என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கல்பாக்கம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமம் சின்ன குப்பம் பகுதியை சேர்ந்தவர் தயாளன். மீனவர். இவரது மனைவி வெண்ணிலா (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. வெண்ணிலாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பட்டினம் குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று அங்கு தனது குழந்தையுடன் வெண்ணிலா வசித்து வந்தார்.

    விரக்தி அடைந்த நிலையில் இருந்த வெண்ணிலா கடந்த 1-ந் தேதி பிற்பகல் 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவி அவர் அலறி துடித்தார்.

    அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    இந்து மதத்திற்கு ரஜினிகாந்த் அரணாக இருப்பார் என்றால் அவருக்கு கட்டாயம் உதவிசெய்வேன் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.
     மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த்.
    அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, நடிகர் ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வரட்டும். இந்து மதத்திற்காக ரஜினிகாந்த் அரணாக இருப்பார் என்றால் அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்றார்.
    வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசாமி தரிசனம் செய்ய வந்தார்.

    இதற்காக திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் ஜீப் தேர்நிற்கும் இடத்தின் அருகில் உட்கார்ந்திருந்த முனுசாமி என்ற முதியவர் மீது லேசாக இடித்ததாக கூறப்படுகிறது.

    இதில் முதியவர் கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கு பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்த சான்றோர் வீதியைச்சேர்ந்த முரளி என்பவர் தட்டிக் கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் முரளியை தாக்கினார். பின்னர் அவரை மட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இதற்கிடையே காயம் அடைந்த முதியவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீசார் சிகிச்சை அளித்து விட்டு அவரை அங்குள்ள சத்திரம் அருகே விட்டுசென்று விட்டனர்.

    போலீஸ் நிலையத்தில் முரளி இருப்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் முரளி விடுவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

    ஆதம்பாக்கத்தில் பெண் குழந்தை காரில் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மனைவி, மகள், 6 வயது பேத்தி  ஆகியோருடன் ராயப்பேட்டை செல்வதற்காக கால்டாக்சி பதிவு செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் கார் வீட்டுக்கு வந்தது.

    அதில் ஜான்சனின் மகள் ரெஜினா மற்றும் 6 வயது பேத்தி உட்கார்ந்திருந்தனர். ஜான்சனும் அவரது மனைவியும் வர தாமதம் ஆனது. எனவே குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு ரெஜினா வீட்டுக்குள் சென்றார்.

    ஜான்சன், அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தபோது கார் இல்லை. காரில் இருந்த 6 வயது பெண் குழந்தையை டிரைவர் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில், குழந்தையை காரில் கடத்திய டிரைவர் பெயர் கார்த்தி என்று தெரியவந்தது. குழந்தையுடன் தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    காரை மடக்கி பிடிப்பதற்காக மற்ற போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டிரைவர் பிடிபடுவார். குழந்தை மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆதம்பாக்கத்தில் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது. இந்த கொள்ளை தொடர்பாக ஐஸ்அவுசை சேர்ந்த தினேஷ், ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார், சாமுவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவால் சென்னை விமான நிலையத்தில் 250 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சீனாவில் பரவி உள்ள ‘கொரோனா’ வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

    சவுதி அரேபியா அரசும் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.

    இந்தநிலையில் சவுதியில் உள்ள மக்கா, மதினாவுக்கு உம்ரா பயணத்துக்கு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 பேர் இன்று மதியம் 12.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

    ஆனால் அவர்கள் சவுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டு பயணிகள் புனித பயணமாக வருவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக மதினாவுக்கு செல்ல முடியாமல் 250 பேரும் சென்னை விமான நிலையத்தில் தவித்தபடி நின்றனர். இதனால் சர்வதேச விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான இரும்பு கடையில் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் முத்துவின் இரும்பு கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கு சுமார் 300 கிலோ எடை உள்ள 6 செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். மேலும், செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், இந்த செம்மரக்கட்டைகள் வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் இருந்து கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதற்டையே செம்மரக்கட்டையை கடத்த பயன்படுத்திய லோடு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சீபுர மின்வாரிய அலுவலகங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள், டியூப் லைட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, ரெயில் நிலைய சாலை, பிள்ளையார்பாளையம் போன்ற இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன.

    இந்த அலுவலகங்கள் அனைத்திலும் மின் நுகர்வோர்களின் வசதிக்காகவும், மின்கட்டண செலவை் குறைத்து, அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகளின் பயனை மக்கள் அறிந்து விழிப்புணர்வு அடையவும், மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள், டியூப் லைட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து மின்வாரிய ஊழியர் கூறியதாவது:-

    எல்.இ.டி. பல்பு (9 வாட்ஸ்) ஒன்றின் விலை தனியார் கடையில் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது.

    அதே பல்பை மானியத்தில் ரூ.70-க்கு விற்பனை செய்கிறோம்.

    எல்.இ.டி. டியூப் லைட் ஒன்று ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தனியார் கடைகளில் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்கிறார்கள்.

    இதேபோல் 50 வாட்ஸ் மின் விசிறி கடைகளில் ரூ.1650 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை நாங்கள் ரூ.1110-க்கு விற்பனை செய் கிறோம்.

    மத்திய அரசின் அங்கீகாரத்துடன் மானிய விலையில் இந்த பொரு ட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளை தாக்கி தங்கம் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவிய 50 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மலேசியா, துபாய், இலங்கையில் இருந்து வந்த பயணிகள் சுங்க அதிகாரிகள் சோதனை முடிந்து வெளியே வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தனர்.

    இதில் 18 பயணிகள் ரூ.5½ கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து 18 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் தங்கம் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் ‘குருவிகள்’ என்பது தெரிந்தது.

    அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு செல்ல விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

    அப்போது அங்கிருந்த கடத்தல்காரர்களின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.

    இதனை சாதகமாக பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்த 18 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அதிகாரிகளை தாக்கிய 50 பேர் கும்பலும் ஓட்டம் பிடித்தனர்.

    இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே தப்பி ஓட்டம் பிடித்த தங்கம் கடத்தல்காரர்களில் 13 பேர் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் தலைமறைவாக உள்ள 8 கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அதிகாரிகளை தாக்கி தங்கம் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவிய 50 பேர் கும்பலை பிடிக்கவும் வேட்டை நடந்து வருகிறது.

    விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து மேலும் நடவடிக்கை எடுக்க மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதற்கு இந்த கும்பலே காரணம் என்று தெரிகிறது. அவர்களை கூண்டோடு பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தி வருபவர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விமான நிலைய 2 சுங்க இலாகா அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந்தேதி காலை சண்டி யாகத்துடன் தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும்.

    அதன் படி இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி காலை சண்டி யாகத்துடன் விழா தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம், காலை வெள்ளி ரிப‌ஷ வாகனம், மாலை தங்கமான் வாகனத்தில் அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதிவுலா நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும் நாள் வரை தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்கள் அருளிபாளிக்கிறார்.

    மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. பிரம்மோற்சவத்தின் 11-ம் நாளான மார்ச் 8-ந் தேதி திருக்கோவில் தெப்பகுளத்தில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் முதலாக பிரம்மோற்சவத்தின் போது தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.

    உள்ளூர் மக்கள் மற்றும் காமாட்சி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நவராத்திரி 9 நாட்கள் மட்டும் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தகவலை கோவில் நிர்வாக அலுவலர் நாராயணன் தெரிவித்தார். அப்போது கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்.வி.குப்பன், கணேசன், ஜீவானந்தம், ஆறுமுகம் உடனிருந்தனர்.
    காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே போலீசார் திருமணம் செய்து வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா(வயது 23). இவரும், பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு, அகத்தீஸ்வரர் நகரைச்சேர்ந்த மெனுவேல் நேசா இனோச் என்ற வெங்கடேஷ் என்பவரும் ஒரு செல்போன் விற்பனை ஷோரூமில் வேலை செய்து வந்தனர்.

    இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிகிறது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஜாலியாக பல்வேறு இடங்களுக்கு சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கவிதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வெங்கடேசை வற்புறுத்தினார். அதற்கு அவர், தனக்கு கடன் உள்ளது. அதனால் இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என மறுத்துவிட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த கவிதா, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணத்துக்கு மறுக்கும் வெங்கடேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வெங்டேசை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது கவிதாவின் உறவினர்கள், போலீஸ் நிலையத்திலேயே அவர் கவிதாவின் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி போலீசார் மற்றும் கவிதாவின் உறவினர்கள் முன்னிலையில் கவிதாவின் கழுத்தில் வெங்கடேஷ் தாலி கட்டினார். போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த திருமண வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    சென்னை விமான நிலையம் அமையும் வரைபடம் வெளியான விவகாரத்தில் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து காஞ்சீபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் காஞ்சீபுரம் தாலுக்கா பரந்தூர் பகுதியில் 4500 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்கு ஏற்றதாக இருப்பதாக தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் குறித்து நிலஅளவை துறையினர் வரைபடம் ஒன்றை தயாரித்து வருவாய் துறையினரிடம் கொடுத்து இருந்தனர்.

    பாதுகாப்பாக வைக்கப்பட்ட வேண்டிய அந்த வரைபடம் பொதுமக்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியது. இதனால் அதிருப்தியடைந்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வரைபடத்தை கசிய விட்டதாக நில எடுப்பு தாசில்தார் கருணாகரனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×