என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 12½ கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 14 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.

    எனினும் தங்கம் கடத்தல் சம்பவம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாக தெரிகிறது.



    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

    கோப்புப்படம்

    அப்போது 18 பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 12½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தி வெளியே அனுப்பிய பின்னரே இந்த கடத்தல் தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து இருந்தனர். எனவே இதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து தங்கம் கடத்தி வந்த 18 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ய முடிவு செய்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்காக விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து கொண்டிருந்தன.

    அப்போது அங்கு வந்த கடத்தல்காரர்களுக்கு அறிமுகமான ஏராளமானோர் அதிகாரிகளிடம் திடீரென வாக்குவாதம் செய்தனர். இந்த நேரத்தில் தங்கம் கடத்தல்காரர்கள் 18 பேரும் ஆளுக்கு ஒரு திசையாக தப்பி ஒட்டம் பிடித்தனர்.

    இதனால் அவர்களை கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

    இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தப்பி ஓடியவர்களின் பாஸ்போர்ட் விவரத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடத்தல்காரர்கள் 14 பேர் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இன்று காலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல்காரர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
    ஒரகடத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் அதே இடத்தில் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    படப்பை:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா உண்ணமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் இவருடைய மகன் விஷ்ணுவரதன் (வயது 27). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் விஷ்ணுவரதன் ஏறியுள்ளார்.

    மோட்டார் சைக்கிள் வடகால் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது சாலையில் மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மாட்டின் மீது மோதாமல இருக்க பிரேக் பிடித்தார். அப்போது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது அதே பகுதியில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி விஷ்னுவரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்து காயம் அடைந்த நபரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஷ்ணுவரதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தை சேர்ந்த நாகசுதன் ( 25) என்பது தெரியவந்தது.
    கல்பாக்கம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் அசோக்குமார் (வயது 37). கூலி வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு ரேவதி (34) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    அசோக்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், அதனால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிருதிப்தியடைந்த ரேவதி கணவரை விட்டு பிரிந்து, கடந்த ஒரு மாதமாக தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தோழி வீட்டில் சென்று தங்கியுள்ளார்.

    இதனால் தனிமையில் இருந்த அசோக்குமார் விரக்தியடைந்து நேற்று மாலை வீட்டில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமானுஜம் ஆகியோர் விரைந்து சென்று இறந்துபோன அசோக்குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    பரங்கிமலையில் பைக் ரேஸ் தகராறில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கொத்தவால் தெருவை சேர்ந்தவர் ஜமால் (21). இவர் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென ஜமாலை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜமாலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தை சேர்ந்த காணிக்கைராஜ், பிரபாகர் ஆகிய இருவரை கைது செய்தனர். பைக் ரேசில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2020-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று வெளியிட்டார். மேலும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 25 ஆயிரத்து 755. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 71 ஆயிரத்து 946. இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 529 ஆகும்.

    இந்த நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம். 
    ஆதம்பாக்கத்தில் மனைவியுடன் தவறாக பழகிய கள்ளக்காதலனை கணவருடன் சேர்ந்து குத்தி கொல்ல முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் 11-வது தெருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபுசாலி முஸ்தபா, அவரது மனைவி ருஸ்தானா பேகம் ஆகியோர் வசித்து வந்தனர்.

    அபுசாலி முஸ்தபா வேளச்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவரும் அதே பகுதி கக்கன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தஜ்மல் அகமதுவும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் அபுசாலி முஸ்தபா வீட்டில் இல்லாத போது அவரது மனைவி ருஸ்தானா பேகத்துடன் தஜ்மல் அகமது பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இது பற்றி அறிந்த அபுசாலி முஸ்தபா அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். அப்போது தஜ்மல்அகமது வலுக்கட்டாயமாக வீட்டுக்கு வந்து பழகியதாக ருஸ்தானா பேகம் கணவரிடம் கூறினார்.

    இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் தஜ்மல் அகமதுவை வீட்டிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அபுசாலி முஸ்தபாவும், ருஸ்தானா பேகமும் கத்தியால் தஜ்மல் அகமதுவை குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தஜ்மல்அகமதுபுக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன், சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து அபுசாலி முஸ்தபா, அவரது மனைவி ருஸ்தானா பேகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தற்போது ருஸ்தானா பேகம் 6 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆதம்பாக்கத்தில் தனியார் வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த தங்க மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    திருவொற்றியூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக 10 வருடங்களாக வேலை செய்து வருகிறார். அந்த வங்கியில் ஆதம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் வாடிக்கையாளர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் பெற்றார். அந்த நகைகளை சுப்பிரமணியன் மதிப்பீடு செய்து கடன் தொகையை நிர்ணயித்துள்ளார்.

    இந்த நிலையில் வங்கி லாக்கரில் உள்ள நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராஜம்மாள் அடகு வைத்த நகை அனைத்தும் போலியானது என தெரிய வந்தது. இந்த மோசடிக்கு மதிப்பீட்டாளர் சுப்பிரமணி உடந்தையாக இருந்துள்ளார்.

    இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சீனிவாசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினார்கள். வாடிக்கையாளர் ராஜம்மாளும், மதிப்பீட்டாளர் சுப்பிரமணியனும் சேர்ந்து போலி நகையை வைத்து பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். ராஜம்மாளை தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் விதிகளை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது நீடிக்கிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 300 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஏற்கனவே மூன்று முறை இந்த கடைக்கு எச்சரிக்கை விடுத்தும் விதிகளை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்’ வைக்க நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் அருகே மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் பின்புறம் பச்சிளம் ஆண் குழந்தை நீண்ட நேரம் அழுதபடி இருந்தது. குழந்தை அருகே யாரும் இல்லை.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்தவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    குழந்தை வீசப்பட்ட இடம் அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. அதில், ‘ஜனவரி 31-ந்தேதி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை’ என்ற ஓ.பி. சீட்டு மட்டும் இருந்தது.

    குழந்தை யாருடையது என்று தெரியாததால் போலீசார் செங்கல்பட்டு குழந்தைகள் நல அலுவலர் கீதாஞ்சலியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

    குழந்தையின் பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 2-வது குறுக்கு தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகின்றன.

    துர்நாற்றத்துடன் வரும் இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் கூடுதல் விலை கொடுத்து குடி தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு நீர் கலந்த குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள 355 கிலோ தங்கம் சிக்கி உள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். எனினும் தங்க கடத்தல் நீடித்து வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு (2019) சென்னை விமான நிலையத்தில் கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள 355 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. 2018-ம் ஆண்டு ரூ.72 கோடி மதிப்புள்ள 232 கிலோ தங்கம் பிடிபட்டு இருந்தது.

    இதன்மூலம் கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டு 67 சதவீதம் கடத்தல் தங்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தங்கம் கடத்தல் தொடர்பாக 2018-ம் ஆண்டு 389 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 841 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.2.25 கோடி வைரங்களும் சிக்கி இருந்தது.

    கடத்தல் தொடர்பிலும் கடந்த ஆண்டு 113 பேரும், 2018-ம் ஆண்டு 36 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதேபோல் 2018-ம் ஆண்டு ரூ.78 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவும், 2019-ம் ஆண்டு ரூ.1.4 கோடி மதிப்பிலான குங்குமப்பூவும் சிக்கி உள்ளது.

    இது தொடர்பாக சுங்கத்துறை ஆணையர் ராஜன் சவுத்ரி கூறும்போது, “அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் அதிக அளவு கடத்தல் தங்கம் பிடிபட்டு உள்ளது.

    கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் இன்பார்மர்கள் தொடர்பு நல்ல நிலையில் உள்ளது. அதிகாரிகள் கடத்தல் தங்கம் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
    காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி அமராவதி பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (36). ரவுடி. இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை சம்பவம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் மற்றும் பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் போலீசார் கருணாகரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கருணாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட கலெக்டர் பொன்னையாவிற்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ரவுடி கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த ஆணையை பாலுசெட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வேலூர் மத்திய சிறையில் வழங்கினார்.

    ×