என் மலர்
காஞ்சிபுரம்
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள், கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசு பூங்கா உள்ளது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் அணிந்த பணியாளர்கள் கிருமிநாசினி வழங்குகின்றனர். டிக்கெட் பெறும் இடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் பூங்கா உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அங்கு வந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கர்நாடக அரசு பூங்காவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு டிக்கெட் பெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் கை வைக்கும் பகுதிகள் மற்றும் குடிநீர் வழங்கும் எந்திரத்தில் இருந்த 2 டம்ளர்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தார். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காய்ச்சல், இருமல் இருந்தால் எல்லை சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சொகுசு பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. அம்மாநில அரசு சுகாதாரத்துறையினர் மற்றும் நீலகிரி எல்லையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் கூட்டம் நடத்த வயநாடு மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் முரளிசங்கர், தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுந்தர்ராமன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர் தனது நண்பரான செங்கல்பட்டு முல்லை நகரை சேர்ந்த கோகுல் ஆனந்தம் (57) என்பவரின் காரில் பணி நிமித்தமாக காஞ்சீபுரம் சென்று விட்டு மீண்டும் வாலாஜாபாத் வழியாக மதுராந்தகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
காரை கோகுல் ஆனந்த் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல் ஆனந்தம் காயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த கோகுல் ஆனந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. 39-வது கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். போலியான ரசீதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம்.
292 சரக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 24 பொருட்கள் மீதான வரி முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 42 பொருட்களின் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.

அரசியல் என்பது ஒரு சமுத்திரம். ரஜினி முதலில் அதில் குதிக்கட்டும். அப்போது அவரைப்பற்றி கருத்து சொல்கிறோம். அரசியலில் இல்லாத ரஜினியை பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்? அரசியலில் இல்லாத ரஜினியும், கமலும் எப்படி இணைய முடியும்? அது ஒரு அனுமானம். மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய மக்களுக்கான அரசுதான் அ.தி.மு.க.
ரஜினியை பொறுத்தவரை அ.தி.மு.க.வை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. அதனால் எதையும் கூற முடியாது. ரஜினி அவருடைய கொள்கை, லட்சியத்தை கூறுவதில் தவறில்லை.
மு.க.ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் ஒரு கிராபிக்ஸ். சிகப்பு கம்பளம், ஷுவோடு நடப்பவர்தான் ஸ்டாலின். வெறும் காலோடு நடந்து செல்பவர்தான் தமிழக முதல்-அமைச்சர்.
2011, 2016 ஆண்டுகளில் எப்படி அ.தி.மு.க அரசு அமைந்ததோ அதேபோல் 2021-ம் ஆண்டும் அ.தி.மு.க. அரசு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் அவரை அனுப்பி விட்டனர்.
பின்னர் அவருக்கு காய்ச்சல், இருமல் வைரஸ் அறிகுறி இருந்ததால் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியல் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனே ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இதுதான் முதல் பாதிப்பாக கருதப்பட்டது. தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு மீண்டும் ரத்த மாதிரி எடுத்து வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு மருத்துவமனையில் எடுத்த பல்வேறு சோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருந்தது. அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தாலும் முறையான ஆய்வுக்கு பிறகுதான் தெரிவிக்க வேண்டும்.
என்ஜினீயருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மீண்டும் கிண்டி கிங் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.
இரவில் வந்த பரிசோதனை முடிவில் அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி இருப்பது தெரிய வந்தது. 2-வது முறையாகவும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவிலும் ‘நெகட்டிவ்’ என முடிவு உறுதியானது.
2 சோதனையிலும் அவர் குணமாகி விட்டதாக உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புகிறார்.
இதுகுறித்து மருத்துவ மனையின் டீன் ஜெயந்தி கூறுகையில், “என்ஜினீயருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் குணமாகி விட்டதாக முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஓரிரு நாட்களில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார். தற்போது அவர் நன்றாக உள்ளார்” என்றார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரும் தற்போது குணமாகி விட்டார். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வெளிநாட்டு விமானங்களில் போதிய பயணிகள் இல்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்லும் 10 விமானங்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை 9 மணி அளவில் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு சுகாதார ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது.
இதையடுத்து அவரை பாதுகாப்பாக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவரது சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு இருக்கிறது. பரிசோதனை முடிவிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும். அவரை தனி வார்டில் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக குவைத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவர் திரும்பி வந்த போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவருடன் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் செல்லும் சாலையில் நேற்று காலை ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது.
அப்போது காரை பின் தொடர்ந்து ஒரு புல்லட் பைக் வேகமாக வந்தது. பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென காரை வழிமறித்து அதில் இருந்த 3 வாலிபர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
இதனால் காரில் வந்த 3 பேரும் பயந்து வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர். பின்னர் பைக்கில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் காரை கடத்தி சென்றான்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொது மக்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
காரில் இருந்து தப்பி ஓடிய 3 பேரும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.? அவர்கள் யார்? கடத்தப்பட்டார்களா? ரவுடி கும்பலா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
ஓமன் நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என 22 பேருக்கு காஞ்சிபுரம் சுகாதாரதுறை சார்பில் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவர்களும் கண்காணிக்கப்பில் இருந்து வருகின்றனர்.
என்ஜினீயர் வீடு இருந்த தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக காஞ்சிபுரத்தில் முக கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மருந்து கடைகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் முக கவசங்களை கூடுதலாக கேட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் சில மருந்து கடைகளில் எண்-95 வகை முக கவசம் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை நலபணிகள் துணை இயக்குனர் பழனி கூறியதாவது:-
காஞ்சிபுரம் நகர் முழுவதும் சுகாதார பணியாளர் குழு அமைத்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை எடுத்து கூறி வருகின்றனர்.
பள்ளி மாணவ-மாணவிகள் இடையே கைகழுவும் செயல்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சைலேஷ் வரராவ் (20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த போது நண்பர்களுடன் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி சைலேஷ் வரராவ் பரிதாபமாக உயிரிழந்தார்,
மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் பிரகாஷ் (24) ரிசார்ட் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடிந்து வீடு செல்லும் போது பூச்சேரி டோல்கேட் அருகே நிறுத்தி வைத்தப்பட்டிருந்த லாரி அருகே படுத்து தூங்கினார். அப்போது டிரைவர் லாரியை எடுத்த போது பிரகாஷ் டயரில் சிக்கி உடல் நடங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
மஸ்கட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு என்ஜீனியர் பற்றிய தகவல்களை சுகாதாரத்துறையினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். என்ஜீனியரின் குடும்பத்தினரை மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்புக்குள்ளான இளைஞரின் குடும்பத்தினர் 19 பேரை சுகாதார துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருணாகரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). விவசாயி. இவர் அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை விவசாய வேலைகளை கவனிக்க வயல் வெளிக்கு சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. அதை கவனிக்காமல் ஞானவேல் மின்சார வயரை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஞானவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.






