என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற 100-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் காசியில் தவித்து வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை திருவேற்காடு, ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 14 பேர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வட மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு காசிக்கு திரும்பி வந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்பி வர முடியவில்லை.

    அனைவரும் காசியில் உள்ள குமாரசாமி மடத்தில் தங்கி உள்ளனர். இதே போல் பெரம்பலூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் காசிக்கு சுற்றுலா வந்து வெளியில் செல்ல முடியாமல் அதே மண்டபத்தில் தங்கி உள்ளனர்.

    வெளியே எங்கும் செல்ல முடியாததால் அவர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்கள். இது தொடர்பாக காசியில் சிக்கி இருக்கும் மல்லிகா என்பவர் கூறும்போது, ‘காசிக்கு சுற்றுலா வந்து நாங்கள் சிக்கிக்கொண்டோம். நாங்கள் சொந்த ஊர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு ஒரு அறையின் வாடகை ரூ. 600 ஆகும். இங்கு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என்றார்.
    கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    திருப்போரூர்:

    கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கதிரவன்- நெடுங்குன்றத்தை சேர்ந்த காத்திகா மற்றும் திருவான்மியூரை சேர்ந்த ஆகாஷ்-ஈஞ்சம்பாக்கம் ஜெனனி பிரியா ஆகிய இரண்டு ஜோடிகள் திருமணம் நடந்தது.

    திருமண ஜோடியை தவிர ஒரு ஜோடிக்கு தலா 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த திருமணத்தை போலீசாரும், சுகாதார அதிகாரிகளும் கண்காணித்தனர்.

    நாளை மறுநாள் இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்ய முன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதார கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள 154 பேர் மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்க்கும் 24 வயது வாலிபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கல்பாக்கம் அணுசக்தித்துறை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை தனிமைப்படுத்தி முழு பரிசோதனை செய்து வருகிறார்கள். பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பது தெரிய வரும்.

    இதற்கிடையே அவரது குடும்பத்தினரை பாதுகாப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த தகவலை அணுசக்கி மருத்துவ பிரிவு தலைவர் பட்டாச்சார்ஜி தமிழக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

    இதனால் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அணுசக்தி நகரிய குடியிருப்புக்குள் வெளிநபர்கள் மற்றும் வெளி வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து கேட்டுகளும் மூடப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் மது பார்கள் மூடப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற பகுதிகள் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்றி அப்பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

    இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் மது பார்கள் மூடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவுசெய்தவர்கள் சிலர் அறைகளை கேன்சல் செய்து வருகிறார்கள். அவர்களிடம் ரிசார்ட்டு நிர்வாகம் கேன்சலிங் சார்ஜ் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

    கொரோனா பயம் இல்லாத சில சுற்றுலா பயணிகள் ஆன்லைன் பதிவை கேன்சல் செய்யாமல் வந்து ரிசார்ட்டுகளில் அறைகளை கேட்கிறார்கள். ரிசார்ட் நிர்வாகம் அறை கொடுக்க மறுப்பதால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    பாலாற்றங்கரை பகுதியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்தவாயலூர் பாலாற்றங்கரை பகுதியில் நேற்று மாலை 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? யாரேனும் கொலை செய்து பிணத்தை பாலாற்றில் கொன்டுவந்து வீசினரா? என்ற கோணத்தில் சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொரோனா பீதி காரணமாக பட்டு சேலை விற்பனை கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பட்டு சேலை விற்பனையின் வீழ்ச்சி காரணமாக கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டு உலகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரம் நகரில் அரசு மற்றும் தனியார் பட்டு ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பட்டு சேலை வாங்கி செல்வது வழக்கம்.

    காஞ்சிபுரம் காமராஜ் சாலை, நடுத்தெரு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக பட்டு சேலை விற்பனையகங்கள் உள்ளன. முகூர்த்த நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் கோடிக்கணக்கில் பட்டு வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரத்திற்கு வரும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது.

    இதனால் பட்டு சேலை விற்பனை கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பட்டு சேலை விற்பனையின் வீழ்ச்சி காரணமாக கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து நடுத்தெருவில் இயங்கிவரும் பட்டு சேலை விற்பனையகத்தின் வியாபாரி ஒருவர் கூறும்போது, காஞ்சிபுரத்தில் தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காணோர் பட்டுசேலை வாங்கி செல்வர்.

    தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும். முகூர்த்த நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும். கொரோனா பீதி காரணமாக கடந்த சில நாட்களாக விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்ககள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் - வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த 6 வழி சாலைகளில் படப்பை பகுதியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை வழியாக, காஞ்சீபுரம், வேலூர், தாம்பரம், சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கிறது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் நாள்தோறும் ஏராளமானோர் பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். அங்கு நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். பஸ்சுக்காக நிற்கும்போது ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் பொதுமக்கள், முதியோர்கள், மாணவர்கள், மற்றும் கைக் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் உள்பட அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

    இந்த பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் நிற்பதற்கு நிழற்குடை இல்லாமல் இருப்பதால் சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் நின்று பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே படப்பை பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக கொரியநாட்டை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், இவருடைய மகன் மோகன், (வயது 22). இவர் நேற்றுமுன்தினம் மாத்தூர் பகுதியில் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே சாலையில் எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மோகன் கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த மோகனை மீட்டு, சிகிச்சைக்காக வல்லக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் கொரிய நாட்டை சேர்ந்த ஜாக்கூ,(வயது 59) என்பதும், இவர் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்கு காரணமானவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று இழப்பீடு வேண்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இழப்பீடு தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கொரிய நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிமாநில பகுதிகளுக்கு தர்பூசணி எடுத்து செல்வது தடைபட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகி உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், எச்சூர், வள்ளிபுரம், கூவத்தூர், பட்டிக்காடு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோடை கால அறுவடையாக தர்பூசணி பயிரிட்டிருந்தனர்.

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிமாநில பகுதிகளுக்கு பழம் எடுத்து செல்வது தடைபட்டுள்ளது. சென்னை பகுதியில் மட்டுமே விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் குறித்த காலத்தில் அறுவடை செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. செடிகளிலேயே தர்பூசணி அழுகி வருகின்றது.

    இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகி உள்ளது. ஒரு டன் தர்பூசணி 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் தற்போது ரூ.20 ஆயிரத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், பட்டர் பால் போன்ற புராதண சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும், பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், பட்டர் பால் போன்ற புராதண சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு வந்த சுற்றுலா பயணிகள் சிற்பங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள உணவகங்கள், இளநீர், குளிர்பானம், மோர் வியாபாரிகள், மற்றும் சிற்பங்கள் செதுக்கும், சிற்பி, சங்கு விற்பவர்கள் வியாபாரம் இன்றி பாதிப்படைந்தனர். சாலையோர வியாபாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிந்துள்ளனர்.

    ஐந்துரதம் பகுதியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கொரோனா தாக்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் கண்காணிப்பு அதிகாரி திருப்புகழ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் சுனில் தத், விமான நிலைய பொது மேலாளர்கள் தீபக், பாலன் உள்பட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிலைய மருத்துவ குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்துக் கொண்டு இருந்தனர்.

    மத்திய அரசின் அறிவுரை பேரில் விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து தமிழக பொது சுகாதார துறை டாக்டர்கள் பரிசோதனை பலப்படுத்தப்பட்டு உள்ளது. நவீன கருவிகளுடன், கைகளை சுத்தம் செய்ய கூடிய கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக பொது சுகாதார துறை மற்றும் விமான நிலைய மருத்துவ குழு இணைந்து 100 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு செய்யப்படுவதால் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உள்ளது.

    முதலமைச்சர் விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். மாநில பேரிடரில் இருந்து ரூ. 60 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார். எல்லா துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் உலக அளவில் அவசர நிலை நோய்யாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார துறை முலமாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளதால் சட்டப்பாதுகாப்பு எடுக்க உதவியாக இருக்கும்.

    கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றனர். வரும் 15 தினங்களுக்கு மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

    கன்னியாகுமரி, தேனி, கோவை உள்பட 16 மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் உடல்நலம் தேறி வருகிறார். 2 தினங்களில் வீடு திரும்புவார். தற்போதைக்கு தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை உள்ளது.

    மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது. வெளிநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்படும். வருங்காலத்தில் அது போல் பதட்டத்துடன் வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

    ஒரு நாளுக்கு 100 ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். தமிழகம் முழுவதும் 4 பரிசோதனை கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    தாம்பரத்தில் சிகிச்சை அளிக்க கூடிய மையம் தயாராகி வருகிறது. திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளிலும் சிகிச்சை மையங்கள் சிறப்பாக உள்ளது.

    சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை பொது சுகாதார துறை முலம் எடுக்கப்படும். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×