search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய அய்யப்பன் திமுக பிரமுகர் - அமைச்சர் ஜெயக்குமார்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிக்கிய அய்யப்பன் தி.மு.க. பிரமுகர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஒரு வரலாற்று மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு அந்த மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன். ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஏனென்று தெரியவில்லை.

    கடலூரில் பெட்ரோல் ஆலை நிறுவப்படும் என்று சொல்லி இருப்பதற்கும் இந்த டெல்டா மாவட்டம் வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதற்கும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

    ஒரு தொழிற்சாலை தொடங்கினால் அங்கு வேலை வாய்ப்பு பெருகும்.இதுகுறித்து அரசு முழுமையான அறிவிப்பு வெளியிடும். மக்களுக்கு எந்த பாதிப்பும் நேராதவாறு ஆராய்ந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் அய்யப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிடித்துள்ளது. அந்த அய்யப்பன் யார் என்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர். தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர். தற்போது அவரை எந்த விவாத மேடையிலும் காணவில்லை.

    அய்யப்பன் தி.மு.க. வை சேர்ந்த அப்பாவுவின் கூட்டாளி. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் அப்பாவு.

    இது திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட வி‌ஷ செடிகள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்த நெட்வொர்க்குகளை இன்று நாங்கள் களை எடுத்து வருகிறோம். தற்போது வரை 35 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    எதிர்காலத்தில் எந்த ஒரு சிறு தவறும் இல்லாதவாறு 100 சதவீதம் அளவிற்கு சரி செய்து மக்கள் போற்ற தக்கவாறு இந்த அரசு செயல்படும். இதற்கு எல்.போடான உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார்.

    மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். தயாநிதிமாறன் இதற்கு என்ன சொல்லப் போகிறார். இதற்கெல்லாம் 3 பேரும் விடை சொல்லட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×