என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது.

    இந்த நிலையில் படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவது தொடர் கதையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    கால்நடைகள் சாலையிலேயே நிற்பதால் விபத்து ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே படப்பை , வஞ்சூவாஞ்சேரி. செரப்பனஞ்சேரி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளையும் பிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
    கல்பாக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் மார்க்கெட் வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்னால் உள்ள ஆஸ் பெட்டாஸ் கூறை சீட்டின் கம்பியில் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் பிணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எவரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    படப்பை அருகே குடோனில் ரசாயன கேன் வெடித்து பெண் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    குன்றத்தூர் அடுத்த மன்னன்சேரி ஸ்ரீ ராஜ கணபதி நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் குன்றத்தூர் அடுத்த அமரம்பேடு கிராமத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.

    ராஜா சென்னையில் உள்ள ராமாபுரம், சூளை பள்ளம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதியில் பழைய இரும்பு கடையில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வந்து அதை அரைத்து தூளாக்கி சென்னை புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தார்.

    இவரிடம் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் அமரம்பேடு பழைய இரும்பு கடை குடோனுக்கு அருகே தங்கி வேலை செய்து வந்த னர்.

    இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திரிகா புஷ்வான் (32) மற்றும் இவரது உறவினர் சஞ்சய் ஆகிய இருவரும் அமரம்பேடு பகுதியில் உள்ள குடோனில் ரசாயன பிளாஸ்டிக் கேன்களை அறுத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த ரசாயன கேன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் சந்திரிகா புஷ்வான், சஞ்சய் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா புஷ்வான் பரிதாபமாக இறந்தார். சஞ்சய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த குடோனை சோதனை செய்ததில் 30-க்கும் மேற்பட்ட ரசாயன கேன்கள் இருப்பது கண்டுபிக்கப்பட்டது.

    பழைய இருப்பு குடோன் உரிமையாளர் ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    இதே போல கடந்த 20ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைபட்டு கிராமத்தில் குப்பை மேட்டில் கிடந்த ரசாயன கேனை அதே பகுதியை சேர்ந்த சாந்தி வீட்டுக்கு எடுத்து வந்து அதை வெட்டும் போது ரசாயன கேன் வெடித்து சாந்தி பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கல்பாக்கத்தில் பஸ்-வேன் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுபட்டினம் பகுதியை சேர்ந்த சாதிக் (வயது 19). அப்பகுதி எலக்ட்ரிக் கடையில் மிக்சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறான்.

    நேற்று நள்ளிரவில் புதுப்பட்டினத்தில் நடந்த கனியான் கூத்து கலை நிகழ்ச்சியை பார்த்து விட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு கல்பாக்கம் எல்.ஆர் குப்பம் பைபாஸ் ரோடு அருகே உள்ள டீக்கடைக்கு சைக்கிளில் சென்றார். அப்போது சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சும் கடலூருக்கு சென்ற சரக்கு வேனும் நேருக்குநேர் மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சாதிக் பஸ்வேன் இரண்டுக்கும் நடுவே சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பஸ்வேன் டிரைவர் இருவரும் கால்கள் உடைந்த நிலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் இருவரையும் கல்பாக்கம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷமிட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடு முழுவதும் போராட்டங்களும் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டம்., தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷமிட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சீபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள சுவர்களில் மத்திய அரசின் குடியுரிமை சடடம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெயிண்டிங் செய்து, 2 பெண்கள் விளம்பரம் செய்தனர்.

    மேலும் அதனை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வினியோகித்து கோஷமிட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து அவர்களை மேலும் சுவர் விளம்பரம் செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் 2 பெண்களையும் கைது  செய்தனர். கைதான பெண்கள் பற்றிய விபரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.  விசாரணைக்கு பிறகு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
    திருப்போரூர்:

    மாமல்லபுரத்தை அடுத்த பையனூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்ததும், போலீஸ் நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மூர்த்தி அங்கேயே பரிதாபமாக இறந்தார். அந்த நேரத்தில் மற்ற போலீசார் அங்கு செல்லாததால் ஏட்டு மூர்த்தி இறந்தது உடனடியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஓய்வு அறைக்கு மற்ற போலீசார் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி இறந்து கிடப்பது தெரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மூர்த்தியின் உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    மதுராந்தகம் அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக காட்டுக் கூடலூர், நேமம், அத்திவாக்கம் வழியாக அச்சிறுபாக்கம் வரை செல்லும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை நேமம் கிராமத்திற்கு அரசு பஸ் தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பஸ்சை சிறை பிடித்தனர். அச்சிறுபாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.
    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு பொது தேர்வுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்,

    இந்ததேர்வு சிறு குழந்தைகள் இடைநிற்றலுக்கு வழி செய்யும், மனச்சுமையை ஏற்படுத்தும்.

    இந்த ஆபத்தான திட்டத்தை அரசு இந்த ஆண்டே கைவிடவில்லையென்றால் வருகின்ற பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ ஒரு பெரிய சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிடர் கழகம், ஒத்த கட்சிகளையும் இணைத்து நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு திருச்சியில் பிப்ரவரி 21-ல் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும்.

    நீட் தேர்வை தொடர்ந்து மத்திய அரசு அடுத்த வெடி குண்டை தூக்கி போடுவது போல மாநில அரசின் உரிமையை பறிப்பதற்கு பொது சுகாதாரம், மருத்துவ மனைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி ஒத்து செய்யும் பட்டியலுக்கு எடுத்து செல்லப்போவதாக நிதி கமி‌ஷன் பரிந்துரை என்று ஆக்கியிருக்கிறார்கள், இது மாநில அரசுகளுக்கு மிக பெரிய ஆபத்து.

    ஏனென்றால் மருத்துவர்கள் நியமனம் எல்லாம் மத்திய அரசிடமிருந்து வரும்,

    நீட் தேர்விற்கு விதிவிலக்கு அளிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சொல்வதை போல, இதற்கும் மத்திய அரசு விதி விலக்கு அளிக்காது.

    இந்த நடைமுறையினால் இங்குள்ள மருத்துவர்கள் பிற மாநிலங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள், பிற மாநில மருத்துவர்கள் இங்கு பணி அமர்த்தும் போது அவர்களுக்கு மொழி தெரியாது, நோயாளிகளின் பிரச்சினைகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும்.

    எனவே இத்திட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்வு காண வேண்டும், எதிர்கட்சிகள் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு என்பது தான் மத்திய அரசின் பணியாக உள்ளது. இதை தெளிவாக புரிந்து கொண்டு தடுக்கின்ற முயற்சியில் மாநில அரசும்,மாநில தலைவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலவாக்கத்தில் அலுவலகத்தில் மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கமலக் கண்ணன் (வயது 40). பாலவாக்கம் பகுதியில் ஆட்களை வெளி நாட்டிற்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணி புரிந்து வந்தார்.

    இவர் கடந்த 3 நாட்களாக அலுவலகத்துக்கு விடுமுறை அளித்து இருந்தார். ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வந்த போது பூட்டி இருந்ததால் முதன்மை மேலாளர் கமலக்கண்ணனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்து போனின் சத்தம் வந்தது. இதுபற்றி உழியர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கமலக்கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிறுவர்கள் மீதான உளவியல் தாக்குதல் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மிக மோசமான ஒரு அரசு பயங்கரவாத நடவடிக்கை இதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இது மாணவ-மாணவிகள் மீது நடத்துப்படுகின்ற உளவியல் தாக்குதல் இதனை அரசு எந்தவிதத்திலும் நியாயபடுத்த முடியாது. எனவே 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்.

    புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது மற்றும் உடைத்து நொறுக்குவது போன்ற நடவடிக்கைகளை சங்பரிவார் அமைப்புகளின் வன்முறை பேச்சால் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.

    எனவே இதை தடுப்பதற்கு தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கென தனி உளவு அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதனால் சமூக ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு இயற்றப்படும் தீர்மானங்களாக இருந்தாலும் கூட அதை நிறைவேற்றும் நிலையில் தமிழக அரசு அதிகார வலிமை பெற்றவர்களாக இல்லை.

    தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய ஒன்றாக தற்போது மாறி சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

    இதனால் சட்டமன்றத்திலோ கிராம சபைகளிலோ இயற்றப்படும் தீர்மானங்கள் அது மக்களுக்கு பயன் தரக்கூடிய தீர்மானங்களாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் நிலையில் அதிகார வலிமை பெற்றவர்களாக இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய செயலாளர் டேவிட், நிர்வாகி இந்திரா நாராயணன் உடன் இருந்தனர்.
    சென்னை விமான நிலைய வளாகத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே பிரபல ஓட்டல் உள்ளது.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இன்று காலை அவர்கள் ஓட்டலை திறந்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    மேலும் ஓட்டலில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களையும் திருடி சென்றிருந்தனர். ஓட்டலின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த கும்பல் பணம் மற்றும் பொருட்களை அள்ளி தப்பி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களில் ஒருவன் உருவம் பதிவாகி உள்ளது.

    முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டி உள்ளான். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆதம்பாக்கத்தில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதி 3-வது தெருவில் சுகுமார் என்பவர் வீட்டில் போதை மாத்திரை விற்கப்படுவது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று போதை மாத்திரை விற்ற சுகுமார், அவரது மனைவி வசந்தி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி போதை மாத்திரை விற்க மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ், இளங்கோ மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் ஆகியோரும் சிக்கினர்.

    அவர்களிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அவர்கள் வாங்கி வந்து விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    10 மாத்திரைகள் கொண்ட அட்டையை ரூ. 300-க்கு வாங்கி வந்து இங்கு ஒரு மாத்திரை ரூ. 300-க்கு விற்றுள்ளனர். இந்த மாத்திரையை மாணவர்களும், இளைஞர்களும் தண்ணீரில் கலக்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி வந்தனர்.

    இதன் மூலம் ஏற்படும் போதை 2 நாட்களுக்கு இருந்துள்ளது. போதை மாத்திரை விற்றதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    கைதான சுகுமார் மற்றும் அவரது மனைவி வசந்தி உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 2 பேர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ×