என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி பின்பு முதல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஜான் லூயிஸ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    செங்கல்பட்டு:

    71-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி பின்பு முதல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக் குட்பட்ட வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி பின் புறம் உள்ள மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தேசிய கொடி ஏற்றி போலீஸ் அணி வகுப்பை பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள், போலீசாரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து ரூ. 70 லட்சத்து 63 ஆயிரத்து 352 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார். நிகழ்ச்சி யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத் தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 32 பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான் றிதழ்களை வழங்கினார். பின்னர் 72 பயனாளிகளுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார்.

    விழாவில், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் நாராணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி., கலைச் செல்வன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கலந்து கொண்டனர்.

    இதேபோல் காஞ்சீபுரம் நகராட்சியில் ஆணையாளர் மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தனார். இதில் பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மண்டல இணைபதிவாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் மண்டல இணைபதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் துணை பதிவாளர் சங்கர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், ராஜநந்தினி, காத்தவராயன், கோதண்டராமன், மேலாளர் முரளி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 113 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 76லட்சத்து 64 ஆயிரத்து 521 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசு வழங்கினார்.

    மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 29 போசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றி தழ்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவி களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி , மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் ஜெயகுமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், கோட்டாட்சியர் வித்தியா, வட்டாட்சியர் பாண்டிய ராஜன், திருவள்ளூர் துணை சூப்பிரண்டு கங்காதரன் பங்கேற்றனர்.

    ஆலப்பாக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் திரவ்புதின். இவரது மகள் பிரவீனாபானு (வயது 16). தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக் கம் அருகே களியப்பேட்டை கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் அமர்ந்து இருப்பது போல் தோற்றமுடைய முழு உருவமுள்ள பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1998-ம் ஆண்டு திராவிட கழகத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிலையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அதில் பெரியார் சிலையில் முகத்தில் இருந்த கண்ணாடி மற்றும் கை சேதமடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதை பார்த்ததும் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், அந்தோணிதாஸ், சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் உடனடியாக சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை போலீசார் துணியால் மூடி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சிலையை சுற்றி பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். சிலை உடைப்பு காரணமாக அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரித்து வலைவீசி வருகின்றனர்.

    சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஆண்டு விழாவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் ரஜினியின் பெயரை களங்கப்படுத்துவதற்காக யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியார் சிலை உடைக் கப் பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
    உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்து உள்ளது. ரஜினிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நீடித்து வருகிறதது.

    இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த மர்ம கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்று விட்டனர்.

    இன்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணை

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    பொங்கல் தொடர் விடுமுறை நாட்களில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் கடற்கரை மற்றும் புரதான சின்னங்கள் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிந்தன. அப்பகுதிகளில் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற குப்பை தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

    இதனால் குப்பைகள் சிதறி கடற்கரை பகுதிகள் எங்கும் குவிந்து கிடக்கிறது சுகாதாரமற்ற நிலையில் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில் மாடுகள் உலா வருகிறது.

    நடைபாதை கடைகளின் குப்பைகள் ஐந்து ரதம், கடற்கரை கோவில் பகுதியில் ரோட்டோரம் கிடக்கிறது. தொடர் விடுமுறை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் சுகாதார தூய்மை பணிகளை வேகமாக செய்வதில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் மாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    மாமல்லபுரத்தில் பொங்கலுக்காக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
    மாமல்லபுரம்:

    பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்களின் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடிய 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகர மினிபஸ்கள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.

    அவை 5 நாட்களாக மாமல்லபுரம் நகருக்குள் ‘588 கட் சர்வீஸ் - சிறப்பு பேருந்து’ என்ற பெயரில் பூஞ்சேரி டோல்கேட் மற்றும் புறவழிசாலை பகுதியில் இருந்து அர்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் மற்றும் மாமல்லபுரத்தில் பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

    கடந்த ஆண்டுகளில் பொங்கல் தொடர் விடுமுறையன்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்தால் குழந்தைகளுடன் வெயிலில் நடந்து செல்லும் நிலையும் ஆட்டோக்களுக்கு அதிக செலவு செய்யும் நிலையும் இருந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நேற்று இரவுடன் மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டு அவைகள் ரெகுலர் வழித்தடத்துக்கு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது.


    கிண்டியில் மனைவியை கொன்ற கணவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    ஆலந்தூர்:

    கிண்டி, மடுவின்கரை, மசூதி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவருடைய மனைவி உஷா (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    நேற்று காலை வீட்டில் இருந்த உஷா மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கணவர் பிரசாத், குழந்தையுடன் மாயமாகி இருந்தார்.

    இது குறித்து கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரசாத், தனது மனைவி உஷாவை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் மகளை ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்து தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது, “வீட்டில் இருந்த போது மனைவி உஷாவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் உஷாவை தாக்கினேன்.

    இதில் அவர் அருகில் உள்ள கிரைண்டரில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து போனாள். இதனால் பயந்து போன நான் குழந்தையுடன் ஆந்திராவுக்கு தப்பி சென்றேன்” என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து பிரசாத்தை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    மாமல்லபுரம் அருகே கார் மோதி தாய், மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (38). இவரது மகன் திருமுருகன் (4). கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இன்று காலை திலகவதி, மகன் திருமுருகனை பள்ளிக்கு அனுப்பி வைக்க அதேபகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் திலகவதி அவரது மகன் திருமுருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
    தாம்பரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வாரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து நேற்று முதல் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

    நேற்று மாலை முதல் அதிக அளவு வாகனங்கள் சென்னையை நோக்கி வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இன்று அதிகாலை சென்னையின் நுழைவு வாயிலான வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் அதிக அளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் ஸ்தம்பித்து நின்றன.

    கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. பெருங்களத்தூர் - வண்டலூர் இடையே வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் அதிகாலை தொடங்கி காலை 10 மணி வரை நீடித்தது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் காலை 5 மணி முதல் பணியில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக வண்டலூர் மேம்பாலம் அருகில் பெருங்களத்தூர் நோக்கி சென்ற கனரக வாகனங்களை இடது புறமாகத் திருப்பி வெளிவட்ட சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    பெருங்களத்தூர் வந்து இறங்கிய பயணிகள் சென்னை நோக்கி செல்வதற்கு மாநகர பஸ் வசதி குறைவாக இருந்ததால் பெருங்களத்தூர் பஸ் நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அதிக அளவு வாகனங்கள் வந்ததால் அச்சரபாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி மற்றும் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இலவசமாக செல்ல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தென் மாவட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் இன்று காலை 10 மணி வரை இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

    சேலம் மாவட்டம் கருப்பூர், தர்மபுரி மாவட்டம் தொப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வாகனங்கள் அந்த சுங்கச்சாவடியை கடக்க அரைமணி நேரத்திற்கும் மேலானது.

    சென்னையில் இருந்து பெங்களூரு செல்லவும், சேலம், தர்மபுரியில் இருந்து பெங்களூரு செல்லவும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    நேற்று மாலை முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. வழக்கத்தைவிட 5 மடங்கு வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்ததாலும், ஒரு கவுண்டர் தவிர மற்ற கவுண்டர்களில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாலும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

    ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள பாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஒப்பிட்ட பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    போரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
    பூந்தமல்லி:

    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை போரூர், மதுரவாயல் சுற்று வட்டார மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நேற்று நடைபெற்றது.

    சேக் தாவூத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளுடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு என்று எண்ணிவிடக்கூடாது. அதனால்தான் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறோம். இதை கண்டித்து பிப்ரவரி 15-ந் தேதி திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்.

    ஆபத்தான இந்த சட்டம் குறித்து மோடி, அமித்ஷா மாறி, மாறி கருத்துகளை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். அதுதான் நமது கோரிக்கை.
    ரஜினிகாந்த்
    தந்தை பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும், சிலையையும் அவமதிக்கவில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. அந்த விளக்கத்தை திராவிட கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக கூறி இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

    பெரியாரை கொச்சைப்படுத்தும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர். சங்பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகிவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று. அவர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையொட்டி போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    படப்பை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    படப்பை:

    படப்பை அருகே ஒரகடம் கூட்டு சாலையில் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன்- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று பிடித்தனர்.

    அப்போது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    அந்த காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பட்டாபி காலனி சேர்ந்த பாலமுருகன். அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மாசாலா பொருட்கள், அவற்றை கடத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவான பெருமாள் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். குட்கா பொருட்கள் ஆந்திராவில் இருந்து ஒரகடத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதுதான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதுதான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் கமல்ஹாசன் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.

    ×