என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி கலந்து கொள்கிறார் என வைகோ கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #Vaiko
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இனி நாடாளுமன்ற தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியாது.

    அரசியல் நாகரீகம் கருதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்து இருக்கிறார். அவர் பங்கேற்பார் என்று நினைக்கிறேன்.



    கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ கத்துக்கான காவிரி நீர் பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

    ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #vaiko
    வீட்டுமனையை பதிவு செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன்(வயது 55) என்பவர் சார்பதிவாளராக உள்ளார்.

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். காஞ்சீபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

    அதற்கு அவர், ரூ.1,000 லஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நித்யா, இதுபற்றி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை லஞ்சமாக சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

    பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்து இருந்தனர்.

    நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் லஞ்சமாக ரூ.1,000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன்(30) என்பவரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். 
    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 16 என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிக்கான அரசு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 மையங்களில் 1,776 பேர் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 400 பேரில் 263 பேர் தேர்வு எழுதினர். அறை எண் 14-ல் தேர்வு எழுதிய 6 பெண் பட்டதாரிகள் உள்பட 16 மின்னணு மற்றும் தொடர்பு என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு தவறுதலாக மின் பொறியியல் தொடர்பான வினாத்தாள் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் குழப்பம் அடைந்த அவர்கள் இதுகுறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். ஆனால் முறையான வினாத்தாள்தான் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறி 16 பேரையும் தேர்வெழுத அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    தேர்வு முடிந்து வெளியேறிய அவர்களுக்கு அதே மையத்தின் மற்ற அறைகளில் சரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்தியிருப்பது, தெரிய வந்தது. அப்போதுதான் வினாத்தாள் தவறுதலாக கொடுக்கப்பட்டதும் உறுதியானது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் வேறு வினாத்தாளுக்கு தேர்வு எழுதிய 16 என்ஜினீயரிங் பட்டதாரிகளும் தேர்வு மைய பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாசில்தார் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் வினாத்தாள் மாறியது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பொன்னையா அவர்களிடம் உறுதி அளித்தார். 
    ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செஞ்சி அருகே உள்ள கோவில் புறையூரை சேர்ந்தவர் முருகேசன்.  இவரது மகன் சுரேஷ் (வயது19). பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து சுரேஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து இருந்தார்.

    இதற்காக அவர் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக  அதே பகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அஜீத், சின்னராஜீ ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் சென்னைநோக்கி நேற்று நள்ளிரவு புறப்பட்டனர். இன்று உறவினர் வீட்டில் தங்கி விட்டு நாளை கல்லூரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில்  கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை  இழந்த மோட்டார் சைக்கிள் சாலைஒர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். அஜீத், சின்னராஜீக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் டோல்கேட் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னைபாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு பகுதிகளான கோவளம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் டோல்கேட் அமைத்து வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 54 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு கழிப்பிடம், ஓய்விடம், சுத்திகரிப்பு குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன் குறைந்த சம்பளமும் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் டோல்கேட் பகுதி ஊழியர்கள் கட்டண ரசீது போட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் உத்தண்டியில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.#tamilnews
    நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது28).

    இவர் மீது துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் தேடப்பட்டு வந்த அந்தோணியை பிடித்தனர். அவரை விசாரணை செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு திடீரென்று அந்தோணி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தோணி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்தோணி இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அவர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட முயற்சித்தனர்.

    இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்த அந்தோணி உறவினர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.

    அந்தோணியை போலீசார் பிடித்தபோது அவர் தப்பித்து ஓடி கீழே விழுந்து காயம் அடைந்ததில் இறந்தாரா? அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “நேற்று இரவு வீட்டில் இருந்த அந்தோணியை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். அவரை போலீசார் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்கள். #Tamilnews
    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள அடுக்கு மாடி கட்டுமான நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் கமல நாதன் (வயது 36). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் மேலகுமாரமங்கலம் ஆகும்.

    இவர் கல்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். கடம்பாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கமலநாதன் பலியானார்.#tamilnews
    வேளச்சேரியில் பட்டபகலில் அதிமுக பிரமுகரின் தாயாரை 3 பேர் கும்பல் தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலந்தூர்:

    வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் முல்லை செல்வம். அ.தி.மு.க. வட்ட செயலாளராக உள்ளார். இவரது தாய் பூமயில் (வயது 64).

    இன்று காலை பூமயில் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

    காமராஜபுரம், குமரன் தெருவில் வந்த போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிமறித்தனர். திடீரென அவர்கள் பூமயில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பூமயில் கொள்ளையர்கள் பிடியில் இருந்து நகையை பாதுகாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பூமயிலை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த பூமயிலுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி கவிதா (வயது40). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராபின் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கவிதா அதே பகுதியில் உள்ள தனது கடை முன் நின்றிருந்தார். அப்போது ஆட்டோ- மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி 8 பேர் வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் கவிதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே அவர் அலறியபடி தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    இதற்குள் 8 பேரும் மோட்டார்சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கவிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபின், சசி என்ற மணிகண்டன், கார்த்திக், குணா, விஜி, மற்றொரு கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். ராபின் போலீசாரிடம் கூறுகையில், தனது தந்தை கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

    இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    திருப்போரூரில், புதிதாக கட்டப்படும் வரும் அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் தொட்டிக்குள் காவலாளி பிணமாக மிதந்ததால், அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    நாவலூரை அடுத்த தாழம்பூரில் 28 மாடி கொண்ட புதிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 34) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியின் மேல் நாற்காலியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் குடிநீர் தொட்டிக்குள் சிவக்குமார் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு காவலாளி தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி காவலாளி சர்க்கரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும் போது, ‘நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவக்குமார் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் அவரை மீட்ட போது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    சிவக்குமார் காவல் பணியில் இருந்த போது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குடிநீர் தொட்டியில் தள்ளி விட்டனரா? என்பது குறித்து தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மடிப்பாக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    திரிசூலம் இலுப்பை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24). மினி லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார்.

    அவருக்கு அருகே 5 பேர் கும்பலும் மது குடித்துக் கொண்டிருந்தனர். குடிபோதையில் இவர்களுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அது முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து சினிமா பாணியில் பீர் பாட்டில்களால் தலையில் ஓங்கி அடித்து தாக்கினர்.

    மண்டை உடைந்ததால் நிலை குலைந்த சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் ராஜா, சுடலை ராஜன், ராமச்சந்திரன், திலீப், கலைமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    முன் விரோதத்தில் இக்கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×