என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    குமரக்கோட்டம் கோவிலில் சாமி சிலையை திருடி குளத்தில் வீசியதாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கந்தபுராணம் அரங்கேறியதால் அதனை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 28 செ.மீட்டர் உயரம், 18 செ.மீட்டர் அகலத்தில் சுமார் 7½ கிலோ எடையில் வெண்கல சிலை தெற்கு பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த மாதம் 10-ந்தேதி அந்த சிலை திடீரென மாயமானது. இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி தியாகராஜன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சாமி சிலையை திருடியதாக கோவில் பூசாரி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கச்சியப்பர் சிலையை அருகே உள்ள கோவில் குளத்தில் வீசியதாக அவர் தெரிவித்தார். கார்த்திக்கை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    தற்போது கோவில் குளத்தில் வீசப்பட்ட கச்சியப்பர் சிலையை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள். குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருப்பதாலும் சிலை வீசப்பட்ட இடம் சரியாக தெரியாததாலும் அதனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாள கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் 480 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான ராணுவ தளவாள கண்காட்சி நடைபெற உள்ளது.

    பாதுகாப்பு ஹெலிகாப்டர்களும், வான்வெளி வீர சாகசம் செய்யும் சிறுவகை விமானங்களும் தரை இறங்குவதற்காக 3 வகை தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் பிரதமர் வந்து இறங்கும் தளத்திலும் உரையாற்ற இருக்கும் அரங்கத்திலும் இரவு-பகலாக தீவிர பாதுகாப்பு மற்றும் கண் காணிப்புடன் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த இரண்டு பகுதிகளும் தற்போது போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பணிக்காக செல்வோருக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பின்னரே அனுப்பப்பட்டு வருகிறது.

    வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. தளப் பகுதியை சுற்றி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நவீன ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசை கேள்வி கேட்காத யோக்கியதை இல்லாதவர்கள் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர். காவிரி பிரச்சனைக்காக தி.மு.க. நடத்தும் போராட்டங்களை கபட நாடகம் என்று கூறுகிறார்கள்.


    தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த எண்ணம் இருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    மத்திய அரசை கண்டித்து அமைச்சரவையில் தீர்மானம் போட முடியாதவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்னை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை.

    காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். இதில் காவிரி பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கூடுவாஞ்சேரியில் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரப்பாக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் ரூ.6½ லட்சம் வரை வியாபாரத்திற்காக கடன் வாங்கி இருந்தார். இதனை அவர் திருப்பி செலுத்தி வந்தார்.

    அவர் ரூ.12 லட்சம் வரை திருப்பி செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று கடன் கொடுத்தவர்கள் சேகருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதுகுறித்து சேகர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் கடன் கொடுத்த 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இதனால் சேகருக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சேகர் வீட்டில் இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் சேகர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கட்டில் மற்றும் பொருட்கள் எரிந்தது. அருகில் இருந்த சேகர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தீயை அவர்கள் அணைத்தனர்.

    இதுகுறித்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணத்தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ஆதம்பாக்கத்தில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர், ஜீவன் நகர், பார்த்தசாரதி நகர், ராம கிருஷ்ணாபுரம், நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் தில்லை கங்கா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    நள்ளிரவு 12 மணி வரை மின் இணைப்பு கொடுக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தில்லை கங்காநகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    எனினும் மின் இணைப்பு இன்று அதிகாலை வரை வழங்கப்படவில்லை. காலை 6 மணிக்கு பின்னரே ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு சீரானது. இரவு முழுவதும் மின்சாரம் வழங்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காஞ்சி சங்கரமடத்தில் விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது 30-வது நாள் நிகழ்ச்சி காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் இன்று நடந்தது.

    இதில் கலந்துகொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மதியம் 12 மணியளவில் காஞ்சி சங்கரமடம் சென்றார். சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

    பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொண்டார். அவர் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிபெற்றார்.

    கவர்னருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் சென்று இருந்தனர்.
    நாளை நடக்க இருந்த மருந்து வியாபாரிகள் கடை அடைப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாநில தலைவர் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ வணிக சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து வரும் ஏப்ரல் 2-ந் தேதி கடை அடைப்பு போராட்டம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் வணிகர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒத்தி வைக்கப்படுகிறது.

    மேலும் அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி கடையடைப்பு போராட்டம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா, மண்டல செயலாளர் மூர்த்தி, நிர்வாக செயலாளர் சுந்தரமூர்த்தி,மொத்த வணிக பிரிவு செயலாளர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டனர்.

    மதுராந்தகம் அருகே மின் மோட்டார் செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே கரசங்கால் பகுதியில் எரி சாராயம் பதுக்கி வைக்கபட்டு உள்ளதாக மதுராந்தகம் டி.எஸ்.பி, ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது கரசங்கால் ஏரியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதான மின் மோட்டார் செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 55 கேன்களில் 2 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். விசாரணையில் எரிசாராயம் இதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும் இவர் இப்பகுதியில் பிரபல சாராய வியாபாரி என்றும் தெரிய வந்தது.

    சாராயம் பிடிபட்ட தகவல் அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்த சாராய வியாபாரத்தில் உடந்தையாக இருந்த பெண் மாலாவை கைது செய்து உள்ளனர். சாராயம் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    வேளச்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளைடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி மெயின் ரோட்டில் புற்றுக்கோவில் பகுதியில் வர்த்தக வளாகம் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. கீழ்தளத்தில் ரமேஷ் என்பவர் கைகடிகாரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த விலை உயர்ந்த கைகடிகாரங்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அதன் மதிப்பு ரூ.40 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தக வளாகத்தில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் மூலம் துப்புதுலக்காமல் தடுக்க அவற்றை கொள்ளையர்கள் அகற்றி விட்டனர்.

    இது குறித்து வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தி.மு.க. வினருக்கு வேட்பு மனுக்களை வழங்கவும், வாங்கவும் மறுத்து அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தை காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் திமு.க.வினர் முற்றுகையிட்டனர்.

    இதில் காஞ்சீபுரம் எம்.எல். ஏ. எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம். குமார், பி.சேகர், சிறுவேடல் செல்வம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    மதுராந்தகத்தில் லாரி டிரைவரை தாக்கி ரூ. 5 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தக்:

    கடலூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி கடந்த 26-ந் தேதி வந்தது. டிரைவர் செந்தில் கவாஸ்கர் லாரியை ஓட்டினார்.

    மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இரவு வந்தபோது 8 பேர் கும்பல் லாரியை வழிமறித்தனர். அவர்கள் டிரைவர் செந்தில் கவாஸ்கரை தாக்கி ரூ. 5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தை சேர்ந்த பிரேம்குமார் என்கிற கருப்பன், உத்திரமேரூர் காவ் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்கிற மொச்சை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, இரும்பு கம்பி உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழிப்பறியில் தொடர்புடைய 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம் அருகே வேறொரு வாலிபருடன் பேசிய ஆத்திரத்தில் காதலி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி விமான நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் இந்துவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்து செல்போனில் வேறு ஒரு வாலிபருடன் பேசுவதாக சத்யபிரகாஷ் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக அவரிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று இரவு மகளிர் விடுதியில் இருந்த இந்துவை வெளியே வரவழைத்த சத்யபிரகாஷ் அவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தகராறு செய்த சத்யபிரகாஷ் பிளேடால் இந்துவின் கழுத்து, முதுகில் அறுத்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் சத்யபிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். இந்துவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்யபிரகாசை கைது செய்தனர்.
    ×