என் மலர்
காஞ்சிபுரம்
- தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
- ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.
- மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
- இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பான, வசதியான பயணம் கிடைக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வு ரெயில் தான். வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் கட்டணம் என்பது பிற போக்குவரத்துகளை விட குறைவுதான். எனவே அனைத்து தரப்பு மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.
ரெயில் கட்டணத்தை பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வருகிற ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- நோக்கியா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (25-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரோஜினி நகர், ராஜீவ் காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், பி.வி.எல்.நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம்,
ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி, டி.எம்.ஏ.ரோடு, தாலுக்கா ஆபீஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், காசா கிராண்ட், வி.ஆர்.பி. சத்திரம், போந்தூர் தேரேசாபுரம், பிள்ளைப் பாக்கம் கிராமம், குண்டுபேரம்பேடு, தத்தனூர், வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- திருச்சியில் திருமாவளவனை வைகைச் செல்வன் சந்தித்து பேசியுள்ளார்.
- சந்திப்பு குறித்து கேள்விக்கு திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது என பதில் அளித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகைச் செல்வன், "திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
அந்த ஓட்டைக்காகத்தான் திருமாவளவனை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, "இப்போது என்னால் இவ்வளவுதான் கூற முடியும். உங்களுக்கு நான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.
மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அப்போது வைகைச் செல்வன் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.
- பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.
- சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
* நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள்.
* பா.ம.க.வை பலவீனப்படுத்த தி.மு.க. முயல்கிறது.
* பா.ம.க. வை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது.
* பா.ம.க.வில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
* பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்.
* பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.
* சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.
* நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்.
* என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர்.
* அமைதியாக இருப்பது எனது பலம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சல், திட்டம் என்னிடம் உள்ளது.
* தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, நமக்குள் பிரச்சனை வேண்டாம்.
* அண்ணன் தம்பியாக இருக்கும் நமக்குள் குழப்பம் வேண்டாம்.
* 4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக தி.மு.க. ஏமாற்றி கொண்டிருக்கிறது.
* வன்னியர்களுக்கு மட்டும் பா.ம.க. இடஒதுக்கீடு கேட்கவில்லை.
* வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு வன்னியர்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.
* துப்பாக்கி கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் எங்கிருந்தது வந்தது? என கேள்வி எழுப்பினார்.
- மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
- காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் ஒரு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.
ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது உடையவர்கள்.
மாநகர காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.
- வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
- இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை - தென்கலை பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
அப்போது மண்டகபடி கண்டருளியபோது வடகலை தென்கலை பிரிவினருக்கும் இடையே மந்திர புஷ்பம் பாடுவதில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
கடந்த வருடமும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின்போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது.
- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் வருகிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
இது மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நாடு அறியும். பீகார் தேர்தல் பரபரப்புக்கு இடையில் மத்திய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது.
எனவே இது பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாகத்தான் தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்தலுக்காகத்தான் இந்த நிலைப்பாடு என்றாலும் கூட இதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.
வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி நடந்தாலும் இரு முனை போட்டிதான் உண்மையான போட்டியாக இருக்க முடியும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்று உள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அ.தி.மு.க. தன்னுடைய பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகதான் நான் பார்க்கிறேன்.
அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது. மறுபடியும் அதே பிழையை அது செய்கிறது.
அ.தி.மு.க. தனித்து நின்றால் கூட அந்த வாக்கு வலிமை குன்ற போவதில்லை. அதை அ.தி.மு.க. உணராமல் இருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.
எனவே எத்தனை அணிகள் இங்கே உருவானாலும் கூட தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
- கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கான விழா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த திருக்குளத்தில் இன்று காலை நடந்தது.
சன்னியாச தீட்சை
சுப்பிரமணிய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர மடத்தின் தற்போதைய 70-வது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
புதிய இளைய பீடாதி
பீடாதிபதியாக பொறுப்பேற்ற கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்தனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி
இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் சுதா சேஷய்யன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு இளைய மடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவில் வளாகம், காஞ்சி சங்கர மடம் ஆகியவை வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
- ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.
காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக 20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட் தேர்வாகியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர்.
ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் கணேச சர்மா டிராவிட் பணிபுரிந்து வந்தவர்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.
- காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.
* பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல சிறுகுறு தொழில்கள் தமிழ்நாட்டை முன்னேற்றுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள்...
1. அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீட்டுக்கான மானியம் ரூ.1 லட்சமாக வழங்கப்படும்.
2. காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
3. அம்பத்தூர் தொழில்பேட்டையில் செயல்படும் பாகம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வகம் ரூ.5 கோடியில் நிறுவப்படும்.
4. சிறுகுறு நிறுவனங்களுக்கான காட்சிக்கூட கட்டண நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்படும்.
5. காஞ்சி பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






