என் மலர்
காஞ்சிபுரம்
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர் பல்லாவரத்தில் உள்ள மகளை பார்த்துவிட்டு பஸ் மூலம் மீண்டும் அனகாபுத்தூர் வந்தார். பின்னர் அவர் அம்பேத்கார் சாலை பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் இருந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாங்கள் செல்லும் பகுதியில் கலவரம் நடக்கிறது. எனவே கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருந்த தங்க நகைகளை பையில் வைத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர்.
இதை நம்பிய மூதாட்டி சரஸ்வதி தான் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை மர்ம நபர்களிடம் கொடுத்தார். அவர்கள் நகைகளை ஒரு பேப்பரில் மடித்து சரஸ்வதி வைத்திருந்த பையில் வைத்து அனுப்பினர்.
சரஸ்வதி சிறிது தூரம் சென்றதும் எந்தவித கலவரமும் நடக்காதது கண்டு தனது நகைகளை போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி பார்த்தார். அப்போது மர்மநபர் மடித்து கொடுத்த பேப்பரில் நகைகள் இல்லை. அதனை அவர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சரஸ்வதி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க போவதாக முதல்-அமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால் இதில் பெரிய அளவில் விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட வேண்டும்.
வேளாண்மை மண்டலம் என்று அறிவித்தால், அங்கு வேறு தொழில்கள் செய்ய அனுமதி உண்டா என்பது தெரியவேண்டும்.
அனுமதி உண்டு என்றால் எந்த தொழில்கள் செய்யலாம்?. எந்த தொழில்கள் செய்யக்கூடாது? என்ற விவரங்களை தொழில் சார்ந்த அறிஞர்கள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி அறிவிக்க வேண்டும்.
பிற தொழில்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் விவசாயிகள் வளமாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
7 மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. சில மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இதனால் டெல்லி தேர்தல் முடிவுகள் பெரிய விஷயம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையிலிருந்து இன்று காலை 6:15 மணி அளவில் 176 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என 182 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கோவைக்கு புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் மீண்டும் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு,182 பேர் உயிர் தப்பினர்.
இதையடுத்து விமானத்தை சரிசெய்யும் பணியில் விமான நிலைய என்ஜினீயர்கள் முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. 182 பேரும் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விமானநிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஒரு வரலாற்று மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு அந்த மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன். ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஏனென்று தெரியவில்லை.
கடலூரில் பெட்ரோல் ஆலை நிறுவப்படும் என்று சொல்லி இருப்பதற்கும் இந்த டெல்டா மாவட்டம் வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதற்கும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.
ஒரு தொழிற்சாலை தொடங்கினால் அங்கு வேலை வாய்ப்பு பெருகும்.இதுகுறித்து அரசு முழுமையான அறிவிப்பு வெளியிடும். மக்களுக்கு எந்த பாதிப்பும் நேராதவாறு ஆராய்ந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் அய்யப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிடித்துள்ளது. அந்த அய்யப்பன் யார் என்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர். தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர். தற்போது அவரை எந்த விவாத மேடையிலும் காணவில்லை.
அய்யப்பன் தி.மு.க. வை சேர்ந்த அப்பாவுவின் கூட்டாளி. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் அப்பாவு.
இது திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட விஷ செடிகள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்த நெட்வொர்க்குகளை இன்று நாங்கள் களை எடுத்து வருகிறோம். தற்போது வரை 35 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் எந்த ஒரு சிறு தவறும் இல்லாதவாறு 100 சதவீதம் அளவிற்கு சரி செய்து மக்கள் போற்ற தக்கவாறு இந்த அரசு செயல்படும். இதற்கு எல்.போடான உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார்.
மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். தயாநிதிமாறன் இதற்கு என்ன சொல்லப் போகிறார். இதற்கெல்லாம் 3 பேரும் விடை சொல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வல்லிபுரம் கிராமத்தில் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் செய்யாறு அருகே உள்ள வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வக்கீல் பெருமாள் என்பவர் திருக்கழுக்குன்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனாலிசா என்று அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து விட்டார்.
இதனை அறிந்த சோனலிசா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி விசாரணை நடத்திய போது சோனலிசாவின் 10 ஏக்கர் நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து பலருக்கு ரூ. 2 கோடி வரை விற்பனை செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வக்கீல் பெருமாள் அவருக்கு உடந்தையாக இருந்த காவலாளி விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான வக்கீல் பெருமாள் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ரெட்டியாப்பா ரெட்டி என்பவரின் 7.5 ஏக்கர் நிலத்தையும், 2017-ல் சேகர் என்பவரின் 2.5 ஏக்கர் நிலத்தையும், பாலு என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தையும் மோசடி செய்ததாக சிறைக்கு சென்று வந்தவர்.
தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ். சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் பார்த்திபன் என்பவர் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக் கடை சார்பில் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நகைக்கடையில் உதவி மேலாளராக வேலை செய்த பார்த்திபன், வெங்கடேசன், நம்ஆழ்வார் ஆகியோர் போலி செக்கை பயன்படுத்தி ரூ.45 லட்சம் மதிப்பில் நகை மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது.
போலீஸ் விசாரணை நடத்தியபோது பார்த்திபன், வெங்கடேசன், நம்ஆழ்வார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த தாம்பரம் போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.
கண்டோன்மென்ட் பல்லாவரம் இரண்டாவது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சீதா (வயது 36) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணி செய்து வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து தனது மோட்டார் பைக்கில் வீட்டுக்கு செல்வதற்காக பல்லாவரம் கார்டன் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மருத்துவரிடம் அவதூறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கீதா கொடுத்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திரிசூலத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளிக்கரணை கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). ஆட்டோ டிரைவர். மனைவியை விவாகரத்து செய்த அவருக்கு கூடுவாஞ்சேரி மோகனபிரியா நகரை சேர்ந்த ராணி (33) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் சுரேசின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கதவை உடைத்து பார்த்த போது சுரேசும், ராணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது. அவர்கள் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் பாவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் வீதிவீதியாக சென்று காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர் குமார், பிரபாகரன், இக்பால் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐயப்பன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீடு மற்றும் காரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவைகள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தன்ர். மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக வியாபாரி ஐயப்பனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மருத்துவம், என்ஜினீயரிங், கலை-அறிவியல், சட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கியும், சுற்றுப்புற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகே எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டனர்.
அவர்கள் பட்டாக்கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை காட்டி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
துப்பாக்கியுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும் இந்த வீடியோ வாட்ஸ்-அப்பிலும் வேகமாக பரவியது.
இதனை பார்த்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் மறைமலைநகர் போலீசார் மோதல் நடந்த பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் இறங்கியதை கண்டதும் பல்கலைகழகத்தில் இருந்த மாணவர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர். நள்ளிரவு வரை போலீசார் அங்கிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் பல்கலைக்கழக விடுதிக்குள் தங்க அனுமதித்தனர். போலீசாரின் நடவடிக்கையால் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி வரவில்லை.
அவர்கள் பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் வீடியோவில் பதிவான காட்சியை வைத்து அதில் உள்ள மாணவர்களை பிடிக்க வேட்டை நடந்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவிலும் மாணவர்களின் மோதல் காட்சி பதிவாகி இருக்கிறது. அதனை வைத்தும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த மோதல் குறித்து எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவர்கள் லலித்பிரசாத், விஷ்ணு, ராகேஷ், ரஷித், மவுலான் அலி ஆகியோர் மறைமலைநகர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகாரில் தெரிவித்த மாணவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க இன்று காலையில் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இங்கு படிக்கும் வட மாநில மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாகவே மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து தாக்கி கொண்டு உள்ளனர். அவர்களுக்கு பட்டாக்கத்தி, துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. குற்றவாளிகள் யாரேனும் மாணவர்களுடன் சேர்ந்து மோதலில் ஈடுபட்டனரா என்றும் விசாரணை நடக்கிறது.
இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
அனகாபுத்தூரை சேர்ந்தவர் லோகநாதன் (32). வாடகை கார் டிரைவர். இவர் 2-ந்தேதி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து 3 வாலிபர்களை கோவிலம்பாக்கத்துக்கு சவாரி ஏற்றிச் சென்றார்.
அப்போது காரில் ஏ.சி. இல்லாததால் வாலிபர்கள் டிரைவரிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக லோகநாதனுடன் பணியாற்றிய சக கார் டிரைவர்கள் 200 பேர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் விசாரணையில் லோகநாதனை தாக்கியது செங்கல்பட்டை சேர்ந்த பிரித்வி, பழவந்தாங்கலை சேர்ந்த ரஞ்சித், கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்த ஆல்டோ என்பது தெரிய வந்தது. இதில் பிரித்வி, ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக ஆல்டோவை தேடி வருகிறார்கள்.
மாமல்லபுரம் கருகாத்தம்மன் கோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலை இணைப்புடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அந்த இடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட ஆய்வு பணி தொடங்கியது.
இந்த புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் ஒருவழி பாதை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மற்ற பயணிகளால் இடையூறு இல்லாமல் இருக்க குளிர்சாதன ஓய்வு அறை, கேமரா கண்காணிப்புடன் கூடிய லக்கேஜ் அறை, வை-பை இணையதள வசதிகள், வெளிநாட்டு கழிப்பறைகள்.
மேலும் சிற்பக்கலை ஆர்சுகள், புராதன சின்னம் பகுதிகளின் வரைபட கல்வெட்டுகள், பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்க நவீன சுழல் கேமராக்கள் வசதியுடன் கட்டுப்பாட்டு அறை, மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் மட்டும் அமர்ந்திருக்க வழிகாட்டிகள் அறை இது போன்ற சகல வசதிகள் அமைய உள்ளது.
சிற்ப கலை நயத்துடன் நவீன பஸ் நிலையமாக இது அமைய இருக்கிறது.






