என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. நீர்மூழ்கி கப்பல், போர்க்கப்பலை சுற்றிப் பார்க்க கடலில் மிதவை பாலம் அமைக்கப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள இந்த சமய அறநிலையத்துக்கு சொந்தமான சுமார் 280 ஏக்கர் இடத்தில் கண்காட்சி அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

    ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இப்போதே அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கண்காட்சி நடைபெறும் இடத்தில் உள்ள பாதுகாப்பு குறித்து நேற்று மாலை ஐ.ஜி ஸ்ரீதரன், மனோகரன், டி.ஐ.ஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் ஆலோசணை நடத்தினர்.

    இதில் அங்கு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைப்பது, மோப்ப நாய்களை கொண்டு வருவது, வெடிகுண்டு நிபுணர்களை பணி அமர்த்துவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கண்காட்சியில் ராணுவ பலத்தை காட்டும் வகையில் ஏராளமான புதிய வகை ஆயுதங்கள் இடம் பெறுகின்றன. இதில் ராணுவ கம்ப்யூட்டரில் இயங்கும் நவீன பீரங்கிகள், ஏவுகணைகள், எதிரிகளின் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கும் ரேடார்கள், போன்றவை முக்கியமானவையாகும்.

    இவைகளை வெளிநாடு மற்றும் வெளிமாநில ராணுவ அதிகாரிகள் காரில் சென்று பார்வையிட வசதியாக 3 கி.மீ தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கு பிரமாண்டமான 12 குளிர் சாதன அரங்கமும், 3 சிறு கருத்தரங்க கூடமும் அமைக்கப்படுகிறது. இதில் வெளிநாட்டு ராணுவத்தினர் மட்டும் அணுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடலோர பாதுகாப்பு படையின் போர் கப்பலை கடலில் நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கண்காட்சிக்கு கொண்டுவர இருக்கும் போர் கப்பல்கள் விசாகப்பட்டிணம், கொச்சின், கோவா பகுதிகளில் இருந்து புறப்பட்டுள்ளது. மேலும் சிறிய வகை நீர் மூழ்கி கப்பலும் இங்கு வர இருக்கிறது.

    கடலில் நிறுத்தப்படும் போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலை சுற்றிப்பார்க்க கடலுக்குள் தற்காலிக மிதவை பாலமும் அமைக்கப்படுகிறது.

    கண்காட்சி நடைபெறும் இடத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்சார வாரியத்தினர் அங்கு தனி டிரான்ஸ்பாமர் அமைத்து வருகிறார்கள். சாலையோரம் வண்ணம் தீட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதனால் கண்காட்சி அமையும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதுவரை அரங்குகள் அமைக்கும் பணி 25 சதவீதம் முடிவடைந்துள்ளது.
    முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக கூறுவதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போலீசாரை ரவுடிகள் தாக்குவது, வங்கி கொள்ளை, குழந்தைகள் கடத்தல் என்று பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதுதான் அமைதி பூங்காவுக்கான அடையாளமா?

    இதைக் கண்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள். சிரிக்கிறார்கள். முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இத்தகைய குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு தங்களுக்கு தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை மற்றும் நிர்வாகிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தங்களுடைய நிலைமை மற்றும் இயலாமையினால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும்.

    தெலுங்கு தேசம் கட்சியை போல் மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும். அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழ்நாட்டுக்காக போராட முன்வர வேண்டும்.

    காவிரி மோண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகள் தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக அர்த்தம். அதற்காக எதிர்காலத்தில் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    மதுகுடிக்க பணம்தர மறுத்த மகளை, தந்தையே கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காளிமேடு பிராமணர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புவனா (23). இவர் காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். புவனாவின் தந்தை பரமசிவமும் அதே மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு 9 மணியளவில் புவனா கடையை மூடுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை பரமசிவம் கடைக்கு வந்து மதுஅருந்த பணம் கேட்டார். ஆனால் புவனா பணம் தர அப்போது மறுத்துவிட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த பரமசிவம் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்தவெள்ளத்தில் அலறிய புவனாவை அங்கிருந்த வியாபாரிகள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுகுடிக்க பணம்தர மறுத்த மகளை, தந்தையே கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம் அருகே பள்ளியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடியகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. பள்ளி இருந்த இடத்தில் கட்ட போதுமான இடம் இல்லை என்பதாலும், நீர்நிலை பகுதியில் உள்ளதால் பள்ளியை வேறு இடத்தில் மாற்ற முடிவு செய்து புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பள்ளி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பு.பெ.கலை வடிவன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஓரிக்கை நா.வல்லரசு, காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் கோ.திருமா தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.கோபி, மண்டல செயலாளர் சூ.க. விடுதலைசெழியன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.செல் வராசு, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கவுதம், காஞ்சீபுரம் நகர செயலாளர் அ.பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். #Tamilnews
    மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 280 ஏக்கர் நிலப்பரப்பில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகிறார்கள்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக விழா மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 நவீன ஹெலிகாப்டர் தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தொடக்க விழா நடைபெற உள்ள இடத்தில் கடலில் கப்பல் சாகசம் செய்யும் போது கரையில் இருந்து பொதுமக்கள் பார்க்கவும் வசதி செய்யப்பட்டு வருகிறது.

    கண்காட்சி தொடங்குவதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதிகளுக்கு வரும் நபர்களின் முழு விவரம் மற்றும் முகவரியை கேட்டு பெற வேண்டும் எனவும் விடுதியில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் பாயை விரித்து அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர், திருமங்கலம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் தங்கள் பகுதியில் சாலைவசதி, கழீவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுபற்றி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மொளச்சூர், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 75-க்கும் மேற்பட்டோர் கையில் பாய் மற்றும் பதாகைகளுடன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாயை விரித்து அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர் முகமதுவிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். #tamilnews

    மாமல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டு அதிபர் நேற்று வருகை தந்தார். அவர் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்தார்.
    மாமல்லபுரம்:

    சென்னைக்கு 2 நாள் அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மன் நாட்டு அதிபர் பிரான்க் வால்டர் ஸ்டைன்மையர், தனது மனைவி எல்கே புடன்பென்டருடன் நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தார். அங்குள்ள கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்களில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்தார்.

    அவருக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் பல்லவர் கால சிற்பங்களின் தன்மை, அதன் வரலாறுகள் குறித்து விளக்கி கூறினர். அதை அவர் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு சிற்பங்களையும் ஊர்ந்து பார்த்து வியந்தார்.

    முன்னதாக கடற்கரை கோவில் நுழைவு வாயில் அருகில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சப்-கலெக்டர் ஜெயசீலன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகாநாத்சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர்.


    மாமல்லபுரம் வந்த ஜெர்மன் நாட்டு அதிகாரிகள், அங்குள்ள அர்ச்சுனன் தபசு புராதன சின்னங்கள் முன் ‘செல்பி’ எடுத்துக்கொண்ட காட்சி.

    ஜெர்மன் நாட்டு அதிபருடன் அந்த நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் வந்திருந்தனர்.

    ஜெர்மன் நாட்டு அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கருதி போலீசார் அதிக கெடுபிடி செய்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி நேற்று காலை 9 மணி முதல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. கடற்கரை சாலையில் கடைகளை திறக்கவும் போலீசார் அனுமதிக்காததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தெருக்களில் 20 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரண உடை அணிந்த போலீசாரும் மலைக்குன்றின் மேல் நின்று ‘பைனாக்குலர்’ மூலம் கண்காணித்தனர். பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஜெர்மன் நாட்டு அதிபர் வந்து செல்லும் வரையில் புராதன சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று மாமல்லபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் காணப்பட்டது.

    போலீசாரின் கெடுபிடியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.   #tamilnews
    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த அபிராமிபுரத்தை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 30). கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை அவரை மதுராந்தகம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக அதே பகுதியை சேர்ந்த சரவணன் (22), மூர்த்தி (17) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    மதுராந்தகம் அருகே பைபாஸ் சாலையை கடந்த போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அதிலிருந்த சின்ராஜ், சரவணன், மூர்த்தி ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் பலியான மூர்த்தி பிளஸ்-1 மாணவர் ஆவார்.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ஓசூர், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்த ஆண்டுக்குள் விமான சேவை தொடங்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதிக்கு, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரிடையாக காலதாமதம் இன்றி செல்ல ரூ.40 கோடியில் ‘வாக்லேட்டர்’ எனப்படும் அதிநவீன நகரும் நடைபாதை வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதிக்கான 600 மீட்டர் தூரம் கொண்ட ‘வாக்லேட்டர்’ அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பன்னாட்டு முனையத்துக்கு செல்லும் வகையில் 200 மீட்டர் தூரத்துக்கான ‘வாக்லேட்டர்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்துக்கு செல்லும் ‘வாக்லேட்டர்’ வசதி தயாராகிவிட்டதால் அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையில் நடந்தது.

    புதிய ‘வாக்லேட்டர்’ வசதியை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். இதில் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, விமான நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்துக்கு செல்லும் ‘வாக்லேட்டர்’ வசதியை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்து அதில் சென்றபோது எடுத்த படம். அருகில் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி உள்ளனர்.

    தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள இந்த ‘வாக்லேட்டர்’ வசதி இன்னும் 10 நாட்களுக்கு பிறகுவிமான பயணிகள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பின்னர் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ.40 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு இடையே பயணிகள் சிரமமின்றி செல்ல ‘வாக்லேட்டர்’ வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

    ஜூன் மாதத்துக்குள் ஓசூர் விமான நிலையம் தொடங்கப்படும். அதுபோல் தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் விமான சேவை தொடங்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிலங்களை வழங்கினால் விமான நிலையம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து கொழும்புக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நைனார் முகமது (வயது 34) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவுமில்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவரது உள்ளாடைகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கொழும்புக்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நைனார் முகமதுவின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடத்தப்பட இருந்த வெளிநாட்டு பணம் ஹவாலா பணமா?, இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச ஹவாலா கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவேன் என்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.#Kartichidambaram

    ஆலந்தூர்:

    ஐ.என்.எஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது.

    அதை தொடர்ந்து நேற்று இரவு 10.40 மணியளவில் விமானம் மூலம் கார்த்தி சிதம்பரம் சென்னை திரும்பினார். அவருக்கு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “என் மீது அரசியல் ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு பதிலாக அமைந்துள்ளது. தீர்ப்பின் 50-வது பக்கத்தில் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டரீதியான முறையில் சந்தித்து உறுதியாக வெற்றி பெறுவேன். என் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியிலானது என நடுநிலையாக இருக்கும் அனைவருக்கும் தெரியும்.”

    இவ்வாறு அவர் கூறினார். #Kartichidambaram #tamilnews

    பெருங்குடி சுங்கச்சாவடி சிக்னல் அருகே சாலையின் நடுவில் இன்று காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்.) பெருங்குடி சுங்கச்சாவடி சிக்னல் அருகே சாலையின் நடுவில் இன்று காலை “திடீர்” பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகாமல் பள்ளம் விழுந்த இடத்தில் தடுப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ குடிநீர் பைப் உடைந்துள்ளது தெரிய வந்தது.

    பின்னர் பள்ளத்தை மணல் நிரப்பி மூடினார்கள். பள்ளம் மணல் கொட்டி மூடப்பட்டாலும் அப்பகுதியில் சாலையின் நடுவில் பேரிகாட் அமைக்கப்பட்டிருப்பதால் ஓ.எம்.ஆர். சாலையில் மிதமான வேகத்தில் போக்குவரத்து பாதிப்புடன் வாகனங்கள் சென்று வருகின்றன.

    ×