. நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திர சிட்டியில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வந்தார்.
இளையராஜா நேற்று முன்தினம் அலுவலகம் சென்றார். தனக்குரிய கண்ணாடி அறையில் இருந்தார். அவர் அங்கிருந்து வெளியே வராமல் இருந்தார்.
இந்த நிலையில் இளையராஜா தனது அலுவலகத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்கல்பட்டு டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இளையராஜா மரணம் தொடர்பாக இன்போசிஸ் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தனியார் பால் மாதிரிகள் புனேயில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகு தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும்.
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்தால் அந்த நிறுவனத்தின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயதேவன் (55). ஆடிட்டர். இவரது மனைவி ரமாதேவி (48), தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் திவ்யஸ்ரீ (26).
கடந்த 27-ந்தேதி 3 பேரும் காரில் சுற்றுலா செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றனர். அன்று இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள தனியார் வீட்டுமனை காலி இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காரில் இருந்த ஏ.சி.யில் தீப்பிடித்ததால் வெளியே வர முடியாமல் 3 பேரும் இறந்தனரா? அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
திவ்யஸ்ரீக்கும், பதன் கோட்டில் ராணுவ கேப்டனாக பணியில் இருக்கும் சரத்துக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.
திருமணமான முதலே கணவன்- மனைவு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யஸ்ரீ பெற்றோர் வீட்டுக்கு வந்து இருக்கிறார்.
இதுதொடர்பாக தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். போலீசார் திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்தனர். அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் பலியாகி விட்டனர். அவர்கள் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.
இதுதொடர்பாக திவ்யஸ்ரீயின் கணவரான ராணுவ கேப்டன் சரத்திடம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமணி 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதில் சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த ஜெயதேவன் உள்பட 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும் 3 பேர் சாவில் போலீசாருக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளது. இதைத் தொடர்ந்து கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூரில் பல கொள்ளை சம்பவங்கள் சில நாட்களுக்கு முன்பு நடந்து வந்தது. இதையொட்டி உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் 9 கண்காணிப்பு கேமராக்களும், டிஜிட்டல் கடிகாரமும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசக பலகைகளும் உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் உதவியால் கடந்த சில நாட்களில் 2 திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி மீதான தடை உத்தரவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்லாவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அப்துல் ரவூப் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் நகர தி.மு.க. செயலாளர் இ.கருணாநிதி, வே.கருணாநிதி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, அமைப்புச் செயலாளர் யாகூப், மாவட்ட செயலாளர் சலீம்கான், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தேவ. அருள்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தும்பவனம் கிராமம் மற்றும் விஷ்ணுநகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியல் ஈடுபட்டிருந்தபோது மாட்டு வண்டிகளில் திருட்டு தனமாக மணல் கடத்திய தும்பவனம் மற்றும் நாகலூத்து மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சங்கர், விக்ரம், பிரகாஷ், யுவராஜ், ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோன்று சதுரங்க பட்டிணம் ஆற்று படுகை மற்றும் அனைக்கட்டு பைக்கரணை பகுதிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிட்டிபாபு, சதீஷ் மற்றும் மனோகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இன்று காலை ஒரு காரில் வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். உடனே அவரை பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர்.
இதனால் பயந்து போன அவர் காரை வேகமாக ஓட்டி சென்றார். சாந்தோம் சர்ச் அருகே வந்த போது ரோட்டின் குறுக்கே சென்று எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மாநகராட்சி அதிகாரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே பொதுமக்கள் காரை ஓட்டி வந்த வாலிபரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். படுகாயம் அடைந்த மாநகராட்சி அதிகாரி மற்றும் 3 பேரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாநகராட்சி அதிகாரி மயக்க நிலையில் இருந்ததால் அவரது பெயர் விவரம் தெரியவில்லை.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 3-ந்தேதி நடக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் பங்கேற்கும் ராகுல்காந்தியின் சுற்றுப் பயண நிகழ்ச்சி குறித்தும், கட்சியில் சில நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக்குடன் பேச உள்ளேன்.
மெரினாவில் போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இருக்கிறது. பொதுவாக போராட்டம் நடைபெறும்போது போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, குண்டர் சட்டம் போடுவது தேவையில்லாதது. இந்த நடவடிக்கை அதிகபட்சமானது.

மோடியின் பா.ஜனதா அரசின் 3 ஆண்டு ஆட்சி தோல்வியில் முடிந்துள்ளது. பா.ஜனதா மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது.
மதரீதியாகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பு, பொது சிவில் சட்டம், அதன் தொடர்ச்சியாக மாட்டிறைச்சிக்கு தடை என்று மக்களிடம் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது.
மாட்டிறைச்சிக்கு தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் குறித்து கருத்து கூற தமிழக அரசு மத்திய அரசுக்கு பயப்படுகிறது. தயக்கம் காட்டுகிறது.
மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசின் நீர்ப்பந்தத்தை ஏற்க கூடாது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க., பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அ.தி.மு.க.வுக்கென்று தனித்துவம் உண்டு. யாருக்கும் கைப்பாவையாக செயல்படவில்லை. தி.மு.க.வுக்கு வேண்டுமென்றால் அந்த பழக்கம் இருக்கலாம்.
மாட்டிறைச்சி தடைக்கு தமிழக அரசு கருத்து கூற தயங்குகிறது என்றும் மத்திய அரசுக்கு பயப்படுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களின் நலன் எதுவோ, மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மக்களுக்கு பிடிக்காததை செய்ய மாட்டோம்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் தேர்தல் ஆணையம் சில விளக்கங்களை கேட்க இருக்கிறது. ஓ.பி.எஸ். அணி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். நாங்களும் எங்கள் அணி சார்பிலும் கொடுத்து இருக்கிறோம். அதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக செயல் பட்டு வருவதாக கூறி வருகிறார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு கூறுவது தவறானது.
மாநிலத்தில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு இதற்கு ஒத்துழைப்பு தருகிறது. அரசியல் உறவு என்பது வேறு. அரசு சார்ந்த உறவு என்பது வேறு.

மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவு வெற்றியே. சில எதிர்க்கட்சிகள் கூறுவது போல தோல்வி இல்லை. காரணம் இந்த 3 ஆண்டில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
கருப்பு பண ஒழிப்புக்கு பின்பு பல மாநில தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது.
மாட்டு இறைச்சிக்கு தடை, மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு தடை என்று சிலர் கூறுகின்றனர். மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. அது விலங்குகளுக்கு பாதுகாப்பு, மாட்டு இறைச்சி விற்பனை ஒழுங்குமுறை ஆகும். யாரையும் மாட்டு இறைச்சியை சாப்பிடக் கூடாது என்று கட்டாயப் படுத்தவில்லை, தடுக்க வில்லை, கெடுக்கவும் இல்லை.
நல்லமுறையில் ஒரு அரசு போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்க்கத் தெரியாத எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘ஆன்லைன்’ மருந்துகள் விற்பனை அனுமதியை கண்டித்து தமிழகத்தில் மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டன. காஞ்சீபுரம் நகரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மருந்து கடை வாசல்களில் மாலை 6 மணிக்கு கடை திறக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதே போல் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 900 மருந்து கடைகள் உள்ளன. அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அனைத்து கடைகள் முன்பும் கடை அடைப்பு பற்றிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்தது. ஊத்துக்கோட்டை, திருத்தணி, பெரியபாளையம், ஆவடி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இது பற்றி திருவள்ளூர் மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன் கூறியதாவது:-
மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு அனுமதி தரப் போவதாக தெரிவித்துள்ளது. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 900 மருந்து கடைகள் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.
ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை திட்டத்தால் உயிர் காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும்.மேலும் ஊக்கமருந்து, தூக்க மருந்து, போதை மருந்து, கருத்தடை மாத்திரைகள் ஆகியவை தாராளமாக கிடைக்கும். இது கலாசார சீரழிவை ஏற்படுத்துவதுடன் உயிர் இழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசின் முடிவை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் மத்திய அரசின் சேவை வரி உயர்வை கண்டித்து இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. காந்தி சாலை, காமராஜர் வீதி, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிகளவில் உணவகங்கள் உள்ளன. அனைத்து கடைகளுமே இன்று செயல்படவில்லை.
இதனால் ஆங்காங்கே தெரு பகுதிகளில் சிறு சிற்றுண்டி கடைகளிலும், சாலையோர உணவகங்களிலும் அதிகளவில் கூட்டம் மொய்த்தது. வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் மக்களிடம் எங்கேனும் சிற்றுண்டி கிடைக்குமா என கேட்டு சாப்பிட்டு சென்றனர்.
காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்து இருந்தவர்களும், பட்டுச்சேலை வாங்க வந்திருந்த மொத்த வியாபாரிகளும் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தது. சாலையோர உணவு கடைகள், டீ கடைகள் திறந்து இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மூடப்பட்டன.






