என் மலர்
செய்திகள்

கூடுவாஞ்சேரியில் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரப்பாக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் ரூ.6½ லட்சம் வரை வியாபாரத்திற்காக கடன் வாங்கி இருந்தார். இதனை அவர் திருப்பி செலுத்தி வந்தார்.
அவர் ரூ.12 லட்சம் வரை திருப்பி செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று கடன் கொடுத்தவர்கள் சேகருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதுகுறித்து சேகர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் கடன் கொடுத்த 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதனால் சேகருக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சேகர் வீட்டில் இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் சேகர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கட்டில் மற்றும் பொருட்கள் எரிந்தது. அருகில் இருந்த சேகர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தீயை அவர்கள் அணைத்தனர்.
இதுகுறித்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணத்தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. #tamilnews






